ஹெலிகாப்டர் குழந்தை வளர்ப்பு என்பது அதிகப்படியான பாதுகாப்பு மற்றும் மிகவும் ஈடுபாடு கொண்ட பெற்றோருக்குரிய பண்பை குறிக்கிறது. ஹெலிகாப்டர் சுற்றுவது போல் இந்த பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இந்தப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பற்றி அதிகமாக கவலைப்படுவதுடன் அதிகமாக பாதுகாக்கவும் செய்கிறார்கள். பிள்ளைகளின் ஒவ்வொரு விஷயத்திலும் சுதந்திரமாக செயல்பட விடாமல் தலையிடுவது குழந்தைகளுக்கு கண்டிப்பாக நன்மையை விளைவிக்காது.
குழந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் பள்ளிப்பணிகளில் அதிக கவனம் செலுத்தி அவர்களை ஏமாற்றத்திலிருந்தும், வலியிலிருந்தும் பாதுகாப்பதாக எண்ணி அவர்களின் ஒவ்வொரு அம்சத்திலும் மைக்ரோ மேனேஜ் செய்வதுமாக இருப்பார்கள். இந்த தீவிர கவனம் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தையும், பிரச்னைகளை சமாளிக்கும் திறனையும், அவர்களுடைய பர்சனாலிட்டியையும் கட்டாயம் பாதிக்கும்.
ஹெலிகாப்டர் பெற்றோர்கள் சாதாரணமான பெற்றோர்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது பிள்ளைகளின் வாழ்க்கையில் அதீத கட்டுப்படுத்துதல், அதிகப்படியான பாதுகாப்பு போன்றவற்றை கொண்டுள்ள அதிக பொறுப்பான பெற்றோராக திகழ்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் வெற்றிகளுக்கும், தோல்விகளுக்கும் அதிகப்படியாக பொறுப்பேற்கிறார்கள். அத்துடன் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் மிகவும் ஈடுபாடு கொண்டிருப்பதில் பெருமிதமும் அடைகிறார்கள். இதில் எந்த தவறும் இருப்பதாக அவர்கள் எண்ணுவதுமில்லை.
சிறு வயதில் குழந்தைகளுடன் எப்போதும் இருப்பதும், விளையாடுவதும், அவர்களின் நடத்தைகளை வழிநடத்துவதும் என செய்வது தவறில்லை. அதுவே பிள்ளைகள் நன்கு வளர்ந்து சுயமாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரத்தில் அவர்களை அதிகம் கட்டுப்படுத்துவது என்பது தவறான செயல்.
ஹெலிகாப்டர் பெற்றோர் என்ற சொல் முதன் முதலில் டாக்டர் ஹெய்ம் ஜினோட்டின் 1969ம் ஆண்டு புத்தகமான ‘பிட்வீன் பேரண்ட் அண்ட் டீனேஜர்’ல் பயன்படுத்தப்பட்டது. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பெண் தனது தாய் ஹெலிகாப்டரை போல அவரை கண்காணித்ததாகக் கூறினார். இந்த ஹெலிகாப்டர் பெற்றோர்கள் குழந்தைகளின் நண்பர்களைக் கூட தேர்ந்தெடுப்பதும், அவர்களுடன்தான் பேச வேண்டும், பழக வேண்டும் என்று நினைப்பதும், அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் இவர்கள் முடிவு செய்வதும் என இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
காரணங்கள்:
மோசமான விளைவுகளுக்கு பயம்: தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் விளையாட்டு குழுக்களில் நிராகரித்து விடுவார்களோ, வளர்ந்த பிள்ளைகளாக இருந்தால் நேர்காணலில் சரியாக தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அதிகமாக கவலைப்படுவதும், தலையிடுவதுமாக இருப்பார்கள். மோசமான விளைவுகளை தங்கள் பிள்ளைகள் சந்திக்கக் கூடாது என்ற எண்ணமும் பயமுமே காரணம்.
கவலைப்படுதல்: குழந்தைகளின் வாழ்க்கையை பாதுகாக்க அவர்களை மிகவும் கட்டுப்படுத்த எண்ணுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் எங்கும் காயப்படாமலும், ஏமாற்றம் அடையாமலும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகமாக கவலை கொள்கிறார்கள். பிறரால் புறக்கணிக்கபடுவார்களோ அல்லது நேசிக்கப்படாமல் இருந்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் அதிகப்படியான கவனிப்பும், கண்காணிப்பும் கொள்கிறார்கள்.
மன அழுத்தம்: பிள்ளைகளிடம் அதிக ஈடுபாடு கொண்ட ஹெலிகாப்டர் பெற்றோர்களைப் பார்க்கும் பிற பெற்றோர்கள் தாங்களும் அவ்வாறு அதிக கவனிப்பு கொடுக்க வேண்டுமோ, தங்கள் பிள்ளைகளை சரியாக கவனிக்கவில்லையோ என்ற குற்ற உணர்வில் மன அழுத்தம் கொள்கிறார்கள்.
விளைவுகள்:
இப்படிப்பட்ட பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள் தோல்விகளை எளிதில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் இருப்பார்கள். சவால்களை சந்திக்க பயப்படுவார்கள். இது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தையும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனையும் குறைத்து விடும்.
பெற்றோர்களின் அதீத ஈடுபாடு காரணமாக பிள்ளைகள் தாங்கள் சொந்தமாக செய்யும் எதையும் தங்கள் பெற்றோர்கள் நம்புவதில்லை என்று எண்ணுவதால் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை குறைந்து விடுகிறது.
பிள்ளைகள் எதையும் சமாளிக்கும் திறன் அற்றவர்களாக வளர்வார்கள். எதற்கும் பெற்றோர்கள் கூடவே இருப்பதால் இழப்பை சமாளிப்பதிலும், ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்வதிலும் தடுமாற்றமும் பதற்றமும் அடைவார்கள்.
தீர்வுகள்:
குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்ப்பதிலிருந்து ஒரு படி பின்வாங்கி பிள்ளைகளுக்கு வாய்ப்பை கொடுப்பது அவர்களை தன்னம்பிக்கை கொண்ட குழந்தைகளாக உருவாக்க உதவும்.
குழந்தைகளை அவர்களின் பிரச்னைகளை எதிர்கொண்டு போராட அனுமதிப்பதும், சிறுசிறு ஏமாற்றங்கள் அடைவதைத் தடுக்காமல் தோல்வியின் மூலம் பாடங்களை கற்றுக்கொள்ளவும் பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் பிள்ளைகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலம் கொண்டவர்களாக ஆவார்கள்.
பிள்ளைகள் நன்கு வளரவும், புதிய திறன்களை கற்றுக்கொள்ளவும், தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்கு பயிற்சி பெறவும் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அதிகம் கட்டுப்பாடு கொள்ளாமல் இருக்க வேண்டும்.