கலகலவென்று பேசிக்கொண்டிருக்கும் சத்தம் அப்பா வீட்டுக்குள் நுழைந்தவுடன் நின்று போகிறது. குடும்பத்தார் ஆளுக்கொரு திக்காகச் சென்று தங்கள் வேலைகளைத் தொடர்கிறார்கள். இது பல வீடுகளில் அரங்கேறும் காட்சிதான்.
அப்பாக்கள் இருக்கும் போது வீடு அமைதியாக இருப்பதும், அவர் வெளியேறியதும் பேச்சும் சம்பாசனை நிகழ்வதும் அப்பா என்பவர் ஒரு சர்வாதிகாரி என்கிற தோற்றத்தை ஏற்படுத்தும். அப்பாவின் மௌனமும், ஏன் அப்பாவின் வாழ்க்கையு ம் கூட பெரும்பாலும் புரிந்துகொள்ளப்படுவதில்லை.
அப்பா என்பவர் கண்டிப்பு காட்டவேண்டும் என்கிற அவசியம் கூட கிடையாது. அவர் இருப்பே மௌனத்தின் போர்வையாக வீடுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அம்மாவைப் போற்றுவதும், கொண்டாடுவதும் அவர்களது வாழ்நாளிலேயே நிகழ்கிறது. ஆனால் அப்பாவின் அர்ப்பணிப்பும், அன்பும், ஆதரவும் அவர் மறைந்த பிறகு தான் பலருக்கும் புரிகிறது.
எதை ஒன்றையும் பார்த்தவுடன் சுவைத்தவுடன், கேட்டவுடன் ஆகா ஓகோ என்று தங்கள் மனங்களைத் திறந்து வாய் விட்டுச் சொல்வது ஆண்களுக்கு இயல்பில்லை. இதனால் அவர்கள் ரசனையற்றவர்கள் என்று அர்த்தமில்லை. அவர்கள் அதனை மனதுக்குள் உள்வாங்கிக் கடந்து செல்கிறார்கள். உடனடியாக வெளிப்படுத்தி ஆர்ப்பரிப்பதில்லை. சின்னஞ்சிறிய மாறுபாடுகளையும் மாற்றங்களையும் சம்பவங்களையும் அனுபவித்து உணர்வுகளை வெளிக்காட்டிக் கொண்டே இருப்பது ஆண்களின் இயல்பன்று.
தந்தை தன்னை வெளிக்காட்டிக்கொள்ளத் தெரியாவிட்டாலும் குடும்பத்தாரின் அன்பை ஆராதிப்பைப் புரிந்து கொள்ளாதவர் இல்லை. தங்களது ஆழ்ந்த ஈடுபாட்டின் மூலம் அதனை அந்த குடும்பத்திற்கு அவர்கள் திருப்பித்தருகிறார்கள். அதனை அளவிடவும் வெளிப்பார்வைக்கு தெரியாமலும் போவதால் மதிப்பீடற்ற செயலாகப் போகிறது அவர்களது வாழ்க்கை.
தனது கடமையுணர்வை, ஈடுபாட்டை புரிந்துகொள்ளாத குடும்பத்தாருக்கா இவ்வளவு மெனக்கெட்டோம் என்று மனதுக்குள்ளேயே மாய்ந்து போகிறார்கள் தந்தைமார்கள். இப்படி உள்ளே பூட்டி வைத்த உணர்வுகளே மன அழுத்தம் தந்து அவர்களின் இதயத்தைத் தாக்குகிறது. ஐம்பது-அறுபது வயதை நெருங்கும் போது எந்த கெட்ட பழக்கம் இல்லாதவர்களுக்கும் இதயத்தில் அட்டாக்கோ, அடைப்போ ஏற்படுத்துகிறது.
எந்த நாளையும் நிகழ்ச்சியையும் கொண்டாடி மகிழும் மனோநிலையும் ஆண்களுக்கு குறைவு. இந்த ஆண்களின் இயல்பை பெண்களும், குடும்பங்களும் புரிந்து கொள்வதில்லை. அன்பும் பாசமும் இல்லாத ஜடப்பொருளாக ஆண்கள் இருக்கிறார்கள் என்கிற அபிப்பிராயம் வளர்ந்து ஆண்களை குடும்பத்திலிருந்து அந்நியப்படுத்தி விடுகிறது. குடும்பத்தாரின் ஈடுபாடு குறையும் போது தன் இயல்பால், மேலும் விலகி செல்லும் அப்பாக்களால், இவ்விரிசல் பள்ளத்தாக்காக மாறிவிடுகிறது.
குடும்பத்தாரின் ஒவ்வொருவரின் தேவையையும் உணர்ந்து தனது தேவைகளை ஆசைகளை புறந்தள்ளி செயல்படுவர்கள் அப்பாக்கள். அவர் கால் கடுக்க நடந்து சென்றாலும் பையனுக்கு விலை உயர்ந்த பைக்கை வாங்கித்தர தயங்கியதில்லை. தனக்கு குறைவான விலையில் துணி எடுத்துக்கொண்டு மனைவி மற்றும் மகளுக்கு சிறந்த அடைகளை வாங்கித்தருவார் தந்தை. இந்த தியாகங்கள் கவனிக்கப்படுவதேயில்லை.
அப்பாக்கள் அவர்களது இயல்பை மீறி ஒரு கொண்டாட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்ள ஒரு தன் முனைப்பு, பாவனை வேண்டும். விரும்பாத, தெரியாத, புரியாத செயல்களை, சில சமயங்களில் அப்பாக்கள் சிலர் தன்னை வருத்தி செய்தாலும் அதன் செயற்கை தன்மை அவர்களை அம்பலபடுத்திவிடும். என்னப்பா உனக்கு டான்ஸ் ஆடவே தெரியலேயே என்று உடனடியாக எழும் கிண்டல் அவர்களை மேலும் கூட்டுக்குள் அடக்கிவிடுகிறது.
குடும்பத்தார் ஒவ்வொருவருக்கும் எது நன்மை பயக்கும் என்று தனது பட்டறிவு மூலம் பார்த்து பார்த்து செய்கிறார் அப்பா. வீட்டில் உள்ளவர்கள் தங்கள் விருப்பம் சார்ந்து அப்பாவின் அறிவுரையை கேட்காமல் நடக்கும் போது தன்னை உதாசீன படுத்துவதாக நினைக்கிறார் அவர். தனது அனுபவத்தை, தொலைநோக்கை அவர்கள் மதிப்பதில்லை என்கிற எண்ணம் தோன்றுகிறது.
ஒரு அப்பா தன் மகனுக்காக மகளுக்காக எவ்வளவு அவமானத்தையும் தாங்கிக்கொள்ள துணிவார். அவை பிள்ளைகளுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார். இதனாலேயே குழந்தைகளுக்கு அவரது தியாகம் புரியாமல் போகிறது. வேறு யாரோ ஏதாவதொரு சந்தர்பத்தில் அதை தெரிவிக்கும் போது குடும்பத்தாருக்கு அவை தெரிகின்றது. அப்போது தான் அவரது தியாகத்தை உணர்கிறார்கள். அவரை புரிந்துகொள்ளவில்லையே என்று மிகவும் வேதனைப் படுகிறார்கள். ஆனால் அதற்குள் காலம் கடந்து விடுகிறது. .