இன்றும் கிராமப்புறங்களில் கோடை விடுமுறை வந்து விட்டால் சிறிது சிறுதேர் உருட்டி விளையாடுவது, தட்டாங்கல் ஆடுவது, நீர்நிலைகளில் குதித்து விளையாடுவது என்று சிறார்கள் மற்றும் பெண்கள் மனமகிழ்ச்சியுடன் ஆரம்பித்து விடுவார்கள். அதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
கண்ணாமூச்சி விளையாடுவது:
சிறுவர் சிறுமியர் பலர் இணைந்து குழுவாக விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு கண்பொத்தி விளையாட்டு என்று கூறப்படுகிறது. விளையாட்டு குழுவில் இடம் பெறும் ஒருவர் கண்களை துணியினாலோ அல்லது கைகளாலோ மூடிக்கொண்டு விளையாட்டு குழுவில் இருக்கும் மற்றவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அப்படி பிடிபட்டவர் அடுத்த ஆட்டத்திலிருந்து இதேபோன்று கண்களை மறைத்துக் கொண்டு விளையாட வேண்டும். அவர் ஒருவரை தேடுவார். அவர் பிடிபட்டவுடன் அவர் மற்றவரை பிடிக்க வேண்டும் இப்படியாக தொடர்வது தான் கண்ணாமூச்சி விளையாட்டு.
கண்களை மூடிய நிலையில் தன்னோடு விளையாடும் மற்றவர்களை கண்டடைய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் உள்ளம் ஒருமுகப்படுவதால், இவ்விளையாட்டு உள்ளதை ஒரு நிலைப்படுத்த பயிற்சி தருகிறது.
ஊஞ்சல் விளையாட்டு:
கிராமப்புறங்களில் உள்ள குளத்தங்கரை, ஆற்றங்கரை மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது அல்லது ஆலமரம் போன்றவற்றின் விழுதுகளை கட்டி அதை ஊஞ்சலாகி விளையாடுவது போன்ற விளையாட்டுகளை பழங்காலம் தொட்டு சிறுவர், சிறுமியர் விளையாடி வருகின்றனர். இதை பருவப் பெண்களும் மனமகிழ்ச்சியுடன் விளையாடுவது உண்டு. இப்படி ஊஞ்சலாட்டம் ஆடுவதால் ரத்த ஓட்டம் உடலில் ஒரே சீராக அமைந்து உடல்நலம் பேணுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
மணல் வீடு விளையாட்டு:
நாமும் சிறு வயதில் சொப்பு வைத்து சோறு சமைத்து மணல் வீடு கட்டி விளையாடி இருக்கிறோம். இதேபோல் ஆறு, கடல் போன்ற இடங்களுக்கு சென்றாலும் அதில் வீடு கட்டுவதில் முன்னிலை வகிப்போம். மழை வரும் போல் இருந்தால் சாதாரணமாக புழுதியில் விளையாடுவது உண்டு. இப்படி விளையாடுவதால் குழந்தைகள் எதிர்கால வாழ்க்கைக்கு தயாராகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம். பெண் என்பவள் அடுப்பூத மட்டுமில்லாமல் மற்றைய அறிவுபூர்வமான கட்டடக்கலை போன்ற அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் மணல் வீடு கட்டுவது போன்று சொல்லித் தரப்படுகிறது. அவளாகவே எனக்கும் எல்லாம் செய்யத் தெரியும், செய்ய வரும் என்று செய்து காட்டுகிறாள்.
தட்டாங்கல் விளையாட்டு:
ஒரே சீரான கற்களை மேலே எறிந்து புறங்கையில் ஏந்தி விளையாடும் விளையாட்டே தட்டாங்கல் விளையாட்டு. மேலே எறியப்பட்ட கற்கள் கீழே விழுவதற்கு முன்பாக கைகளை தரையில் தொட்டும் தரையில் இருக்கும் பிற கற்களை எடுத்தும் விளையாடுவது விளையாட்டின் முறையாகும். இவ் விளையாட்டை பின்னர் அம்மானை என்ற பெயரில் அழைக்க ஆரம்பித்தனர். ஐந்து கல்லாட்டம் ,ஏழு கல்லாட்டம், ஒன்பது கல்லாட்டம் என்றும், கழற்சிக்காய், தாச்சிக்கல் விளையாட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இதுபோல் விளையாடுவதால் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்ல பயிற்சி அளிப்பதுடன், கைகளுக்கும் சிறந்த பயிற்சியாக இருக்கிறது. இதனால் பொருட்களை பிடித்து எடுப்பது சுலபமாக இருக்கும். தோற்பட்டைகள் நல்ல வலுடன் இருக்கும்.
நீராடல்:
ஆறு, ஏரி, குளம், அருவி, கடல் என்று நீர்நிலைகளை பார்த்து விட்டால் அதில் நீந்தி குளிப்பது அனைவருக்கும் பிடித்தமான விளையாட்டு. நீச்சல் பயிற்சிக்கு இதைவிட உயர்வான ,இயல்பான, இயற்கையான இடங்கள் கிடைப்பது அரிது. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையிலும் நல்ல ஒரு பயிற்சி இது.
சிறுதேர் உருட்டல்:
இன்றும் கிராமப்புறங்களில் மூன்று பனங்காய்களை எடுத்து அதை குச்சி அல்லது கம்பிகளில் சொருகி மூன்று சக்கரங்களை கொண்ட வண்டிகளாக மாற்றி அல்லது தேர்களாக செய்து தெருவில் அதை உருட்டி விளையாடுவதைப் பார்க்கலாம். மேலும் சிறு குழந்தைகள் நடை பழகுவதற்கும் மூன்று சக்கர வண்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுதும் பயன்படுத்துவோர் உண்டு. அந்த வண்டி மரத்தால் செய்யப்பட்டிருக்கும்.
அதேபோல் சோளத்தட்டையில் குச்சிகளால் சிறு தேர் செய்வதும், அவற்றை வண்டிகளாக உருட்டி விளையாடுவதும் கிராமபுறங்களில் உள்ளது. நுனா காய்களை சிறுதேர் கட்டி விளையாடுவது இன்றும் சிறப்புடன் நடந்து வருகிறது. இந்த விளையாட்டுகள் குழந்தைகளுக்கு நடைப் பயிற்சி அளிப்பதுடன் உடற்பயிற்சி ஆகவும், உடல் வலிமையாகவும் உதவுகிறது. இது போன்ற விளையாட்டுப் பொருட்களை அவர்களே செய்வதால் அவர்களின் மனதிற்கும் நல்ல ஒரு பயிற்சி கிடைக்கிறது.
இது போன்ற விளையாட்டுகளால் உடல் பலமும், மன மகிழ்ச்சியும், அவர்களின் வயதை ஒத்தவர்களுடன் நட்புணர்ச்சியும், ஒற்றுமையும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்ற பண்பினையும், எதிர்வரும் காலங்களில் ஏற்படும் சிக்கலை தீர்ப்பதற்கும் நல்ல ஆயத்தமாக இது செயல்பட்டு வருகிறது. அதனால் கோடை காலங்களில் வரும் விடுமுறை நாட்களில் சில நாட்களாவது அவரவர் சொந்த ஊருக்குச் சென்று இதுபோல் உங்கள் குழந்தைகளையும் விளையாடவிட்டு ரசிப்பீர்களாக!