
கெய்சர் பலரது வீடுகளில் தினசரி பயன்பாட்டில் வந்துவிட்டது. அதனால் பொதுவாக கெய்சரை எவ்விதம் பயன்படுத்துவது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். குளிக்கும் நேரத்தில் கெய்சரை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஈரமான இடங்களில் மின்சார சாதனங்கள் பயன்படுத்தும்போது அதிகப்படியான கவனம் அவசியம். அவை பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும். திடீரென்று உயரும் வெப்ப நிலை மற்றும் திடீர் மின்சார அதிர்ச்சிகளை தவிர்க்க, குளியலறைக்குச் செல்லும் முன் கெய்சரை அணைத்து விடுவது நலம்.
குளியலின்போது தண்ணீரின் வெப்பநிலை ஒரே சீரான நிலையில் இருக்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 2023ம் ஆண்டில், சர்வதேச மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவில், ஆரோக்கியமான நபர்களிடையே திடீர் வெப்பநிலை மாற்றங்கள், நீராவியில் இருந்து குளிர்ந்த நீருக்கு மாறுவது போன்றவற்றின் விளைவை ஆய்வு செய்தது. திடீரென்று மாறும் நீரின் வெப்பநிலைகள் மாரடைப்பு, ஸ்ட்ரோக், நரம்பு மண்டலம் பாதிக்கப்படுதல் உள்ளிட்ட மிக ஆபத்தான மருத்துவக் நிலைக்கு கொண்டு செல்லக் கூடும்.
குளிக்கும்போது கெய்சர் அணைக்கப்படாமல் இருந்தால் சில சமயங்களில் தண்ணீர் அதிகம் சூடாகி, திடீரென்று வெளிப்படும்போது சருமத்தில் சூட்டு காயங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். குளிக்கும் நேரத்தில் சில நிமிடங்களுக்கு முன்னர் கெய்சரை அணைத்து விடுவது, தண்ணீரை ஒரே சீரான வெப்ப நிலையில் இருக்க வைக்கிறது. இதனால் உடலை பாதிக்கும் திடீர் வெப்ப நிலை மாற்றங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.
திடீரென்று சூடான நீரோ அல்லது அதிக குளிர்ந்த நீரோ உடலில் படுவது, இதயத் துடிப்பை அதிகரித்து, இரத்த ஓட்டத்தில் பாதிப்பை கொடுக்கும். இரத்த நாளங்கள் திடீரென்று சுருங்கி தேவையற்ற அழுத்தத்தை உண்டுபண்ணும். அடிக்கடி படபடப்பால் பாதிக்கப்படும் நபர்கள், ஒரே மாதிரி வெப்ப நிலைக் கொண்ட நீரினை பயன்படுத்துதான் அவர்களின் இதயத்திற்கு பாதுகாப்பானதாக இருக்கும். அடிக்கடி வெந்நீரில் குளிப்பவர்களின் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை வறண்டு போய், வறட்சியுடன் காணப்படும்.
கெய்சரை அணைப்பதால் கிடைக்கும் நன்மைகள்: சில நிமிடங்கள் கெய்சரை அணைப்பதால் உள்ளே இருக்கும் தண்ணீர் ஒரே மாதிரியான வெப்பநிலைக்கு வரும். நீராவி கொதிநிலையில் இருந்து வெது வெதுப்பான வெப்ப நிலையில் குளிப்பதுதான் உடலின் பாகங்களுக்கும் சருமத்துக்கும் ஏற்றது. இது தேவையற்ற மன அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது. இரத்த ஓட்டத்தையும் சீரான நிலையில் பராமரிக்க ஏதுவாக இருக்கிறது. அதை விட முக்கியமாக எப்போதும் இது பாதுகாப்பானது. என்றாவது மின் கசிவு, மின்சார தாக்குதலுக்கு ஆளாவதில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
கெய்சரை பயன்படுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகள்:
1. கெய்சரின் மின் இணைப்புகளை மாதம் ஒரு முறையாவது சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
2. மின் இணைப்புகள், தண்ணீர் பகுதிகளில் படாத வண்ணம் உயரத்தில் இருக்க வேண்டும்.
3. சாதாரண நேரங்களில் பாதுகாப்பின்றி கெய்சரை தொட்டுப் பார்க்க வேண்டாம்.
4. கெய்சரின் வெப்பநிலை 35 டிகிரி முதல் 45 டிகிரி வரையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அதற்கு மேல் போக வேண்டாம்.
5. கெய்சரிலிருந்து வரும் தண்ணீரை முதலில் கைகளால் தொட்டு, சூடு தாங்கும் நிலையை அறிந்த பின்னர் குளிக்கலாம். எடுத்த உடனேயே ஷவரை திறந்து தலையைக் காட்டி விட வேண்டாம்.
7. ஈர உடலுடன் எப்போதும் கெய்சரை தொடவே கூடாது. ஏதேனும் பழுது ஏற்பட்டால் நீங்களாக சரி செய்ய முயற்சிக்க வேண்டாம். தகுந்த நிபுணரை வைத்து சரி செய்து கொள்ளுங்கள்.