
பட்டுச்சேலைகளை அடித்துத்துவைப்பதை தவிர்க்கவும். இப்படிச்செய்தால் பட்டுச்சேலையை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியாது.
குளிர்பானங்கள், இரசக்கற்பூரம், உப்புத்தண்ணீர், வேர்வைத்தண்ணீர் போன்றவை உங்கள் உடைகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காக்கி, மற்றும் நீலநிற சீருடைகளில் படியும் எண்ணெய்ப் பிசுக்கு நீங்க, ஒரு ஷாம்பு பாக்கெட் எடுத்து, சிறிதளவு நீரில் விட்டு நன்றாக நுரை வரும்படி அடித்து, எண்ணெய்க்கறை படிந்த துணிகளை ஒரு அரைமணிநேரம் ஊறவைத்து எடுத்து, பின்னர் டிடர்ஜென்ட் சோப் உபயோகப்படுத்தித் துவைத்து அலசினால் எண்ணெய்க்கறைகள் தேடினாலும் கிடைக்காது.
பட்டுப்புடவைக்கு பயன்படுத்தும் ரவிக்கையை, வேறு புடவைகளுக்கு பயன்படுத்தாமல் இருந்தால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
மழை, குளிர்காலங்களில் துவைத்து காயவைத்த துணிகள் காய்ந்திருந்தாலும் ஜில்லென்றுதான் இருக்கும். அவைகளை மடித்து கம்பளியினுள் சுருட்டி வைத்துவிட்டு,
மூன்று மணி நேரம் கழித்து உடுத்திக்கொண்டால், வெயிலில் காயவைத்த துணிகள்போல மொறுமொறுப்பாக இருக்கும்.
ஆறுமாதத்துக்கு ஒருமுறை பட்டுச்சேலையின் மடிப்பை மாற்றி வைக்கவேண்டும். இப்படிச் செய்தால் பட்டுச்சேலைகளை நீண்ட நாட்களுக்கு பயன் படுத்தலாம்.
பட்டுப்புடவைக்கு மட்டுமல்ல, எந்த சேலைக்கும் உயர்ரக சோப்புத்தூளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
பட்டுச்சேலைகளுக்கும், உயர்தர ஆடைகளுக்கும் பெட்டி போடும்போது மிதமான சூட்டில் பெட்டி போடவும்.
உயர்ரக ஆடைகளில் எண்ணெய்க்கறையோ, கிரீஸ், தாரோ பட்டுவிட்டால் அவற்றைத் துவைக்கும்போது சிறிது சொட்டு நீலகிரி தைலம் விட்டுக்கழுவினால் கறைகள் அகன்றுவிடும்.
விசேஷங்களில் கலந்துகொண்டு பிறகு வீட்டில் வந்த உடனே உடுத்திக்கொண்ட பட்டுப்புடவையை உடனே அலமாரியில் எடுத்து வைக்கக்கூடாது. வெளியே கொஞ்ச நேரம் காற்றாட வைத்துவிட்டுத்தான் உள்ளே எடுத்து வைக்கவேண்டும்.
பழுப்பேறிய வெள்ளைத் துணிகளை வெண்மையாக்க ஒரு எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து கால்வாளி சூடு தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்துப் பின் அலசி உலர்ந்துங்கள். பிறகு பாருங்கள் அதன் வெண்மையை.
வீட்டில் சரிகை, காட்டன், மற்றும் பட்டுப்புடவை, வேஷ்டி இஸ்திரி செய்யும்போது, சரிகைப் பகுதியை ஒரு நியூஸ் பேப்பர் விரித்துச் செய்யவேண்டும். இதனால் ஏற்படும் 'ஷாக்' தடுக்கப்படும். இரும்புச் சரிகையில் இஸ்த்திரி செய்யும்போது ஷாக் அடிக்கும் வாய்ப்பு உண்டு என்பதை நினைவில் வையுங்கள்.