ஆலோசனைகளை விட அருகாமையே மருந்தாகும்: ஆறுதலின் மௌன மொழி!

The silent language of comfort
The silent language of comfort
Published on

வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் செல்வதில்லை. சில நேரங்களில் பாதை மேடு பள்ளமாக இருக்கும், சில நேரங்களில் பாதை எதுவென்றே தெரியாத அளவுக்கு இருள் சூழ்ந்துவிடும். மனமே பாரமாகி, மூச்சு விடக்கூட சிரமப்படும் அந்த இக்கட்டான நேரத்தில் ‘ஒரு மனிதனுக்குத் தேவைப்படுவது அறிவுரைகள் அல்ல. ஆலோசனைகள் பெரும்பாலும் ஆறுதலைத் தருவதில்லை. அருகில் இருந்தாலே போதும்’ என்கிறார் புகழ்பெற்ற எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே.

அறிவுரைகள் ஏன் கசக்கின்றன?

நமக்கு நெருக்கமான ஒருவர் சோகத்தில் இருக்கும்போது, நாம் பதற்றமடைகிறோம். எப்படியாவது அவர்களை அந்தச் சோகத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்ற வேகத்தில், "இதைச் செய், அதைச் செய்யாதே", "நடந்தது நடந்துவிட்டது, இனிமேல் கவலைப்பட்டு என்ன பயன்?" என்று வரிசையாகப் பேச ஆரம்பித்துவிடுவோம்.

ஆனால், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு இந்த வார்த்தைகள் ஒரு பயனும் தராது. அவர்களுக்கு தமது பிரச்சனை என்னவென்றும், பெரும்பாலும் அதற்கான தீர்வும் தெரிந்திருக்கும். அவர்களுக்குத் தேவைப்படுவது ஒரு வழிமுறை அல்ல, மாறாக, தங்கள் மன பாரத்தை அப்படியே கொட்டித் தீர்க்க ஒருவர் தான். நாம் அறிவுரை சொல்லத் தொடங்கும்போது, "உன் உணர்வுகளை விட நான் சொல்லும் தீர்வுதான் முக்கியம்" என்று சொல்வது போல அமைந்துவிடுகிறது. இது அவர்களை இன்னும் தனிமைப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
சொத்துக்களை நல்ல விலைக்கு விற்க உதவும் வாஸ்து பரிகாரங்கள்!
The silent language of comfort

மௌனமும் அருகாமையும்

துன்பத்தில் இருப்பவர்களுக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி, அவர்களுடன் அமைதியாக அமர்ந்திருப்பதுதான். எந்தக் கேள்வியும் கேட்காமல், "ஏன் இப்படிச் செய்தாய்?" என்று ஆராயாமல், வெறும் ஆதரவாக அருகில் அமர்ந்திருப்பது கோடிக்கணக்கான வார்த்தைகளை விடச் சக்தி வாய்ந்தது.

அவர்களுக்குத் தேவைப்படும் அந்த 'நிழல்' போன்ற துணையாக நாம் மாற வேண்டும். "நான் இருக்கிறேன், நீ எதற்கும் கவலைப்படாதே" என்பதை நம் கண்கள் சொல்ல வேண்டும். மௌனமாக அவர்களுடன் ஒரு கோப்பைத் தேநீர் அருந்துவது அல்லது அவர்களின் கைகளைப் பிடித்துக் கொள்வது அவர்களுக்குள் "நான் தனியாக இல்லை" என்கிற நம்பிக்கையை விதைக்கும். அந்த நம்பிக்கைதான் அவர்களைத் தானாகவே அந்தத் துன்பத்திலிருந்து மீட்டு வரும்.

சரி செய்ய முயலாதீர்கள்

நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு குணம், எதையும் உடனே 'சரி' செய்ய நினைப்பது. ஒரு காயம் ஏற்பட்டால் மருந்திடலாம், ஆனால் மனக் காயத்திற்குத் தேவை மருந்தல்ல, ஆறுதல். துன்பத்தை ஒரு பிரச்சனையாகப் பார்க்காமல், அது கடந்து போக வேண்டிய ஒரு அனுபவமாகப் பாருங்கள். அவர்கள் அழும்போது அழட்டும், புலம்பும்போது கேட்கட்டும். நாம் அவர்களுக்கு தீர்வு சொல்ல வேண்டிய அவசியமில்லை. சொல்வதை காது கொடுத்து கேட்டால் போதும்.

உண்மையான பிணைப்பு

கஷ்டத்தில் மனிதர்கள் தேடுவது நம்மைப் புரிந்து கொள்ளும் ஒருவரைத்தான். உலகம் முழுவதும் நம்மைப் பகைத்தாலும், நமது கஷ்டத்தைப் புரிந்து கொண்டு, பேசாமல் நம் அருகில் அமர்ந்திருக்கும் ஒரு ஜீவன் இருந்தால், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும் நாம் கடந்துவிடலாம்.

இதையும் படியுங்கள்:
சோப்புக்கு ஜோடி சேர்ந்த உப்பு... கரெக்டா யூஸ் பண்ணா கறையெல்லாம் காலி!
The silent language of comfort

"எல்லாம் சரியாகிவிடும்" என்று சொல்வதை விட, "சரி ஆகாத வரை நான் உன்னுடன் இருப்பேன்" என்று சொல்வதில் தான் அதிக அன்பு இருக்கிறது. ஆலோசனைகள் மூளைக்குச் செல்லும், ஆனால் அருகாமை இதயத்திற்குச் செல்லும். இருண்ட தருணங்களில் விளக்கைத்தேடி ஓடுவதைவிட, அந்த இருட்டில் தவிக்கும் ஒருவருடன் கைகோர்த்து அமர்ந்திருப்பதுதான் மனிதாபிமானம். ஆலோசனைகளைத் தவிர்த்து, அன்பைப் பகிர்வோம். அந்த மௌனமான புரிதல்தான் உலகிலேயே மிகச்சிறந்த ஆறுதல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com