
வீட்டிற்கு பூசும் வண்ணங்கள் ஒளி, ஆற்றல்களை வழங்குவதில் தன்னிகரற்றது என்பதால், நம் ஆளுமைக்கு ஒத்துபோகும் வண்ணங்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. வீடு முழுக்க ஒரே வண்ணத்தைப் பயன்படுத்தாமல் பல வண்ணங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வண்ணங்களின் குணாதிசயம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஆரஞ்சு: ஆற்றல், தன்னம்பிக்கை, உற்சாகம், மகிழ்ச்சி இவற்றையெல்லாம் அதிகரிக்கும் வண்ணம் ஆரஞ்சு என்பதால் வரவேற்பறை, படுக்கையறைக்கு இதைப் பூசாமல் உடற்பயிற்சி அறைக்கு பூசுவது ஏற்றதாக உள்ளது. இந்த வண்ணத்தை முழுக்க முழுக்க அறைக்குப் பயன்படுத்துவதைவிட, சுவரின் ஒரு பகுதிக்கு மட்டும் பயன்படுத்துவது சிறந்தது.
அடர் சிவப்பு: வரவேற்பறை, சாப்பாட்டு அறையில் உரையாடல்களை தூண்டுவதற்கு அடர் சிவப்பு நிறம் பொருத்தமானது. இது ஆற்றலை வெளிக்கொண்டு வந்து துணிச்சலை வழங்கும் என்பதால் வரவேற்பு அறையில் பயன்படுத்தும் குஷன்களை அடர் சிவப்பு நிறத்தில் தேர்ந்தெடுக்கலாம்.
மஞ்சள்: மஞ்சள் சூரிய வெளிச்சத்தைப் பிரதிபலித்து மகிழ்ச்சி, ஒற்றுமையை வெளிப்படுத்துவதோடு கவனம், அறிவாற்றல், மனநலத் திறனையும் அதிகரித்து, உரையாடல்களை மேம்படுத்துவதற்கு உதவும் என்பதால் சமையலறை, சாப்பாட்டு அறை, குளியலறையில் பயன்படுத்துவதற்கு இந்த நிறம் சிறந்தது. வரவேற்பறை, நுழைவாயில், சிறிய அறைகளில் மஞ்சளைப் பயன்படுத்தலாம்.
பெரிய அறைகளுக்கு மஞ்சள் நிறம் ஏற்றதல்ல. பெரிய இடங்களுக்கு மஞ்சள் பயன்படுத்தும்போது அது எரிச்சல், கோபத்தை உருவாக்கும் என்பதால் அறைகளில் சிறிய அளவில் மஞ்சளைப் பயன்படுத்துவது சிறந்தது என்கின்றனர் உட்புற வடிவமைப்பாளர்கள். வரவேற்பறையில் மஞ்சள் நிற நாற்காலிகளைப் பயன்படுத்தலாம்.
மென் நீலம்: நீல நிறம் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவுவதோடு, அமைதியை அளிப்பதில் சிறந்தாக இருப்பதால் படுக்கையறை, குளியலறைக்கு சிறந்தது. மென் நீலத்தைப் பயன்படுத்த விரும்புபவர்கள் வரவேற்பறைக்கு முக்கிய வண்ணமாகப் பயன்படுத்தலாம்.
அடர் நீலம்: அடர் நீல நிறம் அமைதியைப் பிரதிபலித்து,எண்ணங்களை அமைதிப்படுத்த உதவும். மேலும், இதை கூடுதலாகப் பயன்படு்த்தினால் சோக எண்ணத்தை உருவாக்குவதால் அடர் நீல நிற மேசை விளக்கை அறையில் பயன்படுத்தலாம்.
பச்சை: பச்சை வண்ணம் புத்துணர்ச்சி ஊட்டும் என்பதால் வீட்டின் எந்த அறைக்கு வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம். ஏனெனில், மன அழுத்தத்தை குறைக்க உதவி, ஒற்றுமையை அதிகப்படுத்தி, வளர்ச்சியை குறிப்பதாக இருப்பதால் சமையலறை, படுக்கையறைக்கு ஏற்ற நிறம் பச்சைதான்.
வீடு பெரியதோ, சிறியதோ எப்படி இருந்தாலும் உள் அமைப்பு மனதை கவரும் வகையில் இருப்பதில் வண்ணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வண்ணங்களின் குண நலன்களை அறிந்து அவற்றைப் பூசி பலன் பெறுவோம்.