‘பாலிண்ட்ரோம்’ (Palindrome) என்ற வார்த்தைக்கு ‘இருவழியொக்கும் சொல்’ என்று பொருள். அதாவது, ஒரு வார்த்தையை முன்புறமிருந்து பின்புறமாக வாசித்தாலும் பின்புறம் இருந்து முன்புறம் நோக்கி வாசித்தாலும் ஒரே பொருள் தரும். ஒரு வார்த்தையை எந்த வகையில் வாசித்தாலும் எழுத்துகள் மாறாமல் வார்த்தைகள் அமைந்த சொற்களை ‘பாலிண்ட்ரோம்’ என்று அழைக்கிறார்கள்.
தமிழ் மொழியில் இதுபோல பல சொற்கள் உள்ளன. உதாரணமாக, இதில் விகடகவி என்பது மிகவும் பிரபலமான சொல்லாகும். முதல் எழுத்திலிருந்து கடைசி எழுத்து வரை வாசித்தாலும் கடைசி எழுத்தில் தொடங்கி முதல் எழுத்து வரை வாசித்தாலும் ஒரே அர்த்தம் தரும் சொல் இது.
இதுபோலவே தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை முதலான தமிழ்ச் சொற்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. இதுபோல ஆங்கிலத்தில் RADAR, MADAM, NOON, REFER, POP, NUN என்று பலப்பல சொற்கள் உள்ளன.
சொற்கள் மட்டுமில்லாமல், இந்த வகையில் தொடர்களும் உள்ளன. உதாரணமாக, தமிழில் தோடு ஆடுதோ, மாடு ஓடுமா, சேர அரசே முதலான தொடர்களைச் சொல்லலாம். இவற்றை எப்படி வாசித்தாலும் பொருள் மாறாது.
ஆங்கிலத்திலும் இதுபோன்ற சொற்டொடர்களும் உள்ளன. A man, a plan, a canal – Panama என்ற ஆங்கில வாக்கியத்தை பின்புறமிருந்து வாசித்தாலும் அதே பொருளைத் தரும். இதுபோலவே Was it Eliots toilet I saw ?, No, it can, as it is, it is a war. Raw as it is, it is an action, Dammit, I’m Mad முதலான வாக்கியங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
தமிழ் மொழியில் 'மாலைமாற்று' ஒரு யாப்பு வடிவம் ஆகும். முதலிலிருந்து இறுதிவரை அமைந்த ஒரு பாடல் அடியை இறுதியிலிருந்து திருப்பி அப்படியே வாசித்தால் அமையும் பாடலே மாலைமாற்று என அழைக்கப்படுகிறது.
திருஞானசம்பந்தப் பெருமான் பதினொரு பாடல்களைக் கொண்ட ஒரு பதிகத்தை திருமாலைமாற்று திருப்பதிகம் என்று செய்து அருளியுள்ளார். பொதுவாக, மாலைமாற்று இரண்டு அடிகளிலேயே பாடப்படும். இது சித்திரக்கவி வகையைச் சேர்ந்தது.
‘யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா’
பாடல் 1 - திருஞானசம்பந்தப் பெருமான்
மாலைமாற்று வகைப் பாடலை சிலர் நான்கடிகளிலும் பாடியுள்ளனர். அவர்களுள் ஒருவர் அரசன் சண்முகனார். இவர் இயற்றிய ஒரு மாலைமாற்றுப் பாடலை கீழே காணலாம்.
‘வேறல மேலவ வாமன மாவய வேதறுவீ
நாறுச மாகய நாடுர வேள்கவி பாடுறமா
மாறடு பாவிகள் வேரடு நாயக மாசறுநா
வீறுத வேயவ மானம வாவல மேலறவே’
வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் மட்டுமின்றி தேதிகளிலும் பாலிண்ட்ரோம்கள் உள்ளன. உதாரணமாக, 22.02.2022 என்ற தேதியை பின்புறமாக இருந்து வாசித்துப் பார்த்தாலும் அதே நாள் மாதம் வருடத்தை மாற்றாமல் காண்பிக்கும்.