
மாத வருமானம் உள்ளவர்களுக்கு மாதாமாதம் வாடகை கொடுத்து வீடு பிடிப்பதில் பிரச்சனை இருக்காது. சம்பளம் வந்ததும் கொடுத்து விடுவார்கள். ஆனால் வியாபாரம் செய்பவர்களுக்கும், சொந்தமாக பிசினஸ் செய்பவர்களுக்கும் மாத வாடகை கொடுப்பதில் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
வியாபாரத்தில் சில சமயம் நிறைய வருமானம் வரும். சில சமயம் ஒன்றுமே இருக்காது; பிசினஸ் டல் அடிக்கும். சில சமயம் எதிலாவது முதலீடு செய்ய வேண்டி இருக்கும். எனவே வியாபாரம் செய்பவர்கள் வாடகை வீட்டிற்கு செல்வதை விட ஒரு தொகையை கொடுத்து ஒத்திக்கு (lease) ஒப்பந்தம் செய்துவிட்டால் மாதம் பிறந்தால் வாடகை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
அத்துடன் ஒத்தி முடியும் சமயம் கொடுத்த தொகையை அப்படியே வாங்கிக் கொள்ளலாம். அது வியாபாரத்திற்கும் உதவும் என்பதால் பெரும்பாலானவர்கள் ஒத்திக்கு செல்வதைத்தான் விரும்புகிறார்கள்.
வாடகைக்கு வீடு தேடுவது போல் ஒத்திக்கு வீட்டை பார்த்து முடிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. காரணம், வாடகை வீட்டிலிருந்து நம்மால் எப்போது வேண்டுமானாலும் வெளியேற முடியும். ஏதேனும் சிக்கல், பிரச்சனை என வந்தால் கூட குறைந்த அளவிலேயே நஷ்டமும், மன கஷ்டமும் ஏற்படும். ஆனால் ஒப்பந்தம் போட்டு ஒத்திக்கு இருக்கும் வீட்டிலிருந்து ஒப்பந்த காலத்திற்கு முன்பு வெளியேறுவது முடியாத காரியம். ஒத்திக்கு செல்லும் பொழுது லட்சக்கணக்கில் பணத்தை உரிமையாளரிடம் கொடுத்திருப்போம். ஒப்பந்த காலம் முடிந்த பின்புதான் வீட்டு உரிமையாளர் பணத்தை திருப்பிக் கொடுப்பார். அதனால் ஒப்பந்த காலத்திற்கு முன்பு திடீரென வெளியேற முடியாது.
எப்பொழுதும் 11 மாதங்கள் என்ற அளவில் தான் லீஸ் ஒப்பந்தம் போடப்படும். 11 மாதங்கள் முடிந்து அதே வீட்டில் குடியிருக்க இரு தரப்பினருமே விரும்பினால் ஒப்பந்தத்தை மேலும் 11 மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். அப்படி நீட்டிக்கும் பொழுது ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் லீஸ் தொகையை அதிகமாக கேட்கும் வாய்ப்புள்ளது. எனவே குடியிருப்பவர்கள் அதை விரும்பினால் அதே வீட்டில் குடியிருக்கலாம். இல்லாவிடில் லீஸ் தொகையை திரும்ப பெற்றுக் கொண்டு வேறு வீட்டை லீசுக்கு பிடிக்கலாம்.
லீசுக்கு குடியிருப்பவர்களை உடனடியாக காலி செய்ய சொல்ல முடியாது. அவர்களுக்கு 3 மாதங்கள் வரை கால அவகாசம் தந்து விட்டு அதற்குப் பிறகே காலி செய்ய சொல்லலாம்.
அதேபோல்தான் வீட்டை லீஸ் எடுத்தவருக்கு பணத்தை திருப்பி தர வீட்டின் உரிமையாளருக்கு 3 மாதங்கள் அவகாசம் தரவேண்டும்.
அடுத்ததாக வீட்டை ஒத்திக்கு முடிக்கும் முன்பு சட்டரீதியாக சில விஷயங்களை செய்ய வேண்டும். வீட்டின் உரிமை ஆவணங்களை (Title Deeds) முழுவதும் வாங்கி சரிபார்த்து வீட்டை ஒத்திக்கு விடும் நபர் சரியானவர் தானா, அவருக்கு அந்த வீட்டின் மீது ஏதேனும் கடன் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு ஒத்திக்கு பணம் கொடுக்க வேண்டும்.
பெரும்பாலானவர்கள் ஒத்திக்கு செல்வதைைத்தான் விரும்புகிறார்கள். இதனால் மாதா மாதம் வாடகை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒத்திக்கு செல்லும் பொழுது சில லட்சங்களை வீட்டு உரிமையாளரிடம் கொடுக்கிறோம். அந்த பணத்திற்கு எந்த அளவு பாதுகாப்பு உள்ளது என்பதை குறித்து சிந்திக்க வேண்டும். என்னதான் ஒப்பந்தம் போட்டாலும் நாம் வீட்டை காலி செய்யும்போது பணம் முழுவதுமாக கைக்கு வந்து சேருமா என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்ற பின் ஒத்திக்கு செல்வதே சிறந்தது. காரணம் சில சமயம் ஒப்பந்தம் முடிந்ததும் வீட்டு உரிமையாளர்தான் பெற்ற ஒப்பந்தத் தொகையை திருப்பி அளிக்க முன்வராமல் இருப்பார். அப்படி அவர் மறுத்து விட்டால் அவர் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை சட்ட ரீதியாக எடுத்து பணத்தை திரும்பப் பெறலாம்.