
2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 35 கோடி வயதானவர்கள் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொருளாதாரம், உடல் நலம், சமூகப் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இத்தகைய பிரச்னைகளை தவிர்ப்பதற்கான 5 வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. பொருளாதார ரீதியாக தயாராக இருங்கள்: மக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் குழந்தைகள், கார், வீடு என பல்வேறு விஷயங்களில் பெரும் பணத்தை செலவிடுகின்றனர். ஆனால், ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வது மற்றும் சிறந்த ஒருங்கிணைந்த காப்பீடு செய்வதால் வயதான காலத்தில் யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய தேவை இருக்காது என்பதால் இத்தகைய காப்பீடு திட்டங்களை இளமையிலேயே செய்து விடுவது மிகவும் நல்லது.
2. உணவு முறையில் கவனம் செலுத்துங்கள்: சரிவிகித உணவு முறை ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பதோடு, நோயிலிருந்து நம்மைக் காப்பதோடு, மற்றவர்களை சார்ந்து இருப்பதற்கான தேவைகளையும் குறைப்பதோடு, மன நலனையும் மேம்படுத்துகிறது. ஆகவே, எப்பொழுதும் சிறந்த உணவு நடைமுறையை கடைபிடித்து சுயசார்போடு இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
3. உடற்பயிற்சியை புறக்கணிக்கக் கூடாது: உடல் சார்ந்த வேலைகளை வயதானவுடன் குறைத்துக் கொள்வதால் நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. ஆகவே, இலகுவான உடற்பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சியை வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக வயதானவுடன் மாற்றிக் கொள்ளுங்கள்.
4. நண்பர்கள் மற்றும் சமூக தொடர்புகளை பேணுதல்: வேலை அல்லது கல்வியில் குழந்தைகள் பரபரப்பாக இருப்பது அல்லது வீடுகளில் இருந்து தொலைவில் இருப்பது போன்ற காரணங்களால் அவர்களால் வயதானவர்களுடன் நேரத்தை சரிவர செலவிட முடியாது. அத்தகைய சூழ்நிலையில் வயதானவர்கள் அவர்களுக்கென்று, அதாவது அண்டை வீட்டார் நண்பர்கள் ஆகியோருடன் ஒரு சமூக வட்டத்தை உருவாக்கிக்கொள்வது மிகவும் முக்கியம்.
5. உங்களை பிஸியாக வைத்துக்கொள்ளுங்கள்: சில சமயங்களில் வயதான காலகட்டத்தில் ஒருவர் தங்களைக் குறித்து அவ்வளவாக கவனம் செலுத்த மாட்டார்கள் என்பதோடு, அவர்களுடைய கருத்துக்கள் பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாது. இது வயதானவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும் என்பதால் எப்போதும் ஒரு பொழுதுபோக்கை கையில் எடுத்துக்கொண்டு உங்களை நீங்களே பிஸியாக வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. இது மன அழுத்தத்தை குறைப்பதோடு வயதானவர்களை ஆக்டிவாக வைத்துக்கொள்ள உதவி வாழ்க்கை தரம் மேம்பட உதவிகரமாக இருக்கும்.
வயதானாலும் நான் இப்படித்தான் இருப்பேன் என்ற கொள்கையை விட்டு மேற்கூறிய 5 நடைமுறைகளை கையாள்வதன் மூலம் வயதானவர்கள் ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கலாம்.