
குழந்தைகள் பிறந்தது முதலே தாலாட்டு பாட ஆரம்பித்து விடுவார்கள். அது போல், பாடும் பொழுதே குழந்தைகள் கண்ணுறங்கி விடும். அப்படிப் பாடுவதால் குழந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
இசை மனதிற்கு குதூகலம், சௌகரியம், சந்தோஷம் கொடுக்க வல்லது. அத்துடன் செவிமடுத்தல், கிரகித்தல், உணர்தல், கவனித்தல், அனுசரித்தல், முகபாவனை, பொறுத்திருத்தல் போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது. சாதாரணமாக, குழந்தைகளை தூக்கி வைத்திருந்தால் நம் காதில் உள்ளது, கழுத்தில் உள்ள நகை, மூக்குத்தி, தோடு, காதை பிடித்து இழுத்தல், மூக்கை பிடித்து விளையாடுதல், முகத்தை, மூக்குக் கண்ணாடி போன்றவற்றை விளையாட்டுப் பொருளாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். மொத்தத்தில் குழந்தையை தூக்கி வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு ஒரு விளையாட்டு பொம்மை என்றே கூறலாம்.
குழந்தைகளுக்கு தான் விசேஷமானவர் என்ற உணர்வு முக்கியமாக இருக்கும். ஆதலால், குழந்தையை நன்றாக அறிந்து கொண்டு விளையாடும்போதும் அல்லது கதைக்கும்போதும், பாடும்போதும் குழந்தை முகத்தை திருப்பினால், வேறு எங்காவது பார்த்தால் நாம் வேறு புதிய முறையை கையாள வேண்டும். அந்த நேரத்துக்கு அதுதான் அவர்களின் விருப்பமாக இருக்கும். சைகையோடும் அதன் அர்த்தத்தையும் கூறிக் கொண்டு விளையாடினால், அதை அவர்கள் கவனித்துக் கேட்பார்கள்.
இசை கவனமாக காதால் கேட்கும் சக்தியை அதிகரிக்கும். புதிய சொற்களை கிரகிக்கச் செய்யும். பாடலிலும், நடனத்திலும் மறைந்திருக்கும் குதூகலம் மூலம் அவர்களின் உணர்வை உணர்ந்து கொள்ள முடிகிறது. குழந்தையின் அருகில் இருப்பவர்கள் பாடும்போது குழந்தையும் அவர்களைப் போல் அசைந்து தன்னளவில் பாடுகிறது. கூர்ந்து கவனித்தல், கிரகித்தல் ஆரம்பம் ஆகிறது. பாடுபவர்கள் பாடலை பாடி முடித்ததும் அல்லது இடையில் நிறுத்தினாலும் குழந்தை அதை தனக்கேற்ற முறையில் அனுசரித்துத் தொடர்ந்து பாடுகிறது. அனுசரித்தல் (Adapting) ஆரம்பமாவது இப்பொழுதுதான்.
அதேபோல், நேருக்கு நேர் முகத்தை நோக்கிப் பாடும்போது முகத்தை நோக்குதல் ஆரம்பமாகிறது. அதனுடன் முகபாவனையையும் புரிந்து கொள்கிறது. ஆதலால் நாம் சிரித்த முகத்துடன் அவர்களை அணுகுவது அவசியம். பாடுபவருடன் சேர்ந்து பிள்ளை பாடும்போது தனது பாடலைத் தானே கேட்டு மகிழ்கிறது. தன் பாடலை தானே கேட்பது செவிப்புலனுக்கு பயிற்சி ஆகிறது. தத்தத்தத்தா… என்று கூறிவிட்டு சிரிப்பதை நாம் கவனிக்க முடியும்.
பாடியவரின் பாடலைக் கேட்டு திரும்பப் பாடும்போது, தனது முறைக்குக் (Turn) காத்திருந்து பாடும். அப்போது, ‘தனது முறைக்குக் காத்திருத்தல்’ என்ற பழக்கத்தை அறிகிறது. பாடும்போது சில சொற்களை சொல்லாது இடைவெளி விட்டோம் என்றால் அதை குழந்தை நிரப்பும். பாடலை முகபாவனையுடன் நடித்து அசைத்து செய்கைகளுடன் பாடும்போது இவை அனைத்தும் பிள்ளையின் மூளையைத் தூண்டி விடுகின்றன (Brain Stimulation) என்று கூறப்படுகிறது.
எனவே, குழந்தைகளிடம் பாடுவதை தினசரி வாழ்வில் ஒரு பகுதியாக்க வேண்டும். இதனால்தான் அந்தக் காலம் முதல் குழந்தைகளின் தாலாட்டுப் பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். 8 அல்லது 9 மாதத்திற்கு உரிய குழந்தையை நாம் தூக்கி வைத்திருக்கும்பொழுது, அவர்கள் செய்யும் சேட்டை மற்றும் கவனிக்கும் முறையை பார்த்தால் அவர்கள் எவ்வளவு கூர்மையாக இருக்கிறார்கள் என்பதை நன்றாக புரிந்துகொள்ள முடியும்.