
“ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா” என்று பாடிய மகாகவி பாரதி, தற்போதைய டிஜிட்டல் உலகில் வாழ்ந்திருந்தால், கவலையோடு கீழ்கண்டவாறாக பாடி இருப்பார் என தோன்றுகிறது...
“செல்போன் பாவிக்காதே பாப்பா - உன்னை
ஓய்ந்திருக்க வைத்துவிடும் பாப்பா”
மகாகவி பாடிய பாப்பா பாடல் பெண் குழந்தைகளை ஊக்கப்படுத்துவதாக சொல்லப்பட்டாலும், அப்பாடலின் கருத்துகள் ஆண், பெண் குழந்தைகள் இருவருக்குமே பொருத்தமானதாகவே இருக்கும். இப்பாடல் பல நாடுகளிலுள்ள பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. அப்படியாக இப்பாடலை சிறுவயதில் படித்து வளர்ந்து தற்போது ஒரு குழந்தைக்கு தகப்பனான நான், அனைவரும் அறிந்தும் அலட்சியப்படுத்தும் செல்போன்கள் குழந்தைகள் கையை ஆக்கிரமித்துள்ளதை பற்றி விவரிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
குழந்தைகள் செல்போனை கைதாங்கி பாவிக்கும் போது அவர்களது உள்ளங்கை தெரியாது. அதுப்போல திரையில் தன்னுடைய வேடிக்கைகளை காட்டும் செல்போன் அவர்களை ஓரிடத்தில் ஓரங்கட்டி விடுவது மட்டுமல்லாமல், அதிக நேர பாவனை குழந்தைகளின் எதிர்கால இலட்சியம், என்னவென்று அவர்களுக்கே தெரியாமல் சோம்பேறி ஆக்கிவிடுகிறது. காலம் வீணாகும். சிறு வயதில் கணித பாடத்தில் மட்டும் தேர்ச்சியடையாமல் இருந்த என்னிடம் கணித ஆசிரியை சொன்ன வார்த்தைகள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. “நீ என்னா நினைக்கிறியோ அதுதான் நடக்கும். நீ கஷ்டம்னு நினைச்ச கஷ்டமா தான் இருக்கும். உன் நினைப்ப நீ மாத்திக்கோ கட்டாயம் நீ பாஸ் ஆகுவ” என்றார். ஆசிரியை சொன்னபடி முடியும் என்ற நினைப்பை எனக்குள் உண்டாக்கி படித்து கணிதத்தில் தேறினேன். எண்ணங்களே செயல்பாடுகள் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் இப்பொழுது வளரும் குழந்தைகளுக்கோ சிந்திக்க நேரமும், சூழலும் அவர்கள் கையில் வைத்திருக்கும் செல்போன் அதற்கான சந்தர்ப்பத்தை கொடுப்பதில்லை. பேனாவும் புத்தகங்களும் பிடிக்க வேண்டிய கைகளில் அதைவிட அதிக நேரம் செல்போன் வைத்து பாவிப்பதை, பெற்றோர்களாகிய நாம் கணக்கெடுத்தால் அவர்களின் ஆரம்ப வளர்ச்சி பாதிப்படைவதை தடுக்கலாம்.
செல்போன் பாவனை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், பார்வைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் சரியான முடிவுகளை எடுக்கும் திறனையும் பாதிக்கும் என தெரிவிக்கின்றனர். பெற்றோர்கள் என்ற மிகப்பெரிய பதவியை நமக்கு தந்த குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்டியது உணவு, உடை, அரவணைப்பு மட்டுமல்ல. நல்ல அறிவும், சிறந்த போதனைகளும் தான் அவர்களுடைய வளர்ச்சி பாதையை சரியானதாக அமைக்க உதவும்.
குழந்தைகள் அழுதால் கட்டுப்படுத்தவும், அடம்பிடித்தால் ‘கார்டூன் பாரு’ என்று கையில் செல்போனை கொடுக்கும் நாம் அதையே அவர்களுக்கு தினசரி பழக்கியும் விடுகிறோம். படிப்பில் மார்க் குறைந்தால் அறிவு இல்ல உனக்கு என்று குழந்தைகளை திட்டவும் அடிக்கவும் செய்கிறோம். உண்மையில் அறிவு யாருக்கு இல்லை என்ற கேள்வி பெற்றோர்களாகிய நம்மிடையே தான் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அடுப்படியில் சமைக்கும்போதும் சின்னதிரைகளை செல்போனில் காணும் பெற்றோர்கள் சிலர், வழிகாட்டியாக இருக்க வேண்டிய அவர்களின் வளர்ச்சி பாதை பயணத்தில் அலட்சியம் காட்டுகிறார்கள்.
பெரிய பெரிய தலைவர்களின் வரலாற்றை திருப்பி பார்த்தால் அவர்கள் வாழ்வில் உயர்வதற்கு கட்டாயம் புத்தகங்கள் பாலமாக இருந்திருக்கும். சாதாரண ஏழை மீனவ குடும்பத்தில் பிறந்து உலகமே போற்றும் சிறந்த தலைவரான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்கள், தான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்ததற்கு தன்னுடைய விடாமுயற்சி காரணம் என்றாலும் அதற்கு என்னை நானே தயார்படுத்திக் கொள்ள ஊக்குவித்தது புத்தகங்களே என்று சொல்லிருக்கிறார்.
ரஷ்ய நாட்டில் விளாதிமிர் என்ற சிறுவன் வீட்டில் இலக்கியப்போட்டி என்று வாரத்திற்கு ஒருமுறை நடக்கும். ஒரு வாரம் தாங்கள் படித்த புத்தகத்திலிருந்து சில கேள்விகளை விளாதிமிரின் தாய் இலியா பிள்ளைகளிடம் கேட்பாள். கதாபாத்திரங்களை நினைவூட்டும் சில உரையாடல்களும் சொல்லப்படும். விளாதிமிர் இதில் ஆர்வமாகக் கலந்து கொண்டு நாயகன் - நாயகி பெயரைக் கண்டுபிடித்துச் சொல்லுவான். இந்த சிறுவயது வாசிப்பு பழக்கம் தான் விளாதிமிர் என்ற சிறுவனை பின்னாளில் உலகமே வியக்கும் பன்முக ஞானவான் லெனின் என்ற புரட்சியாளராக உருவாக்கியது. புத்தக வாசிப்பு இவ்வாறு தலைவர்களின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது.
பெற்றோர் சிலருக்கு தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்ல ஒரு சிறிய சொல்ல இயலாத ஆசை இருக்கும். ஆனால் பண வசதி இல்லாததால் அந்த ஆசை கிடப்பில் போடப்படும். நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் நினைத்த நாட்டிற்கு செல்ல முடியும். எப்படியென்றால் உங்கள் ஊரில் உள்ள நூலகத்திற்கு குழந்தைகளை கைப்பிடித்து அழைத்து செல்லுங்கள். பல நாட்டு இலக்கிய புத்தக பொக்கிஷங்கள் இருக்கும். அதன் வாயிலாக பயணியுங்கள். அந்த பயணம் சிந்திக்க வைக்கும். சாதிக்க ஊக்குவிக்கும். ஒரு நாள் குழந்தைகள் புத்தகத்தில் மட்டும் வாசித்து கற்பனை செய்த நாடு அழைக்கும். அப்பொழுது அவர்கள் அதற்கு செல்ல தயாராக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
எதிர்மறையாக என் குடும்பத்தில் நான் வாசிப்பதை கண்ட எனது 45 வயது அம்மா வாசிக்க கற்றுக் கொடுக்க என்னிடம் கேட்டது ஒரு பெரும் பாக்கியமாகவே நான் கருதுகிறேன். அம்மாவோடு அரட்டை அடித்து கொண்டிருக்கும் திண்ணை நண்பிகளும் அவர்களின் குடும்பத்தார்களும் என்னிடம் வாசிக்க கற்றுக் கொண்டது இரட்டை பாக்கியமாகும்.
இப்பொழுது எனது அம்மாவோ அகிலனின் ‘சித்திரப்பாவை’ நாவலை வாசித்து கொண்டிருக்கிறார். குழந்தைகளை நூலகத்திற்கு அழைத்து செல்வது எவ்வளவு முக்கியமோ அதுப்போல புத்தக்கண்காட்சி நடைபெறும் இடங்களுக்கு அழைத்து செல்வதும் வாழ்க்கையின் ஒரு விசேச அம்சமாகும். அவர்களின் தேடல் வளரும். செய்தித்தாள்களில் அறிவிக்கும் இலக்கியப் போட்டிகளுக்கு பிள்ளைகளை பங்கேற்க பரிந்துரை செய்யுங்கள். அப்பழக்கம் அவர்களின் அறிவு என்னும் தகவல் பெட்டி மேலும் பல தகவல்களை தெரிந்துக் கொள்ள வழி வகுக்கும்.
செல்போன்கள் வளராத அந்த காலத்தில் நம் முன்னோர்கள் செய்தித்தாள், புத்தகங்கள் மூலம்தான் பல விஷயங்களை தெரிந்துக் கொண்டு தம் அறிவை வளர்த்து கொண்டார்கள். செல்போன்கள் நமக்கு அத்தகைய வளர்ச்சியை கொடுத்தாலும் நம்மை சோம்பேறி ஆக்கிவிட்டது என்பதில் மாற்று கருத்து இல்லை. கற்றலுக்காக குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கும் நாம், அதை பயன்படுத்தும் சரியான நேரத்தை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.