
வாழ்க்கையில் ஒரு நோக்கம் வேண்டும். அது இல்லாமல் ஏனோதானோ என்று இருக்கக் கூடாது. உங்களுக்குள்ளேயே ஒரு வட்டம் போட்டு வாழ்க்கையை வாழாதீர்கள். உடற்பயிற்சி, தியானம் செய்து உடலை பாதுகாப்பாக வைத்திருங்கள். ஒரு நாளைக்கு பத்து முறையாவது சிரியுங்கள். சொத்து, தங்கம் மற்றும் பணத்தை நினைத்து டென்ஷன் ஆகாதீர்கள். வாரம் ஒரு முறையாவது குடும்பத்துடன் அருகில் இருக்கும் கோயில்களுக்குச் செல்லுங்கள். வீட்டுக்குள்ளேயே இருந்து வாழ்க்கையை கழிக்காதீர்கள். அப்படிக் கழித்தால் பிற்காலத்தில் உதவிக்கு யாரும் வராமல் மன நோயாளியாக ஆக நேரிடும்.
எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள். விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். உறவினர்களை தங்களது வீட்டுக்கு வரச் சொல்லி முழு மனதுடன் அழைப்பு விடுங்கள். நண்பர்கள் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களைப் பார்த்தால் புன்னகை செய்து குடும்ப நலன்களை விசாரியுங்கள்.
‘நான் பெரிய ஆள். எனது கட்டளைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்’ என்ற எண்ணத்தை கைவிடுங்கள். இல்லையேல், உங்கள் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், வேலையாட்கள் உங்களுடன் போலியாகத்தான் பழகுவார்கள்.
வங்கியில் பணத்தை சேர்த்து வைத்தாலும் முடிந்த அளவு தான தர்மம் செய்து புண்ணியத்தை சேர்க்க பழகிக் கொள்ளுங்கள். இந்த வீடு, சொத்து, கார், தொழில், பணம், செல்வாக்கு, உடன்பிறந்தவர்கள், சொந்தங்கள், வேலை ஆட்கள், அதிகாரம், பதவி என அனைத்தும் உங்களுடன் கடைசி வரை வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
‘இன்னும் சில நொடி, சில நிமிடம், சில நாட்கள், சில மாதம், சில ஆண்டுகளில் இந்த பூமியை விட்டுப் போய் விடுவோம்’ என்ற எண்ணத்தில் வாழப்பழகுங்கள். இந்த ஆன்மா பூமிக்கு வந்த நோக்கம் தெரிந்து சிந்தித்து செயல்படுங்கள். இது அனைவருக்கும் பொருந்தும்.
வாழ்க்கை என்பது கடல் போன்றது. மிகவும் அது ஆழமானது. பரந்து விரிந்தது மற்றும் நிலையற்றது. கடலில் அலைகள் போல வாழ்க்கையிலும் இன்ப, துன்பம், ஏற்றத்தாழ்வு மாறி மாறி வரும். வாழ்க்கை பயணத்தில் நாம் பலவிதமான அனுபவங்களை சந்திக்கிறோம். அது கடலைப் போல பல்வேறு தன்மைகளைக் கொண்டது. வாழ்க்கைக் கடலை அனுபவித்துக் கடந்து, இறைவனின் பாதங்களை சந்தோஷமாக அடைந்து விடுவதே மனிதப் பிறப்பின் நோக்கமாகக் கொண்டு வாழப் பழகுங்கள்.