

வேறொரு இடத்திற்கு போக வேண்டியதன் அவசியம் காரணமாகவோ அல்லது புதிய வீடு வாங்கி குடிபோக எண்ணுவதாலோ நாம் இருக்கும் வீட்டை விற்க திட்டமிடுவோம். ஆனால் சில சமயம் வீடு அல்லது பிற சொத்துக்களை விற்பதற்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் விற்காமல் இழுத்தடித்துக் கொண்டே செல்லும். நல்ல விலைக்கு விரைவில் நம் சொத்துக்களை விற்க வேண்டுமானால் சில எளிய வாஸ்து பரிகாரங்கள் செய்ய பலன் கிடைக்கும்.
பிரதான நுழைவாயிலாக இருக்கும் கதவு வீட்டின் முக்கியமான அம்சமாகும். வாஸ்துவிலும் இதற்கு முக்கியத்துவம் அதிகம் உண்டு. பிரதான கதவு வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருப்பது அதிர்ஷ்டமாக நம்பப்படுகிறது. எனவே ஒருவர் வீட்டை வாங்கும் பொழுது வீட்டின் பிரதான நுழைவாயில் எந்த திசையை நோக்கி இருக்கிறது என்பதை பார்ப்பார்கள். எனவே விற்க விரும்பும் வீட்டின் பிரதான கதவை சரி செய்வது மிகவும் முக்கியம்.
வீடு இருண்டு இருப்பதைவிட சரியான வெளிச்சம் இருப்பது மிகவும் முக்கியம். நாள் முழுவதும் சூரிய வெளிச்சம் வீட்டிற்குள் விழுவது போன்ற வீடுகளை வாங்குவதற்கு யாரும் தயங்க மாட்டார்கள். அப்படி சரியான அளவில் சூரிய வெளிச்சம் வராமல் இருக்கும் வீடுகளுக்கு செயற்கை விளக்குகளைப் பயன்படுத்தி வெளிச்சமுடன் பிரகாசமாக வைத்திருக்க எளிதில் விற்பனை ஆகிவிடும்.
அடுத்ததாக வாஸ்து சாஸ்திரத்தில் வண்ணங்கள் மிகவும் முக்கியமானவை. வெளிர் நீலம், வெள்ளை, வெளிர் பச்சை போன்ற பிரகாசமான மற்றும் மகிழ்ச்சியான வண்ணங்கள் நேர்மறை ஆற்றலை தூண்டி வீடு வாங்க நினைத்து வருபவர்களை கவர்ந்திழுக்கும். எனவே வீட்டில் பிரகாசமான வண்ணங்களை அடிப்பது எளிதில் விற்பனைக்கு வழிவகுக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் தூய்மை மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அசுத்தமான வீடு எதிர்மறை ஆற்றலை இழுக்கும் என்பதால், வீடு வாங்க வருபவர்கள் அதனை தவிர்த்து விடுவார்கள். எனவே வீட்டை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்க வேண்டியது அவசியம். வீட்டை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்தால் வீடு வாங்க வருபவர்கள் வீட்டை பார்த்ததும் அதன் நேர்மறையான ஆற்றலை உணர்ந்து விரைவில் வீடு விற்கப்படும்.
சமையலறை தென்கிழக்கில் அமைந்திருக்க வேண்டும். அப்படி அமையவில்லை என்றால் சமையலறையை வடமேற்கு திசையில் அமைக்கலாம். சமையலறையில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் வீட்டின் செழிப்பை அதிகரிக்கும். பெண்கள் அதிக நேரம் புழங்கும் இடமான சமையலறையை சுத்தமாக வைத்திருப்பது நேர்மறை ஆற்றலை கூட்டும். இதேபோல் கழிவறை மற்றும் குளியலறையை சுத்தமாகவும், நல்ல நிலையிலும் பராமரிப்பது வீட்டை விற்க நினைக்கும் பொழுது உடனடியாக நல்ல விலைக்கு போகும்.
வீட்டை வாங்க வருபவர்கள் வருகை தரும் சமயம் இனிமையான மெல்லிசை சப்தங்களை உருவாக்க மணிகள் அல்லது இனிமையான பாடல்களை ஒலிக்கச் செய்யலாம். வாசனை மெழுகுவர்த்திகள், ஊதுபத்திகளை பயன்படுத்தலாம். இது வீட்டிற்குள் நுழையும் பொழுது ஒரு நேர்மறையான அனுபவத்தை, எண்ணங்களைக் கொடுக்கும்.
பசுமையான செடிகள், தாவரங்கள் நல்ல ஆற்றலை வீட்டிற்குள் பரவவிடும். அத்துடன் வீட்டின் தோற்றத்தையும் மேம்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தில் தாவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வீடு சிறியதாக இருந்தாலும் பால்கனி, கிச்சன் போன்ற இடங்களில் அழகாக சில தாவரங்களை பராமரிப்பது வீட்டின் தோற்றத்தை மேம்படுத்துவதுடன், வாங்க வருபவர்களின் மனதில் ஒரு புத்துணர்ச்சியையும், நேர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும்.
அத்துடன் நாம் விற்க நினைக்கும் வீட்டை, சந்தை போக்குகளின் அடிப்படையில் விலையை நிர்ணயிப்பதும், நமக்கு பணி சூழல் காரணமாக அலைய நேரமில்லை என்றால் சரியான ரியல் எஸ்டேட் முகவரை தேர்ந்தெடுப்பதும் அவசியம். ஆன்லைனிலும் விளம்பரப்படுத்தலாம்.