
‘குங்குமப்பூ’ என்ற பெயரைக் கேட்டவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது குழந்தைப்பேறு நடைபெறுவதற்கு முன்பு கர்ப்பிணிகள் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கைதான்.இந்த குங்குமப்பூ இழைகள் விலை உயர்வானது. சிறிய அளவில் வாங்கினாலும் அதிக விலை கொடுத்துதான் இதை வாங்க வேண்டி உள்ளது.
குங்குமப்பூ வட இந்திய இமாலய சுற்றுலா தலமான காஷ்மீர் மற்றும் அதனையொட்டிய குளிர்வான நிலப்பகுதிகளில் விளையக் கூடியதாகும். குங்குமப்பூ இழைகளை சமையலுக்கும் பயன்படுத்தலாம். அதை சிறிது அளவு சேர்த்தாலே அந்த உணவு நல்ல நிறமாகத் தோன்றும். சுவையாகவும் இருக்கும்.
குங்குமப்பூவில் குரோசின் மற்றும் ஸாப்ரனால் வேதிப் பொருட்கள் அடங்கி உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். நமது உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இவை இருக்கிறது. பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பிக்க இவை உதவுகின்றன. இவை கண் பார்வை தெளிவு அடைவதற்கும், நினைவாற்றல் பெருகுவதற்கும் பக்கபலமாக அமைகின்றன.
இதை நாம் சாப்பிடும் உணவில் சிறிதளவு சேர்த்துக் கொண்டால் பெரும் பலன் பெறலாம். குங்குமப்பூ உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. நமது மனம் சோர்வடையும்போது இதை சாப்பிட்டால் செரோடோனின் அளவை உயர்த்தி மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
சிறிய அளவில் மன அழுத்தம் இருந்தால்கூட குங்குமப்பூ சாப்பிட, மன அழுத்தம் உடனே விலகும் என்கிறார்கள். விலையுயர்ந்த இந்த குங்குமப்பூவை வாங்கும்பொழுது கவனமாக பார்த்து வாங்க வேண்டும். இவற்றில் போலிகள் கூட நிறைய உண்டு. உண்மையான குங்குமப்பூ ஆழ்ந்த சிவப்பு நிறமும் சிறிய மஞ்சள் நிறமும் சேர்ந்த கலவையாகும். இதுவே உயர்தர குங்குமப்பூ ஆகும்.
நல்ல குங்குமப்பூ இழைகளை அளவாக உணவில் சேர்த்து சாப்பிடுங்கள், உடல் ஆரோக்கியமாக வாழுங்கள்.