

பொதுவாக, வீட்டில் மகளோ அல்லது மகனோ இருந்தால் திருமண வயது வரும்போது பெற்றோர்கள் வரன் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பெண்ணாக இருந்தால் 20 வயது முடிந்த உடனே ஆரம்பித்து விடுவார்கள், மகனாக இருந்தால் 24 அல்லது 25 வயதில் தொடங்கி விடுவார்கள். ஒரு 20 வருடத்திற்கு முன்னால் இருந்த சூழ்நிலை வேறு, இப்போது இருக்கிற சூழ்நிலை வேறு. அப்போதெல்லாம் பெண்ணுக்கு வரன் பார்க்கும்போது மாப்பிள்ளை ஒரு 10000 அல்லது 15000 சம்பாதித்தாலே போதுமானதாக இருந்தது. ஆனால், இப்போதைய சூழ்நிலை அப்படி இல்லை. பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி ஓரளவிற்கு பணத்தை சேர்த்து வைத்து எல்லாவற்றிற்கும் அவர்கள் தயாரான பிறகுதான் அவர்களை திருமணம் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு, வேண்டாததை எல்லாம் பேசி அவர்களை வற்புறுத்தக் கூடாது. அதற்காக 30 வயசு 35 வயசு போக வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. நீங்கள் முதலில் அவர்களுக்கு ஒரு ஹின்ட் கொடுத்து விடுங்கள். ‘அடுத்த வருடம் உனக்குத் திருமணம் செய்யலாம் என்று இருக்கிறோம், அதற்கு ஏற்றவாறு நீ உன்னை தயார்படுத்திக்கொள்’ என்று கூறி விடுங்கள். அவர்களுக்கு ஒரு வருடம் காலத்தையும் கொடுங்கள்.
அவர்கள் தானாகவே அதற்குள் அதற்கு ஏற்றவாறு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய ஆரம்பிப்பார்கள். அப்படி இல்லை என்றால் ‘இன்னும் ஒரு ஆறு மாதம் எனக்கு எக்ஸ்டெண்ட் பண்ணுங்கள்’ என்று கூறினால் அதையும் செய்யலாம். அதை விட்டுவிட்டு வேண்டாததை அவர்களிடம் கூறி குழப்பாதீர்கள்.
திருமணம் செய்து கொள்வதற்காக பிள்ளைகளிடம் என்னென்ன கூறக் கூடாது என்பதை இனி பார்க்கலாம்.
* ‘உன்னுடைய தாத்தா, பாட்டிக்கு வயதாகிறது. இன்னும் ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஆனாலும் ஆகிவிடலாம். ஆகவே, அதற்குள் திருமணம் செய்துகொள்’ என்று சிலர் கூறுவார்கள். நிச்சயமாக இதேபோல் கூறவே கூடாது. ஒருவர் இறந்து விடுவார் என்பதற்காக எந்த நிலையிலும் தயாராகாத ஒரு மகளையோ அல்லது மகனையோ கட்டாயப்படுத்தி நிர்பந்தம் செய்யும்போது நிச்சயமாக அந்த வாழ்க்கை அவர்களுக்கு நன்றாகவே அமையாது.
* ‘அடுத்த வருடம் நம்மிடம் பணம் இருக்குமோ இருக்காதோ தெரியாது. இப்போது இருக்கிறது. ஆகவே, நீ திருமணம் செய்து கொள்’ என்றும் கூறக் கூடாது. பணம் வரும், போகும். நிலையானது என்று எதுவுமே கிடையாது. ஏற்றத்தாழ்வு கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். அதற்காக எந்தவித ஏற்பாடும் இல்லாமல் மேலும் தெளிவாக இல்லாமல் இருக்கும்போது குழந்தைகளுக்கு திருமணம் செய்யக் கூடாது. இதைப் போன்ற வார்த்தையை அவர்களிடம் அடிக்கடி கூறிக் கூறி அவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யக் கூடாது.
* அடுத்தபடியாக, எல்லோருடைய வீட்டிலும் சொல்லப்படுகின்ற வசனம் எது தெரியுமா? ‘பெரியம்மா பையனுக்கு ஆகிவிட்டது... பெரியப்பா பையனுக்கு ஆகிவிட்டது... அடுத்த வீட்டு பையனுக்காகி விட்டது...’ என்றெல்லாம் கூறி அடுத்தவர்களோடு ஒப்பிட்டுக் கூறுவார்கள். எக்காரணத்தைக் கொண்டும் திருமணத்தை மட்டும் அடுத்தவர்களோடு ஒப்பிடவே கூடாது. அவரவர் வீட்டு சூழ்நிலைக்கேற்றவாறுதான் எந்தக் காரியமாக இருந்தாலும் செய்ய வேண்டும். அடுத்தவர்களோடு ஒப்பிட்டு திருமணத்தை கட்டாயப்படுத்தி செய்யாதீர்கள்.
* இன்னொரு பொதுவான வார்த்தை, ‘இது ரொம்ப நல்ல வரன். இதற்குப் பிறகு இதைப்போல கிடைக்குமோ கிடைக்காதோ தெரியாது. அதனால் இப்பவே திருமணம் செய்துகொள்’ என்று தயவு செய்து கூறாதீர்கள். இதை விட நல்ல வரன் ஏன் வராது? நிச்சயமாக வரும்.
ஆகவே, பெற்றோர்களே தயவுசெய்து திருமண விஷயத்தில் உங்களின் வசதிக்காகவோ சுயநலத்திற்காகவோ அல்லது அடுத்தவர்களை ஒப்பிட்டோ அல்லது சமுதாயத்திற்காகவோ குழந்தைகளை கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு சிறிது அவகாசம் கொடுங்கள். அப்படி நீங்கள் கொடுத்தீர்களேயானால் அதற்குள் அவர்கள் சிறிது சேமித்துக் கொண்டு மனநிலையிலும் தன்னை தயார் செய்து கொள்வார்கள். அந்த நேரத்தில் நீங்கள் திருமணம் செய்தீர்களேயானால் நிச்சயமாக ஒரு நல்ல வாழ்க்கையை அந்த குழந்தைகள் வாழ்வார்கள்.