
தாத்தா, பாட்டிகள் சில பேர் தங்கள் வீட்டில் நடக்கும் பேரக் குழந்தைகளின் திருமணத்தில் சாதாரணமாகக் கலந்து கொண்டு வந்து விடுவார்கள். ஆனால், இன்றும் சில தாத்தா, பாட்டிகள் எப்படிப் பொறுப்பாக இருக்கிறார்கள் என்பதை இப்பதிவில் காண்போம்!
சமீபத்தில் ஒரு வீட்டுத் திருமணத்துக்குச் சென்று இருந்தேன். அப்பொழுது திருமண வீட்டில் முதன் முதலாக இரு மருங்கிலும் நின்று வரவேற்றது மணமகனின் இருதரப்பு தாத்தா, பாட்டிகளும்தான். அடுத்தபடியாக மணமக்களுக்கு மிகவும் நெருங்கிய உறவினர்களை மணமேடையின் முன் வரிசையில் அமர வைத்திருந்தார்கள். (இதைப் பார்த்த என் தோழி நாம் பள்ளி, கல்லூரிகளில் படித்தபொழுது ஆண்டு விழாவின்போது பரிசு வாங்குபவர்களை பெயர் சொல்லி அழைத்ததும் சீக்கிரமாக வந்து வாங்குவதற்கு ஏதுவாக மேடையின் முன் வரிசையில் உட்கார வைப்பார்களே அதுபோல் இருக்கிறது என்று காதை கடித்தாள்)
மாமன், மைத்துனர்கள் மற்றும் திருமணம் முடிந்தவுடன் மாமி, நாத்தி பட்டம் கட்டுபவர்கள், சித்தி, சித்தப்பார்கள் மேடையில் நின்று திருமணச் சடங்குகள் செய்ய முக்கியமான உறவினர்கள் அனைவரையும் ஒவ்வொருவராகப் பார்த்துப் பார்த்து அழைத்து வந்து அமர்த்தி இருந்தார்கள்.
இதனால் திருமணத்தில் எந்தவித தடங்களும் இல்லாமல் எந்தவித குறைபாடும் இல்லாமல் அவர் அவர்களின் முறை வரும்போது செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை சீக்கிரமாக எழுந்து சென்று செய்வதற்கு ஏதுவாக இருந்தது. அதோடு மட்டுமல்லாமல், இரண்டு தரப்பினரின் உறவினர்களையும் அப்பொழுது நன்றாக அறிமுகம் செய்து வைப்பதற்கும் வசதியாக இருந்தது.
முன்பெல்லாம் தெரிந்த வட்டாரங்களிலேயே திருமணம் நடைபெற்றதால் பெரிய அறிமுகம் தேவை இல்லாமல் இருந்தது. ஆனால், இன்று அனைவரும் மேட்ரிமோனியைப் பார்த்து திருமணம் செய்வதால் யாருக்கு யார் என்ன உறவு என்பது தெரியாமல் போய்விடுகிறது. அதை தாத்தா, பாட்டிகள் நால்வரும் நிவர்த்தி செய்தார்கள்.
எப்படியென்றால் பெண்ணிற்கு மாலையிட வரும் உறவினரின் பெயரைச் சொல்லி அவர் பெண்ணிற்கு என்ன முறை, பையனுக்கு என்ன முறை என்று மேடையில் கூறி அறிமுகம் செய்து வைத்தார்கள். இதனால் மணமக்களின் பெற்றோர்கள் டென்ஷன் இல்லாமல் திருமணத்தை நடத்த முடிந்ததுடன் மேடைக்கு வாழ்த்த வரும் உறவு நட்புகளையும் நன்றாக கவனித்து பேசி அனுப்ப முடிந்தது.
அதோடு அல்லாமல், இடையிடையே சென்று பந்தி பரிமாறுபவர்கள் நல்ல முறையில் செய்கிறார்களா?அனைவரும் எதையும் வீணடிக்காமல் நன்றாக சாப்பிடுகிறார்களா? என்பதையும் கவனித்து விட்டு வந்தார்கள். அதேபோல், இலைக்கு ஒரு வாட்டர் பாட்டில் வைப்பதைப் பார்த்து கணவன், மனைவியாக இருந்தால் ஒரு பாட்டில் தண்ணீரைப் பயன்படுத்திவிட்டு அடுத்த பாட்டிலை வீட்டிற்கு வேண்டுமானால் எடுத்துச் செல்லுங்கள். வீணாக்காதீர்கள் என்ற அட்வைஸையும் செய்து, இதை மற்ற இடங்களிலும் பின்பற்றுமாறு கூறினார்கள். இதையும் மற்றவர்கள் பின்பற்றினார்கள்.
இதனால் தண்ணீர் வீணாகாமல் பாதி குடித்துவிட்டு அப்படி அப்படியே போட்டு விட்டு செல்லாமலும் இருந்தது. இலைகளிலும் உணவுப் பண்டங்கள் வீணாகாமல் இருந்தது. இதனால் அனைவரின் கண்களும் இவர்கள் மீதே இருந்தன. அதேபோல், ஒரு உற்சாகத்தை நான்கு தாத்தா பாட்டிகளின் நடவடிக்கையில் காண முடிந்தது.
இதனால் தாம்பூலப்பை சரிவர எல்லோருக்கும் கொடுத்து அனுப்பப்படுகிறதா? அனைவரும் விருந்து உண்டு செல்கிறார்களா? யாராவது ஏதாவது பைகளை விட்டு விட்டுச் சென்றாலும் அதையும் எடுத்துக் கொடுக்கும் அளவுக்கு மிகவும் துல்லியமாக வேலைகளை செய்தார்கள் அந்த நான்கு பேரும்.
இதை கவனித்த அனைவரும், ‘அப்பாடா நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்தக் காலத்தில் எப்படி ஒவ்வொருத்தரையும் கவனித்து அனுப்புவார்களோ, அந்த அளவு அக்கறை எடுத்து எல்லோரையும் ஒன்றுபோல் கவனித்து அனுப்பியது மன நிறைவாக உள்ளது. இப்போதைய திருமணங்களில் அழைப்பு வந்ததா, ஏதோ போனோமா கலந்து கொண்டோமா, முடிந்தால் சாப்பிடலாம் இல்லையென்றால் வெளியில் பார்த்துக் கொள்ளலாம் என்று வந்து விடுவோம். அது மாதிரி இல்லாமல் ஒவ்வொன்றையும் கவனித்தது பெருமைப்படத்தக்க விஷயம்’ என்று நன்றி கூறி, நன்றி அட்டையை வாங்கிக் கொண்டு வெளியில் சென்றார்கள்.
நம் வீட்டில் இருக்கும் மூத்தவர்களையும் இதுபோல் செய்யத் தூண்டினால் அவர்களும் உற்சாகமடைவார்கள். எல்லோரையும் நன்கு கவனித்து அனுப்பிய திருப்தியும் கிடைக்கும். குறிப்பாக, வீட்டில் மூத்தோர்க்கு நல்ல பங்கினை கொடுத்த ஒரு திருப்தியும் எல்லோருக்கும் நிலவும்.