
‘முதல் முறை’ என்பது எந்த ஒரு விஷயத்திலும் அலாதியான ஒரு அனுபவம் தருவதாகும். முதன் முதலில் பள்ளி மற்றும் கல்லூரி செல்வது, சுற்றுலா செல்வது என்பது போல் முதன் முதலாக அலுவலகம் செல்லும்போது ஒருவித எதிர்பார்ப்புடன் கூடிய உற்சாகம் மனதில் இருப்பது பொதுவான ஒன்று. அப்படி அலுவலகத்தில் பணியில் சேரும் முதல் நாளில் நமது செயல்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
முதன் முதலில் அலுவலகம் செல்ல விரைவாக தயாராவதன் மூலமும் வெளிப்படையான மனதுடன் இருப்பதன் மூலமும், நீங்கள் ஒரு சிறந்த முதல் தோற்றத்தை உருவாக்கி, உங்கள் புதிய பணியில் வெற்றி பெற உங்களையே நீங்கள் உற்சாகப்படுத்திக் கொள்ளலாம். குறித்த பணி நேரத்திற்கு முன்பே சீக்கிரமாக அலுவலகம் வந்து சேருங்கள். தொழில் ரீதியாக நேர்த்தியான, தூய்மையான உடையணிந்து, தேவையான அனைத்து ஆவணங்களுடனும் அலுவலகத்தில் தயாராக இருங்கள்.
மேலாளரிடம் பேசும்போதும் மற்றும் கூட்டங்களின்போதும் தேவைப்படும் முக்கியமான விவரங்களை நினைவில் கொள்ள உதவும் வகையில் குறிப்புகளை தயார்படுத்தி உடன் எடுத்துக் கொள்ளுங்கள். பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், கேள்விகள் கேட்கவும், உங்கள் எண்ணங்கள், செயல்களை நிறுவன கலாசாரத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளும் வகையில் திறந்த மனதுடன் இருங்கள்.
அலுவலகத்தில் நுழைந்தவுடன் முதலில் மேலாளர் அறையில் உங்கள் வேலை வாய்ப்பு ஒப்பந்தம் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களில் நீங்கள் கையெழுத்திட வேண்டியிருக்கும். அடுத்து, மனிதவளம் அல்லது உங்கள் மேற்பார்வையாளரை சந்தித்து நீங்கள் இணைந்து பணி செய்யப்போகும் குழுவினருடன் அன்புடன் வரவேற்று அறிமுகம் செய்யப்பட்டு நீங்களும் அவர்களை அறிந்து கொள்ளும் அறிமுகப்படலம் நடைபெறும்.
பின்னர் அலுவலகம் முழுவதையும் சுற்றிப் பார்ப்பீர்கள். சந்திப்பு அறைகள், ஓய்வு அறைகள், உணவகம் மற்றும் கழிப்பறைகள் போன்ற முக்கியமான பகுதிகளை முன்னிலைப்படுத்தி அவற்றின் வசதிகளை நோட்டமிடலாம். உங்களுக்கான பணியிடம் (கேபின்) ஒதுக்கப்படும். மேலும், உங்கள் உபகரணங்களான கணினி அல்லது மடிக்கணினி போன்றவை உங்களுக்குக் கொடுக்கப்படும்.
நிறுவன மென்பொருள், அமைப்புகள் மற்றும் கருவிகள் குறித்து நீங்கள் பயிற்சி பெறலாம். உங்கள் மேற்பார்வையாளர் உங்கள் பணி பொறுப்புகள், எதிர்பார்ப்புகள் மற்றும் இலக்குகளை கோடிட்டுக் காட்டுவார். அவருடன் செயல்திறன் அளவீடுகள் மற்றும் உங்கள் வெற்றி எவ்வாறு அளவிடப்படும் என்பதைப் பற்றி நீங்கள் விவாதிக்கலாம். உங்கள் நிறுவனத்தின் கலாசாரம், கொள்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றிய கண்ணோட்டத்தை அறியும் ஆவலுடன் சக பணியாளரின் ஆதரவை அணுகுவீர்கள்.
அலுவலகத்திற்குள் பாதுகாப்பாக நுழைவதற்கு நீங்கள் ஒரு அடையாள அட்டை அல்லது அணுகல் அட்டையைப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பணியாளர் சலுகைகள், காப்பீடு மற்றும் பிற சலுகைகள் பற்றிய தகவல்களை நீங்கள் அறிய முற்படலாம். பணி குறித்த எந்த சந்தேகத்தையும் மேலாளர் அல்லது அது குறித்து அறிந்த சக பணியாளரிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்.
இறுதியாக, அலுவலகம் செல்லும் முதல் நாளில் அமைதியான வீட்டு சூழலும் உற்றாரின் வாழ்த்துகளும் முதல் நாள் பணியின் டென்ஷனைக் குறைக்கும்.