
உடல் வலிமையைப் போலவே மன வலிமையும் ஒருவருக்கு மிகவும் முக்கியம். மன வலிமை உள்ளவர்களுக்கு என்றே சில சிறப்புப் பண்புகள் உள்ளன. எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்கள் பிறரிடம் எதிர்பார்க்காத 6 விஷயங்கள் என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மன வலிமை என்பது உணர்ச்சிகளுக்கு சட்டென்று ஆளாகாமல் நிதானத்தையும் பக்குவத்தையும் கடைபிடிக்கும் மனப்பான்மையைக் குறிக்கிறது. அசாதாரணமான சூழலில் கூட மன வலிமை உள்ளவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். அவர்கள் தங்கள் மனம் காயப்பட்டிருக்கும் நிலையில் கூட பிறரிடம் சில விஷயங்கள் எதிர்பார்க்கவே மாட்டார்கள்.
1. அன்பும் பாசமும்: உண்மையான அன்பும் பாசமும் கட்டாயப்படுத்தி வருவதில்லை என்பதை மன வலிமை உள்ள மக்கள் புரிந்து கொள்கிறார்கள். பிறரிடம் அதை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. தன் மேல் உண்மையான பாசம் வைத்திருப்பவர்கள் அதை எந்தவித நிர்ப்பந்தமும் இன்றி வெளிப்படுத்துவார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால் போலியான மனிதர்களிடம் ஒருபோதும் அதை எதிர்பார்க்க மாட்டார்கள்.
2. மரியாதை: உணர்ச்சி ரீதியாக உறுதியாக இருக்கும் நபர்கள் எந்த ஒரு உறவிலும் மரியாதை என்பது ஒரு அடிப்படை உரிமை என்று நம்புகிறார்கள். பிறரை அவர்கள் கண்ணியமாக நடத்துகிறார்கள். ஆனால், அதற்குப் பதிலாக தங்களை அவர்கள் கண்ணியமாக, மரியாதையாக நடத்த வேண்டும் என்று கெஞ்சுவதோ அல்லது எதிர்பார்ப்பதோ இல்லை. தங்களுக்கான எல்லைகளை அமைத்து கொண்டு தங்களை அவமரியாதை செய்யும் நபர்களையும் சூழ்நிலைகளையும் விலக்கி வைக்கிறார்கள்.
3. கவனம் மற்றும் நேரம்: தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் போன்ற அன்பானவர்களிடம் இருந்து தனக்கான தனிப்பட்ட கவனத்தையும் நேரத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. தங்களை உண்மையாகவே மதிக்கும் நபர்கள் அதற்காக நேரம் ஒதுக்குவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ‘எனக்கு நேரம் ஒதுக்கி என்னிடம் பேசு’ என்று அவர்கள் யாரிடமும் கெஞ்சுவதில்லை.
4. பிறருடைய நடத்தையில் மாற்றம்: மற்றவருடைய செயல்களை தங்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதை மன வலிமை உள்ள நபர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். பிறரிடம் இருக்கும் தீங்கான நடத்தையை நிறுத்தவோ அல்லது அதற்காக அவர்களை மாற்றிக்கொள்ளும்படி கெஞ்சுவதோ அறிவுறுத்துவதோ இல்லை. தம் மனம் புண்படும்படி சிலர் பேசினாலோ, நடந்து கொண்டாலோ அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும், தன்னிடம் தன்மையாக நடக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்துவதுமில்லை, எதிர்பார்ப்பதும் இல்லை.
5. பிறருடைய மதிப்பீடு: தன்னுடைய பலம், பலவீனம் போன்றவற்றை நன்றாக அறிந்து வைத்திருக்கும் மனவலிமை உள்ள நபர்கள் பிறரிடம் அதற்கான மதிப்பீடுகளை எதிர்பார்ப்பதில்லை. ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றி தனக்குத்தான் நன்றாக தெரிய வேண்டுமே அல்லாமல் பிறருக்கு அல்ல. மன வலிமை உள்ள நபர்கள் தங்களுடைய தீர்மானங்கள், செயல்கள், முடிவுகள் போன்றவற்றில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். பிறர் அதைப் பற்றிய கருத்துக்களையோ அல்லது மதிப்பீடுகளையோ தர வேண்டும் என ஒருபோதும் எதிர்பார்ப்பது இல்லை.
6. மன்னிப்பு: மன வலிமை உள்ள நபர்கள் தாங்கள் செய்யும் சிறு தவறுக்குக் கூட வருந்துவதும் அதற்காக மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டார்கள். ஆனால், அதே சமயம் தன்னை யாராவது புண்படுத்தினால் அல்லது தீங்கு செய்தால் பிறர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியே மன்னிப்புக் கேட்டாலும் அதில் உண்மை இருக்காது. பொய்யான செயல் என்று அவர்களுக்குத் தெரியும். காலப்போக்கில்தான் அவர்கள் தாங்கள் செய்த செயலை உணர்வார்கள். எனவே, வெறும் ஃபார்மாலிட்டிக்காக மன்னிப்பு கேட்பதை அவர்கள் விரும்புவதில்லை. இந்த ஆறு குணங்களும் அமையப்பெற்றவர்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள்.