
சில குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவது மற்றும் பழகுவது போன்ற விஷயங்களில் எப்போதும் ஒதுங்கியே இருப்பதுண்டு. அதற்கான காரணங்கள், அதை சரி செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
சிலர் வீட்டில் தங்கள் குழந்தைகளை அதிக நேரம் மற்றவர்களோடு சேர்ந்து விளையாட அனுமதிக்க மாட்டார்கள். காரணம், அதிக நேரம் விளையாடினால் அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து விடும் என்பது ஒரு காரணம். ஆதலால் வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்து, ‘படி படி‘ என்று படிப்பில் மட்டுமே கவனத்தை குவிக்க விடுவார்கள். இதனாலும் குழந்தைகள் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடத் தயங்குவார்கள்.
இன்னும் சில குழந்தைகள் தானாகவே விலகும். காரணம் என்னவென்று கவனித்தால் உடல் ரீதியாக தன்னை சுறுசுறுப்பாக வைத்திருக்காததுதான் காரணம். காலில் உள்ள ஒரு சிறு பித்த வெடிப்பு கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். இதனால் அந்தப் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளோட விளையாடுவதிலிருந்து ஒதுங்குவார்கள்.
வேறு சில பிள்ளைகளின் விளையாட்டுத் திறமைகளை பெற்றோர் உற்சாகப்படுத்தி வளர்க்காமல் இருக்கலாம். விளையாடும்பொழுது கீழே விழுந்து அடிபட்டால் அதற்காக அலைய வேண்டியது, டாக்டரிடம் செல்ல வேண்டியது, மருத்துவ செலவு போன்றவை காரணமாக இருக்கலாம். மேலும், குழந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்பு கூடுவது ஆகியவற்றை மனதில் கொண்டு குழந்தைகளைப் பெட்டிப் பாம்பாக அடக்கியாள நினைப்பார்கள். அதனால் மற்ற பிள்ளைகளுடன் இணையாமல் ஒதுங்கும் குழந்தைகள், தாம் நிராகரிக்கப்படுகிறோம் என்று உணர்ந்து பெற்றோரிடம் கூறவும் பயந்து ஒருவிதமான குழப்பத்துக்கு ஆளாகிறார்கள்.
சில குழந்தைகளுக்கு சரியாகப் பேச்சு வராது. அதனால் மற்றவர்களுடன் இணைவதை விரும்ப மாட்டார்கள். இதனால் குழந்தைகள் மனதில் தாழ்வு மனப்பான்மையுடன் வளர ஆரம்பிப்பார்கள். இன்னும் சில குழந்தைகள் அவர்களின் நண்பர்களின் பெற்றோர்களிடம் தனது பெற்றோரும் நண்பராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லாதபோது மற்றவர்களிடம் சேர்ந்து விளையாடுவதை நிராகரிப்பார்கள். சில பெற்றோர் தங்களது குழந்தைகளை மிகவும் 'ஷை' டைப் என்று கூறுவார்கள். இது குழந்தைகளின் காதுக்கு வரும்பொழுது அதையே நிலைநாட்ட முற்படுவார்கள். ஆதலால், ‘அவன் வெட்கப்படுபவன்‘ என்பது போன்ற வார்த்தைகளை குழந்தைகளின் காதுபட கூறாமல் இருப்பது நல்லது.
இதுபோன்ற விஷயங்களுக்கு பெற்றோர் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னவென்று பார்த்தால், பிள்ளைகள் எந்தச் சூழலில் வெட்கத்தன்மை, தயக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை கவனித்து, அந்தச் சூழலுக்கு ஏற்ப பிள்ளைகளின் தயக்கத்தைப் போக்கலாம்.
பிள்ளைகள் மற்றவரோடு சேர்ந்து விளையாடும்போது அவர்களின் பெற்றோரும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து நட்பாகப் பழக வேண்டும். தயக்கம், வெட்கம் உள்ள பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் நட்பு உற்சாகத்தை ஊட்டும். இதனால்,பிள்ளைகளின் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை எண்ணம் ஒழியும். அதேபோல், குழந்தைகள் சுறுசுறுப்பின்றி இருந்தால் அதற்கான காரணம் என்ன என்பதை பெற்றோர்கள் கண்டுபிடித்து அதற்கான தீர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
இதுபோல், பெற்றோர்கள் குழந்தைகளை கவனித்து வளர்த்தால், எப்பொழுதும் எதையும் வெளிப்படையாகப் பேசும் தன்மை உடையவர்களாக குழந்தைகள் இருப்பார்கள். இதனால் குழந்தைகளை எந்த வயதிலும் கையாள்வது எளிமையாக இருக்கும்.