

நம் உடலில் நீர்ச்சத்தை சமநிலையில் வைத்துப் பராமரிக்க, உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஒரு பானம் பிளைன் வாட்டர். அறிவாற்றல் வளர, ஜீரணம் சிறப்பாக என உடலின் பலவகையான செயல்பாடுகளுக்கு நீர்ச்சத்து உதவி புரியும். நாள் முழுக்க உடலில் நீர்ச்சத்து குறையாமலிருக்க தண்ணீர் குடிப்பதும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உடகொள்வதும் அவசியம். இரவு முழுவதும் உண்டாகும் நீரிழப்பை சமன் செய்ய, காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பிளைன் வாட்டர் குடிப்பது நலம். அது எவ்வாறு செயலாற்றுகிறது என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
1. நீரிழப்பை சமன் செய்து நாள் முழுவதும் சக்தியுடன் அறிவுத் திறன் கொண்டு செயல்பட உதவுவது தண்ணீர். நீர்ச்சத்து செல்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, மெட்டபாலிஸ ரேட்டை அதிகரிக்கச் செய்யும். இதனால் இதய இரத்த நாளங்கள் சுறுசுறுப்படையும். மனநிலை மேன்மையுற்று அறிவாற்றல் பெருகும். கவன ஈர்ப்பு, ஞாபக சக்தி போன்ற மூளையின் செயல்பாடுகள் அனைத்தும் மேன்மை பெறும். உடலில் நீர்ச்சத்து குறையும்போது மன அழுத்தம், வருத்தங்கள் போன்ற குறைபாடுகள் தென்படுவதற்கான அறிகுறிகள் தோன்றுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
2. காலையில் தண்ணீர் குடிப்பது, இரைப்பை குடல் இயக்கங்களை சீராக்கும். மலச்சிக்கல் நீங்கி, கழிவுகள் சுலபமாக வெளியேற உதவும்.
3. நம் உடலின் கட்டமைப்பில் சுமார் 60 சதவிகிதம் நீர்ச்சத்தாகும். உடலியல் செயல்பாடுகள் சிறப்புற நடைபெறுவதற்கு போதுமான அளவு நீர்ச்சத்து தேவை.
4. உண்ணும் உணவுகளை உடைத்து, ஊட்டச் சத்துக்களை செல்களுக்கு அனுப்புவது, ஆக்ஸிஜனை செல்களுக்கு அனுப்பி அவற்றின் செயலாற்றலை மேம்படுத்துவது, உடலின் உட்புற உஷ்ணத்தின் அளவை சமநிலைப்படுத்தி உடலை குளிர்விப்பது, கண், மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளின் திசுக்களை ஈரப்பசையுடன் வைத்துப் பராமரித்தல், முக்கிய உள்ளுறுப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் எலும்புகள் உராய்வின்றி ஆரோக்கியமுடன் செயல்படுவது போன்ற உடலின் பல வகையான வேலைகளுக்கும் நீரே ஆதாரம் என்றால் அது மிகையல்ல.
5. நாம் இரவில் உறங்கும்போது நீண்ட நேரம் தண்ணீர் அருந்துவதில்லை. ஆனால், வியர்வை, சிறுநீர் உற்பத்தி மற்றும் வெளிவிடும் மூச்சுக் காற்று போன்ற வழிகளில் உடலின் நீர்ச்சத்து குறைவதுண்டு. ஆகையால், காலையில் எழுந்த உடன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் உடல் சோர்வுற்று மந்த நிலையடைவதைத் தடுக்கலாம். காலையில் எழுந்ததிலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் உடலை நீரேற்றம் நிறைந்ததாகச் செய்வதே ஆரோக்கியம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
6. உடலின் நீர்த் தேவை, தனி மனித எடை, செயல்பாடுகளின் அளவு, நிலவும் சீதோஷ்ணம் போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடும். பொதுவாக, பெண்கள் ஒரு நாளைக்கு 11.5 கப் மற்றும் ஆண்கள் 15.5 கப் தண்ணீர் அருந்த பரிந்துரைக்கப்படுகிறது.
தண்ணீரை வெறுமனே குடிக்கப் பிடிக்காதவர்கள் அதில் வெள்ளரிக்காய், புதினா, வெட்டிய எலுமிச்சை துண்டுகள் ஆகியவற்றில் ஏதாவதொன்றை போட்டு இன்ஃப்யூஸ் பண்ணி குடிக்கலாம். 85 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்த தக்காளி, ஆரஞ்சு, வாட்டர் மெலன் போன்ற பழங்களை உணவுடன் சேர்த்து அடிக்கடி உட்கொள்ளலாம். இவை நீர்ச்சத்துடன் வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்களையும் தர வல்லவை. உடலை நீரேற்றமுடன் வைத்துப் பாதுகாத்தல் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம்.