
இரவு நேர தூக்கம் என்பது இன்றிமையாதது. இரவில் சரியாக தூங்கினால்தான் அடுத்த நாள் நம்மால் சரிவர வேலை செய்ய முடியும். நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வாகவும், நிதானமாகவும் இருப்பது நாம் தூங்கும் போதுதான். தூக்கம் என்பது மிகவும் அவசியம்.
தூக்கத்தை கெடுக்கும் விஷயங்கள்:
தூக்கமின்மை என்பது தூங்குவதில் ஏற்படும் சிக்கல்களை குறிக்கும். பெரும்பாலும் ஒழுங்கற்ற தூக்க நேரங்கள், அதிகப்படியான செல்போன் உபயோகிப்பது, அதிகளவு காபி பருகுவது, நேரங்கழித்து இரவு உணவு எடுத்துக் கொள்வது போன்றவை தூக்கத்தை கெடுப்பதுடன், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.
நேரத்தில் ஒழுங்கை கடைபிடிப்பது:
தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதும், அதேபோல அதிகாலையில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டால் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். இரவு எவ்வளவு தாமதமாக கூறினாலும் காலையில் எழுந்து கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யவது:
படுக்கைக்கு செல்வதற்கு ஒருமணி நேரம் முன்பு செல்போன் உபயோகிப்பதை நிறுத்திவிடலாம். மனதை அமைதியாக்க இனிமையான இசையை கேட்கலாம். நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். விரும்பினால் ஒரு குளியல் போடலாம். இவையெல்லாம் நம் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்து ஆழ்ந்த உறக்கம் வர உதவும்.
உடற்பயிற்சி மற்றும் தியானம்:
பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருப்பது இரவில் நல்ல உறக்கத்தைக் கொண்டு வரும். தினமும் அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்வதும், படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பே உடற்பயிற்சி செய்வதை நிறுத்துவதும் நல்லது.
தியானம் நம் கவனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் மன அழுத்தத்தையும், சுற்றித்திரியும் எண்ணங்களையும், உணர்வுகளையும் குறைத்து கட்டுப்பாட்டில் வைக்கும். ஆழமாக மூச்சை இழுத்து, பின்பு மெதுவாக வெளியே விடுவது நம் உடலையும் மனதையும் லேசாக்கும்.
படுக்கையறை சூழலை கண்காணிக்கவும்:
நாம் உறங்கும் அறை சத்தமாகவோ, விளக்கு வெளிச்சத்தில் பிரகாசமாகவோ, அதிக குளிராகவோ, சூடாகவோ இருந்தால் சத்தத்தை குறைப்பதும், பிரகாசமான விளக்குகளை அணைப்பதும், அறையின் வெப்பநிலையை சரி செய்வதும் நல்ல உறக்கத்தைப்பெற உதவும். படுக்கைக்கு செல்வதற்கு முன்பு அமைதியான சூழலில் சிறிது நேரம் செலவிடுவது மனதை அமைதிப்படுத்துவதுடன் நல்ல உறக்கம் வரச்செய்யும்.
தவிர்க்க வேண்டியது:
நாள் முழுவதும் வேலை பார்த்த பின்பு நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வாகவும், நிதானமாகவும் இருப்பது நாம் தூங்கும் சமயத்தில்தான். அதுவும் குறிப்பாக இரவு நேரத்தில் தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது. தூங்குவதற்கு முன்பு அதிக உணவை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். வயிறு முட்ட இருந்தால் தூக்கம் வராது.
பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிர்த்து எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்வது நம்முடைய தூக்கத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.
காப்பி, டீ, எனர்ஜி பானங்கள் போன்ற காஃபின் கலந்த பானங்களை தூங்குவதற்கு 4 மணி நேரம் முன்பு குடிக்காமல் தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தூங்குவதற்கு முன் தவிர்ப்பது நல்லது.
படுக்கைக்கு செல்வதற்கு முன் மொபைல் போன், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.