நாம் சமையலை ஆரம்பிப்பதற்கு முன்பு, தேவையான காய்கறிகளை ஒரு மரத்தாலான பலகை மீது வைத்து நறுக்கி (Chopping) எடுப்பது வழக்கம். இப்பலகை ஒரு முக்கியமான சமையலறை உபகரணம் ஆகும். அந்த மரப்பலகையை நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துப் பராமரிக்க வேண்டியது அவசியம். அப்படிச் செய்யவில்லையெனில் அதிலிருக்கும் ஆபத்து நம் குடும்பத்தின் அனைத்து நபர்களின் ஆரோக்கியத்தையும் சீர் குலைத்து விடும்.
பொதுவாக, மரச் சாமான்கள் ஈரத்தை உறிஞ்சிகொள்ளும் குணம் கொண்டவை. தக்காளி, சிக்கன், இஞ்சி, பூண்டு போன்ற உணவுப் பொருள்களை மரப்பலகை மீது வைத்து நறுக்கும்போது அதன் ஜூஸ், ஆயில் போன்ற திரவங்கள் வெளியேறி பலகைக்குள் உறிஞ்சப்பட்டுவிடும். நம் நாட்டு கதகதப்பான சூழ்நிலை பலகைக்குள் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் தோன்றி வளர உதவி புரிவதாகிவிடும்.
நீண்ட நாட்கள் தொடர்ந்து இப்பலகையை உபயோகித்து வரும்போது அதில் சிறு சிறு கீறல்கள், ஓட்டைகள் உண்டாக வாய்ப்பாகும். பிறகு அவை சல்மோனெல்லா, ஈ கோலி, லிஸ்டேரியா போன்ற தீங்கிழைக்கும் நோய்க் கிருமிகளின் வசிப்பிடமாக மாறிவிடும்.
இக்கிருமிகள் நம் உணவுகளை மாசடையச் செய்து உணவு வழி நோய் பரவ வகை செய்துவிடும். மேலும், அப்பலகையிலிருந்து சிறு சிறு மரத் துகள்கள் பிரிந்து உணவுடன் உடலுக்குள் செல்லும்போது ஜீரணப் பாதையில் கீறல்கள் மற்றும் அசௌகரியங்களை உண்டுபண்ணக் கூடும். இதுவே வார்னிஷ் செய்யப்பட்ட பலகையாயிருந்தால் இரசாயனம் உள்சென்று உடலுக்குள் நச்சுக்கள் உருவாகவும் வாய்ப்பாகும்.
இதுபோன்ற பலகைகள் முறையாக சுத்தப்படுத்தப்படாவிட்டால், இரைப்பை குடல் பாதையில் நோய்க் கிருமிகள் புகுந்து காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, டீஹைட்ரேஷன், குமட்டல் போன்ற நோய்களின் அறிகுறிகளைக் காட்ட ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் இந்நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம்.
ஈரத்தன்மை கொண்ட சமையலறையில் வைக்கப்பட்டிருக்கும் பலகையில் எளிதாக, பூஞ்சைகளை உருவாக்கும் மோல்ட் தோன்ற ஆரம்பிக்கும். முடிவில் இது சுவாசப் பாதை கோளாறுகள் மற்றும் ஓவ்வாமை போன்ற நோய்கள் உண்டாகக் காரணமாயிருக்கும் மைக்கோடாக்ஸின் (Mycotoxin) என்றொரு கூட்டுப் பொருளை உற்பத்தி பண்ணும். முறையான சுகாதாரத்தை பின்பற்றாமல் ஒரே பலகையில் மீன், இறைச்சி, காய்கறி வகைகளை நறுக்கும்போது தீமை தரும் நுண்ணுயிரிகள் ஒன்றிலிருந்து மற்ற உணவுக்குள் பரவிப் பெருக வாய்ப்பாகிவிடும்.
சாதாரண மரப்பலகைக்குப் பதில் மூங்கிலால் ஆன பலகையை உபயோகிப்பது ஆரோக்கியம் தரும். மூங்கில் ஈரத்தை உறிஞ்சாது. அதனால் கிருமிகளின் உற்பத்தி தடுக்கப்படும். ஈக்கோ ஃபிரண்ட்லியான மூங்கில் நீண்ட நாள் உழைக்கவும் செய்யும். கண்ணாடியிலான போர்டை கழுவி சுத்தப்படுத்துவது சுலபம். சமைத்த மற்றும் மென்மையான உணவுப் பொருட்களை இதில் வெட்டலாம்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போர்டு சமீபமாக பிரசித்தி பெற்று வருகிறது. இது பிரச்னை ஏதுமின்றி, எல்லா வகையிலும் ஒத்துப்போகக் கூடியதாக உள்ளது. இது ஒரு ஆறுதல் அளிக்கும் செய்தி!