
எருக்கன் செடி 12 ஆண்டுகள் வரை நீர் இல்லாமல் வாழும் தன்மை உடையது. எருக்கன் செடியில் உள்ள முற்றிய காய்கள் வெடித்து அதில் உள்ள பஞ்சுகள் ஆங்காங்கு சிதறி மண்ணில் புதைந்து அதிலிருந்து மற்றொரு எருக்கன் செடி வளர்கிறது. யாருடைய உதவியும் இன்றி தனது இனத்தை தானே வளர்த்துக் கொள்ளும் இந்த எருக்கன் செடிகள். எருக்கன் செடியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்றில் நீல நிறத்திலும், மற்றொன்றில் வெள்ளை நிறத்திலும் பூக்கள் பூக்கும். இதில் வெள்ளை நிறத்தில் பூக்கும் செடியின் வேர் அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது.
இந்தச் செடியின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாகக் கூறப்படுகிறது. திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் கோயிலில் வெள்ளெருக்கு தல விருட்சமாக உள்ளது. திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய தலங்களிலும் எருக்கன் செடியே தல விருட்சமாக உள்ளன. சூரிய பகவானின் தன்மையையும், சிவபெருமானின் அம்சமாகவும் வெள்ளெருக்கு பூக்கள் கருதப்படுகின்றன. சிவனுக்குரிய அஷ்ட புஷ்பங்களில் இந்த வெள்ளெருக்கு பூக்கள்தான் முதன்மையானது.
வெள்ளை எருக்கன் வேர்: வெள்ளை எருக்கன் செடியின் வேர் அதிர்ஷ்டத்தை தரும் என்று நம்பப்படுகிறது. ஆன்மிக நம்பிக்கைகளின்படி வெள்ளை எருக்கன் வேர் அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் ஈர்க்கும் சக்தி கொண்டது. வெள்ளை எருக்கன் வேரை வீட்டில் வைத்து வணங்க செல்வம் பெருகும். இந்த வேரை வீட்டில் வைத்திருக்க எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் நடைபெறும் என்று நம்பப்படுகிறது. வெள்ளெருக்கு செடியின் வேரில் விநாயகர் சிலையை செய்து வீட்டில் வைத்து வழிபட, செல்வம் பெருகும்.
வெள்ளெருக்கன் திரி: வெள்ளெருக்கு பட்டைகளில் செய்யப்படும் திரியை பயன்படுத்தி வீட்டில் விளக்கு ஏற்ற தீய சக்திகள் விலகும் என்பதும் நம்பிக்கை. வெள்ளெருக்கன் வேர் கட்டையை வீட்டு வாசலுக்கு முன்பாக கட்டிவிட தீய சக்திகள் மற்றும் திருஷ்டிகள் விலகிவிடும் என்று நம்பப்படுகிறது. வெள்ளெருக்கன் திரியை பயன்படுத்துவது விநாயகப் பெருமானின் அருளைப் பெற உதவும் என்றும், வீட்டின் நிதி நிலைமையை சீராக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
வெள்ளெருக்கன் நார்: பழங்காலத்திலிருந்தே எருக்கன் செடியின் நார் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இது மிகவும் உறுதியானது என்பதால் எருக்கன் நாரை வைத்து வில்லின் நாண், மீன் வலை ஆகியவற்றை தயாரித்து உள்ளனர். வெள்ளெருக்கன் செடியின் நாரைக் கொண்டு செய்யப்படும் கயிறு இடுப்பிற்கு அரைஞாண் கயிறாகப் பயன்படுத்தப்படுகிறது. திருஷ்டி படாமல் இருக்க இது கட்டப்படுகிறது. இது முக்கிய நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களைத் தூண்டி புத்துணர்வு தரும் என்றும் நம்பப்படுகிறது.
வெள்ளை எருக்கம் பூ: இறைவழிபாட்டில் வெள்ளெருக்கு மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளை எருக்கம் பூ விநாயகருக்கும், சிவபெருமானுக்கும் மாலையாக அணிவிக்கப்படுகிறது. சூரிய பகவானின் தன்மையயும், சிவபெருமானின் அம்சமாகவும் இந்த பூக்கள் கருதப்படுகின்றன. எருக்கத்தம்புலியூரில் விழாக் காலங்களில் வெள்ளெருக்கம் பூவால் பூஜிக்கப்படுகிறது.
அக்னி புராணத்தில் போருக்குச் செல்லும் மன்னர்கள் எருக்கம் பூ மாலை அணிந்து சென்றால் வெற்றி பெறுவர் என்று கூறப்படுகிறது.
ரதசப்தமி அன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி உண்டாயிற்று என்று புராணங்கள் கூறுகின்றன. அன்று சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராட வேண்டும் என்றும், ஏழு எருக்கம் இலைகளை கால்களில் 2, கைகளில் 2, தோள்பட்டைகளில் 2, தலையில் ஒன்றை வைத்து நீராட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொண்டும் நீராட செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.