
இன்றைய காலக் குழந்தைகள் பண்டிகைகளின் முக்கியத்துவத்தையும், அதன் கலாசார பின்னணியையும் புரிந்து கொள்வதில்லை. அதற்கான விருப்பமோ மெனக்கெடுவதோ அவர்களிடம் இல்லை. பெற்றோராகிய நாம்தான் வருங்கால சந்ததிகளுக்கு பண்டிகைகளின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அதைத் தவற விட்டால் வருங்கால சந்ததியினர் இவற்றை பின்பற்றவோ, ஈடுபாடு காட்டவோ மாட்டார்கள். பண்டிகைகளின் முக்கியத்துவம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. கொண்டாட்டங்களின் முக்கியத்துவம்: பண்டிகைகள் என்பது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதையும் குறிக்கும். இதனை நாம் கொண்டாடுவதன் மூலம் நம் குழந்தைகளுக்கு இதைப் பற்றிய அறிவும், தெளிவும் கிடைக்கும். சமூக மற்றும் கலாசாரப் பிணைப்புகளை உருவாக்கும் பண்டிகைகளின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். கொண்டாட்டங்கள் குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனை வளர்க்க உதவும். இதனால் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை நன்கு அறிந்துகொள்ள முடியும்.
2. கலாசார பாரம்பரியம்: ஒவ்வொரு பண்டிகையுமே ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தைப் பற்றியும், அந்தந்த சமூகத்தின் நம்பிக்கைகளைப் பற்றியும், பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த கலாசார பாரம்பரியம் அழியாமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்குமே உள்ளது.
3. குழந்தைகளை ஈடுபடுத்துதல்: பண்டிகை கொண்டாட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு அவற்றின் மீது ஒரு புரிதலையும், முக்கியத்துவத்தையும் உண்டாக்கலாம். பண்டிகைகளுக்கான வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவது, வீடுகளை அலங்கரிப்பதிலும், சமைப்பதில் உதவுவதிலும், பழக்க வழக்கங்களை சொல்லித் தருவது போன்றவை அவர்களுக்கு பண்டிகைகளின் மீது ஒரு ஈர்ப்பையும், அதைக் கடைபிடிக்க வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்தும். குழந்தைகளுடன் சேர்ந்து ஒன்றாகக் கொண்டாடுவது இளைய தலைமுறையினரிடையே கலாசார அடையாள உணர்வை ஊக்குவிக்கும். இதனால் அவர்கள் தங்கள் வேர்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் அவர்கள் தங்களின் கலாசார பாரம்பரியத்தை நன்கு புரிந்து கொள்ளவும் கடைபிடிக்கவும் உதவும்.
4. வரலாற்றுப் பின்னணி: பண்டிகைகளின் பின்னணியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கதைகள் மற்றும் அவை நடைமுறைக்கு வந்ததன் காரணத்தை தெரிந்துகொள்ள, அறிய வேண்டிய புராணங்கள் குறித்து குழந்தைகளுக்கு சொல்லித் தருவதன் மூலம் வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வார்கள். இதனால் பண்டிகைகளை விடாது கடைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டு விடும். இந்திய பண்டிகைகள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துடன் ஒருங்கிணைந்தவை. இவை சமூகத் திறன்களை வளர்ப்பதற்கும், சகிப்புத் தன்மையை ஊக்குவிப்பதற்கும், படைப்பாற்றலை அதிகரிப்பதற்கும் தேவையான திறன்களை வழங்குகின்றன.
5. சகிப்புத்தன்மை: பல்வேறு மதங்கள் மற்றும் கலாசாரங்களின் பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் குழந்தைகளின் சகிப்புத்தன்மையை வளர்க்கலாம். வருங்கால சந்ததியினர் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்ளவும், பிறரின் பழக்க வழக்கங்களை மதித்து சகித்துக்கொள்ளும் தன்மையைப் பெறவும் பல்வேறு கலாசாரங்களின் பண்டிகைகள் உதவும். பண்டிகைக் காலங்களில் உணவு மற்றும் பரிசுப் பொருட்களை பகிர்வதன் மூலம் குழந்தைகளுக்குப் பகிர்ந்து கொள்ளும் பண்பையும் வளர்க்கலாம். விழாக்களில் பங்கேற்பது, குழந்தைகள் வெவ்வேறு பின்னணிகள் மற்றும் கலாசாரங்களைச் சேர்ந்த மக்களுடன் புதிய உறவுகளை உருவாக்க உதவுவதுடன் சகிப்புத்தன்மையையும் பெற முடியும்.
6. சமூக ஒற்றுமை: பண்டிகைகள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்தும். இவை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை ஒருங்கிணைத்து சமூக உறவுகளை பலப்படுத்தும். பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பண்டிகைகளை ஒன்று சேர்ந்து கொண்டாடும்பொழுது ஒருவருக்கொருவர் அனுசரித்து சிறந்த மத நல்லிணக்கத்தைப் பெற முடியும். பண்டிகைகள் வெறும் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல, அவை சமூக, கலாசார மற்றும் ஆன்மிக விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு சிறந்த பாலமாகும். எனவே, பெரியவர்களாகிய நாம்தான் வருங்கால சந்ததியினருக்கு பண்டிகைகளின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.