
திருமணம், காது குத்து, கிரகப்பிரவேசம், மஞ்சள் நீராட்டு என அனைத்து சுப காரியங்களிலும் அன்பளிப்பாக மொய் செய்வது நம்மால் பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கங்களில் ஒன்றாகும். அவ்வாறு சிலர் மொய் செய்யும்போது 100, 200, 500 என்று வைக்காமல், 101, 201, 501 என்று வைப்பார்கள். அது ஏன் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாத காலத்தில் பொன் மற்றும் வெள்ளி நாணயங்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. அவை, ‘வராகன்’ என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வந்தன. ஒரு வராகன் பொன் என்பது 32 குன்றி எடை (குண்டுமணி). அந்த 32 என்பது முப்பத்து இரண்டு வகையான தர்மங்களைக் குறிப்பதாகும். இது தர்மம் தவறாது சம்பாதித்த நாணயம். இதை நீங்களும் தர்மம் தவறாமல் செலவு செய்யுங்கள் என்பதைக் குறிப்பிடவே மொய் பணமாக இதை வழங்கினார்கள். இதனால் மொய் செய்பவர்க்கும் ஒரு மதிப்புமிக்க பொருளைத்தான், நாம் அன்பளிப்பாக வழங்கியிருக்கின்றோம் என்ற மனநிறைவு கிடைத்தது.
காலப்போக்கில் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. ஆனால், ரூபாய் நோட்டுகளை மொய்யாக செய்யும்போது, அவர்களுக்கு அது மனநிறைவைக் கொடுக்கவில்லை. இதன் காரணமாகவே எத்தனை ரூபாய் கட்டுக்கள் வைத்தாலும், அதனுடன் ஒரு வெள்ளி ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை கடைப்பிடித்தனர்.
இதுவே காலப்போக்கில் ஒரு ரூபாய் நாணயமாக மாறி, 101, 201, 501 என்று எவ்வளவு மொய் செய்தாலும் அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து வைக்கும் வழக்கத்தில் வந்தது. ரூபாய் நோட்டுடன் சேர்த்து வைக்கப்படும் ஒரு ரூபாய் நாணயம் கடனாகக் கருதப்படுகிறது. இந்த அன்பளிப்பைக் கொடுப்பவர் மற்றும் பெறுபவர் இருவரும் மீண்டும் மீண்டும் மேலும் சந்திப்பார்கள் என்பது நம்பிக்கை.
இதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதனால் மொய் எழுதும்போது, பணம் தருபவரின் பெயர்களை அவசர அவசரமாகக் குறித்துக் கொண்டு, மொய் பணத்தையும் குறித்து வைத்துக் கொள்வார்கள்.
அவ்வாறு எழுதும் மொய் பணத்தில் சில நேரங்களில் கவனக் குறைவால் பிழை ஏற்பட்டுவிடும். அதாவது, 100 என்பதை 1000 ஆகவும், 1000 என்பது 100 ஆகவும் தவறுதலாக எழுத வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகவே, 1 ரூபாய் சேர்த்து 51, 101 என வைக்கத் தொடங்கினார்கள். இதுவே இன்றளவும் பின்பற்றப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.