
கணவன், மனைவிக்குள் வரும் பிரச்னைகள் தற்போது வெகு விரைவில் இணையதளங்கள் மூலம் பொதுவெளியில் பரவி விடுவது ஒரு வகையில் நல்லதுக்குதான் எனலாம். ஏனெனில், இதன் மூலம் செல்லமாக வளர்ந்த மகள்கள் கணவனால் சித்திரவதை செய்யப்படும் நிகழ்வுகளை பெற்றோர் அறியலாம். அது மட்டுமின்றி, மற்ற பெண்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இந்த நிகழ்வுகள் அமையலாம்.
சமீபத்தில் காவலர் ஒருவர் தனது மனைவியை அடித்து சித்திரவதை செய்ததை தனது தங்கையிடம் பெருமையாகப் பேசுவது போன்ற ஒரு காணொளி வைரலாகி பொதுமக்களின் ஏகோபித்த கோபத்தைப் பெற்றது. இந்த ஆடியோவில் எதிர் முனையில் பேசியது அவனது தங்கை என்பதால், 'பெண்களே பெண்களுக்கு எதிரி' எனும் கருத்து வலுப்பட காரணமாகவும் அமைந்தது.
நம் நாட்டில் தற்போது கல்வி நாகரிகம் முன்னேறிவிட்ட சூழலிலும், இதுபோன்ற பெண் மீதான கொடுமைகள் முற்றும் குறையாமல் தொடர்கிறது என்பது வேதனை தரும் விஷயம். பெண் என்றாலே வாரிசாக பிள்ளை பெற்று வளர்க்கவும், புகுந்த வீட்டில் தங்கள் பெருமையை நிலைநாட்டவுமே என்று பல பெற்றோர்கள் நினைப்பது இன்னும் தொடர்கிறது.
அது மட்டுமின்றி, சமூகத்தில் தங்களது கௌரவம் மற்றும் அந்தஸ்தை காட்டும் வகையில் தங்கள் பெண்களுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்யும் எண்ணம் வேரூன்றி விட்டதால் வரதட்சணை எனும் மாபெரும் இழிசெயல் இன்னும் இருப்பது வருந்தத்தக்கது. பெண்கள் தங்கள் புகுந்த வீட்டின் கொடுமைகளைத் தாங்க முடியாமல், பெற்றோரிடமும் செல்ல முடியாமல், 'இருதலைக்கொள்ளி எறும்பாக' தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் செயல்களை என்னவென்று சொல்வது?
பெண்களைப் பெற்று விட்டால் மட்டும் போதாது. அவர்களை வளர்த்து, படிக்க வைத்து நல்ல மன உறுதியையும் தெளிவையும் தன்னம்பிக்கையும் அவர்களுக்குள் தர வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இந்தக் காலத்தில் கட்டற்ற அறிவியல் சுதந்திரத்துடன் பெண் சுதந்திரமும் வருமானமும் பெருகி விட்டிருந்தாலும் இன்னும் பெண்களை, 'வீக்கர் செக்ஸ்' இனமாகவே ஆண்கள் மதிப்பதை கண்கூடாகக் காண்கிறோம்.
இதனாலேயே வரதட்சணை கொடுமைகள், வன்முறைகள் மற்றும் பல அரங்கேறி வருகின்றன. பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு ஒரு பிரச்னை என்றால் தங்கள் கௌரவமும் அந்தஸ்தும் கெட்டுவிடுமே என்று முதலில் அஞ்சக் கூடாது. 'நான்கு பேர் என்ன சொல்வார்கள்' என்ற தேவையற்ற பயமே ஆசை மகள்களின் வாழ்க்கையை சீரழித்து விடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் முதலில் பெண்களுக்கு எதிரான நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இந்தியா முழுவதுமே வரதட்சணை மற்றும் பெண் வன்கொடுமைக்கு எதிராக பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, வரதட்சணை வாங்குவது, கேட்பது, தருவது போன்ற தண்டனைக்குரிய குற்றங்களுக்காக (1961) வரதட்சணை தடுப்புச் சட்டம், (2005) குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் பெண்களுக்கு ஆதரவாக உள்ளது.
தகுந்த வழக்கறிஞர் மூலம் இந்த சட்டங்கள் பற்றி அறிந்து இதன் மூலம் ஒவ்வொரு பெண்ணும் தனக்குரிய பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு துணையாக ஒவ்வொரு பெற்றோரும் இருக்க வேண்டும்.
அது மட்டும் அன்றி கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் போன்ற பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் சட்டம் குறித்த விழிப்புணர்வை தருவதற்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும்.
மனைவி உறவு கணவன் மனைவி உறவு என்பது வாழ்வின் இறுதிவரை ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளும் பந்தம். இதில் வரதட்சணை மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதற்கு உரிய வகையில் தீர்வு மேற்கொள்ள வேண்டும். எல்லை மீறும் பட்சத்தில் சட்டத்தின் துணையை நாடுவதில் தவறு இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொண்டு குடும்ப வன்முறைகளை தவிர்த்து மகிழ்வுடன் வாழ்வதே அவரவர் சந்ததிக்கு நல்லது.