
மழை பெய்யும்போது இடி இடிக்கும். அப்பொழுது மக்கள் அர்ஜுனனின் பத்து தலைகளைப் பற்றி பேசுவது ஒரு நாட்டுப்புற நம்பிக்கை என்றும், இது ஒரு மூடநம்பிக்கை என்றும் கூறுகிறார்கள். அர்ஜுனனின் பத்து தலைகளுக்கும் இடி மின்னலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று கேலி, கிண்டல் பண்ணுவதை பார்த்திருக்கிறோம். உண்மையில் இது மூடநம்பிக்கை அல்ல; அறிவியல் பூர்வமான நம்பிக்கையும் கூட. அது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
இடி இடிக்கும்போது, ‘அர்ஜுனன் தலை பத்து’ என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? காண்டவ வனத்தை எரிக்க அர்ஜுனன் முயற்சிக்கும்போது அவனுடன் கண்ணனும் இருந்தார். கண்ணன் துணையுடன் அர்ஜுனன் அந்த வனத்தை எரிக்க முயன்றபோது தேவலோகத்தின் அரசன் இந்திரன் இந்த செயலுக்கு எதிராக இடி, மழை, மின்னல் போன்ற இயற்கை சக்திகளை அனுப்பி அர்ஜுனனை தடுக்க முயன்றார். ஆனால், இடி, மழை, மின்னல் போன்ற தடைகளையும் தாண்டி காண்டவ வனத்தை எரித்து வெற்றி கொண்டான் அர்ஜுனன். அந்த அர்ஜுனனுக்கு பத்து பெயர்கள் உண்டு.
தனஞ்ஜயன், விஜயன், சுவேத வாகனன், கிரீடி, பீபத்சு, சவ்யசாசி, அர்ஜுனன், பல்குணன், ஜிஷ்ணு, பார்த்தன் என்ற 10 பெயர்கள் அர்ஜுனனுக்கு உண்டு. இந்த பத்து பெயர்களையும் கூறினால் பாதுகாப்பாக அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்பதற்காகவே அந்த பத்து பெயர்களையும் சொல்லும் முகமாக இடி இடிக்கும்போது அர்ஜுனன் தலை பத்து என்று கூறுகிறார்கள்.
ஆனால், இதில் ஒரு அறிவியல் விளக்கமும் உண்டு. இடி இடிக்கும்பொழுது காதில் 'ஙொய்ங்' போன்ற ஒலியை கேட்டிருப்போம். இது காது அடைப்பதைக் குறிக்கும். இதிலிருந்து தப்பிப்பதற்கு ‘அர்ஜுனா’ என்று கூறுவதுதான் சரி. ஏன் தெரியுமா? 'அர்' என்று சொல்வது நம் நாக்கை மேல்தாடையை தொட்டு வைக்கும். இதனால் காற்று இயக்கம் தொடங்குகிறது. 'ஜு' என்றால் வாய் சிறிது குவிந்து, காற்று வெளிப்பட ஆரம்பிக்கிறது. 'னா' என்றால் வாய் முழுவதும் திறந்து, காற்று வெளியே சென்று காதுக்கு உள்ளே காற்று அழுத்தத்தை சமன்படுத்துகிறது. இதனால்தான், ‘அர்ஜுனா’ என்ற வார்த்தை காது அடைப்பிலிருந்து நம்மை காப்பாற்றும் என்று உணர்ந்துதான் நம் முன்னோர்கள், 'அர்ஜுனா' என்ற பெயரை இடி இடிக்கும்பொழுது துணைக்கு அழைத்தார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
* இடி, மின்னல் ஏற்படும்பொழுது பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விட வேண்டும். மரங்கள் மற்றும் உலோக வேலிகள் போன்ற மின்னல் தாக்கும் அபாயம் உள்ள இடங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
* இடி, மின்னலின்பொழுது மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* காரில் இருந்தாலோ கதவுகளை மூடி விட்டு பயணத்தை நிறுத்தி சிறிது நேரம் காத்திருக்கலாம்.
* இடி, மின்னலின்பொழுது வீட்டிற்குள் இருப்பது பாதுகாப்பானது.
* இடி மின்னலின்போது செல்போன்களை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
* திறந்தவெளியில் இருந்தால் இடி இடிக்கும்பொழுது அருகில் உள்ள கான்கிரீட் கட்டடங்களுக்குள் சென்று விடலாம்.