
பற்களை பக்குவமாக பாதுகாப்பதை எல்லோரும் விரும்புவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பற்கள் அமைந்திருக்கும். அவைகள் சொல்லும் லக்ஷன குறிப்புகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
பற்கள் சங்கைப்போல வெண்மையாகவும், பிரகாசமாகவும், நுனி கூர்மையாகவும், நேரான ஒழுங்கான வரிசையாகவும் சிலருக்கு அமைந்திருப்பது உண்டு. அப்படிப்பட்டவர்கள் சுகவாசிகள் ஆகவும், சத்தியம் தவறாதவர்களாகவும், காலப்போக்கில் செல்வ வளங்களையும் வசதிகளையும் பெற்றும் மகிழ்வார்கள் என்கிறது சாஸ்திர கணக்கு.
பற்கள் ஒழுங்காகவும் வரிசை தப்பாமலும், நல்ல வெண்மை நிறத்துடனும் அமையப்பெற்றவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். பார்ப்பவர்களின் வாழ்வில் நல்லெண்ணத்தை உண்டாக்கக்கூடிய கவர்ச்சிகரமான நல்ல இனிய தோற்றத்தை பெற்று திகழ்வார்கள். இனிமையாக பேசுவது இவர்களது இயல்பாகவே அமைந்திருக்கும் என்கிறது சாஸ்திரம்.
பேச்சாற்றலையே ஆதாரமாகக் கொண்ட தொழில் துறைகளில் இவர்கள் முன்னேற்றம் அடைவார்கள் என்கிறது லட்சணம். இவர்களுள் சிலர் நீதிபதிகளாகவும், கலைஞர்களாகவும், கமிஷன் ஏஜெண்டுகள் ஆகவும் இருப்பார்களாம். இவர்களுக்கு அமையும் மனைவி அழகியாகவும், அறிவாளியாகவும் இருப்பாள் என்கிறது லட்சண சாஸ்திரம்.
பற்களுக்கு இடையே இடைவெளி அதிகமாக அமையப்பெற்றவர்கள் வெகுளிகளாகவும், ரகசியம் எதையும் காப்பாற்ற முடியாதவர்களாகவும் இருப்பார்கள். காரணமின்றி வளவளவென்று பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடையாகவும் பகையாகவும் இதுவே இருக்குமாம்.
பற்கள் அதிக நீளமாகவும், அகன்றும், பருத்தும் இருப்பவர்கள் எந்த காரியமாக இருந்தாலும் தம்முடைய காரியத்தை பக்குவமாக முடித்துக்கொள்வார்கள். இவர்கள் அடிக்கடி மனம் மாறும் குணம் உடையவர்களாகவும், உறுதியான சொல்லும் செயலுமற்றவர்கள் ஆகவும் இருப்பார்கள் என்கிறது லட்சண சாஸ்திரம்.
அரிசியைப் போன்று பல்வரிசைகள் சிறியதாகவும் அழகாகவும் அமைய பெற்றவர்கள் தமது வாக்கு திறமையினாலே எத்தகைய கஷ்டசாத்தியமான காரியத்தையும் எளிதாக முடித்துக் கொள்வார்களாம். இவர்கள் உள்ளத்திலே எத்தகைய ரகசியத்தையும் மறைத்து வைத்துக்கொண்டே அதை வெளியே காட்டிக் கொள்ளாமலேயே வஞ்ச உணர்வுடன் செயல்படுவதில் வல்லவர்களாக திகழ்வார்கள்.
பற்கள் இரண்டு வரிசைகளாக அமைய பெற்றவர்கள் மற்றவர்களின் உதவிகளை பெற்று தமது காரியத்தை சாதித்துக்கொள்வார்களே தவிர ஒருவருக்குமே உதவி செய்ய முன்வர மாட்டார்கள். இவர்கள் பலவாறான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வருவதோடு பொருளாதார சிக்கல்களால். பாதிக்கப்படுவார்கள்.
வரிசை தப்பிய தாறுமாறான பற்களை கொண்டவர்கள் அவசரக்காரர்கள் ஆகவும், ஆத்திரக்காரர்களாகவும் இருப்பதோடு முன் கோபம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது பற்களின் சாஸ்திரம்.
பல்வரிசை ஒழுங்கில்லாமல் இருப்பவர்கள் தெய்வ பக்தியற்றவர்களாகவும், பாவ புண்ணிய நம்பிக்கை அற்றவர்களாகவும் இருப்பார்கள்.
ஒன்றிரண்டு பற்கள் மட்டுமே இருந்து மற்றவை விழுந்துவிட்ட அவர்களுக்கு ஒன்றிரண்டு நற்குணங்கள் மட்டுமே அமைந்திருக்குமாம்.
முன்பல் விழுந்து விட்டாலும், பொக்கை வாயாக இருந்தாலும் இத்தகையவர் செய்ய துவங்கும் வேலைகள் துவங்கும்போது பிரமாதமாக இருந்தாலும் எந்த வேலையும் பூரணமாக நிறைவேறாமல் தடைப்பட்டுவிடும். வாழ்க்கையில் சகடயோகம் போல நிலையற்ற சுக துக்கங்கள் மாறி மாறி ஏற்பட்டுக் கொண்டிருக்குமாம்.
இவ்வாறு பற்களைப் பற்றிய லட்சண சாஸ்திரம் கூறுகின்றது.