

அந்த காலத்தில் சமையலறைகளில் குறிப்பிட்ட ஒரு நான்கு பாத்திரங்கள் மட்டுமே சமைப்பதற்கு என்று இருக்கும். அதிலும் இரும்பு சட்டிகளும், மண் சட்டிகளும் அதிக அளவில் இருந்திருக்கும். ஆனால் தற்போது விதவிதமான மெட்டல் வகைகள் நம் சமையலறையை பாத்திரங்களாக அலங்கரிக்கின்றன.
நடுவில் விலை மலிவான அலுமினியம் பாத்திரத்தில் சமைத்தால் உடலுக்கு கெடுதலா என்ற கருத்துக்கள் உண்டு என்பதால் பெரும்பாலும் அலுமினிய பாத்திரங்களை சமையலுக்கு தவிர்ப்பதும் உண்டு. சரி பழையதாகி விட்ட பாத்திரங்களை அகற்றிவிட்டு புதியதாக சமைக்க பாத்திரங்கள் வாங்கும் நிலையில், என்ன மாதிரி பாத்திரங்கள் வாங்கி சமைத்தால் அது நமது உடலுக்கு ஆரோக்கியம் என்று அலசி ஆராய்வோம்.
இதோ உங்களுக்காகவே இந்த 4 டாப் குக் வேர் (Cookwares) பற்றிய தகவல்கள்..
1. முதல் இடத்தில் இருப்பது அன்றும் இன்றும் என்றும் மண்பாண்டங்களே (Eearthware vessels) என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 100 சதவிகிதம் இயற்கையான சமைக்கும் பாத்திரமாக விளங்கும் இதில் உள்ள மைக்ரோபோரஸ் (Microporous) எனப்படும் நுண் துளைகள் உணவை ஆரோக்கியமாக சமைப்பதற்கு உதவுகிறது.
மேலும் இன்சுலேஷன் ப்ராபர்டி (Insulation property) எனப்படும் நிலை வெப்பம், குளிர்ச்சி ஆகியவற்றை அதிக நேரம் மண்பாண்டங்களில் தக்க வைக்க உதவுகிறது. சமைப்பதற்கு அதிக நேரம் எடுப்பதால் உணவில் உள்ள கால்ஷியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும்.
இந்த மண்பாண்டங்கள் சற்று கனமாக இருப்பதால் கையாளுவதில் கவனம் தேவை. அத்துடன் புதியதாக சமைக்கும் போது துளைகள் அடைபடும் வரை அதிகம் எண்ணெய் குடிக்கும் என்பதாலும் நேரமின்மை காரணமாகவும் இதை தவிர்க்கிறார்கள். ஆனால் பழகி விட்டால் குறைவான எண்ணெயுடன் நமது மண்வாசனை மணக்க தயாரிக்கும் உணவுகள் ஆரோக்கியத்துடன் ருசியாகவும் இருக்கும்.
2. Cast iron vessels எனப்படும் வார்ப்பு இரும்பு பாத்திரங்கள் சமையலுக்கு உகந்ததாக உள்ளது. காரணம் தற்போது அதிக பெண்களுக்கு இரும்பு சத்து குறைபாடு பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த இரும்பு பாத்திரத்தின் மூலம் சமைப்பதால் இதில் உள்ள இரும்பு சத்து உணவில் கலந்து உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
இந்த வார்ப்பு இரும்புக்கும் சாதாரண இரும்புக்கும் உள்ள வித்தியாசம் வார்ப்பில் கார்பன் 96 சதவீதமும் இரும்பு சிறிய சதவீதம் தயாரிப்பதே. வெறும் இரும்பு பாத்திரங்களில் உள்ளே அலுமினியமும் மேலே இரும்பு கோட்டையும் கொடுத்து தயாரித்திருப்பார்கள். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் காலம் காலமாக அடுத்த தலைமுறைக்கு உதவுவது இந்த வொர்க் ஹார்ஸ் (Work Horse) என சொல்லப்படும் வார்ப்பு இரும்பு பாத்திரங்களே. மேலும் அனைத்து விதமான சமையலையும் செய்ய இது உதவுகிறது. சூடு தங்கவும் சத்துக்கள் சேரவும் உதவுகிறது.
3. ஃபுட் கிரேட் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் (Food Grade Stainless steel) சாதாரணமாக அனைத்து சமையல் அறைகளிலும் இடம் பிடிக்கும் இந்த எவர்சில்வர் பாத்திரங்கள் பாத்திரங்களில் சமைக்கும் போது ஆரோக்கியமும் சீராக இருக்க உதவுகிறது. காரணம் அயர்ன், நிக்கல், குரோமியம் ஆகிய கலவைகள் கலந்த இந்த பாத்திரங்களில் சமைக்கும் போது குரோமியம் ஆக்சைடு (Chromium Oxide) ஒரு லேயராக படிந்து நமது ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
இந்த குரோமியம் 14 முதல் 18% வரை இருப்பதால் எளிதில் துருப்பிடிக்காது. பராமரிக்கவும் எளிது. அனைத்து விதமான சமையலையும் சுவையுடன் செய்ய உதவும். இதில் பாக்டீரியாக்களும் நிச்சயமாக அண்டாது. ஆனால் நாம் எப்படி இந்த ஃபுட் கிரேட் அளவை அறிந்து கொள்வது என்றால் அந்த பாத்திரங்களின் கவர்மேல் 300 அல்லது 400 என்ற எண்களின் சீரியல் நம்பர் இருந்தால் அது ஃபுட் கிரேட் பாத்திரங்கள் என்பதை அறியலாம்.
4. பீங்கான் அதாவது செராமிக் அண்ட் கிரானைட் வெஸல்ஸ் (Ceramic & Granite vessels) இன்றும் பீங்கான் பாத்திரங்களையே ஊறுகாய் போட பயன்படுத்துவோம். காரணம் எளிதில் உணவுகள் கெடாது என்பதால். இதில் 100 சதவிகிதம் பீங்கான் பாத்திரத்தில் நமது சமையலை செய்வது ஆரோக்கியமானது தான். ஆனால் அப்படி கிடைப்பது மிகவும் கஷ்டம். மேலும் அதிக கனத்துடனும், விலை அதிகமாகவும் மட்டுமின்றி எளிதில் உடைய கூடியதாகவும் இருப்பதால் இதை பலர் அதிகம் விரும்புவதில்லை. அதேபோல் பீங்கான் அலுமினியம் மேல் கோட்டிங் கொண்ட போலி பாத்திரங்களும் சந்தையில் கிடைப்பதால் அதில் கவனம் நிச்சயம் தேவை. ஏனெனில் நாள்பட நாள்பட கோட்டிங் நீங்கி உணவுகளில் அலுமினியம் கலந்து விடும் வாய்ப்பு உள்ளது.
நமது வசதிக்கேற்ப இவற்றில் நாம் தேர்வு செய்து வாங்கலாம். என்னதான் இவைகள் அனைத்தும் ஆரோக்கியமான சமையலுக்கு உதவுகிறது எனினும் இவற்றை சுத்தமாக கழுவி பராமரித்துப் பயன்படுத்த வேண்டியது நமது பொறுப்பு.
