
கிரைண்டர்: மிக்சி, கிரைண்டர் போன்றவற்றில் அவை காலியாக இருக்கும்போது இயக்குவதையும் வேறு ஏதேனும் சாமான்கள் போட்டு வைத்துக்கொள்ள உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும். கிரைண்டருடன் பொருத்தப்பட்ட பெல்ட் தளர்வடையும்போது மோட்டாரை நகர்த்தி பெல்ட் டென்ஷனை சரி செய்யலாம். அரவை நேரத்தை குறைக்க எப்பொழுதும் அரைக்க வேண்டிய பொருட்களை குறைந்தது 5 மணி நேரம் முன்னதாகவே ஊற வைக்க வேண்டும்.
மிக்சி: மிக்சியை தினமும் நாம் ஒரு முறையாவது பயன்படுத்துகிறோம். அரைத்து முடித்ததும் பிளேடை நன்றாகக் கழுவ வேண்டும். மிக்சியில் பிளேடு பொருந்தும் இடத்தின் இடைவெளிகளில் அரைக்கும் பொருட்கள் தங்கிவிடும். இதைத் தவிர்க்க அரைத்து முடித்தவுடன் மறுபடியும் சிறிது தண்ணீர் மட்டும் மிக்சி ஜாரில் விட்டு ஒரு சுற்று ஓட விட வேண்டும். பிளேடு சுற்றும் இடைவெளிகளில் உள்ளவை தண்ணீரோடு சேர்ந்து வந்துவிடும். மிக்சியும் சுத்தமாகிவிடும். வாடையும் அடிக்காது. அவை கெட்டியாக ஒட்டிக்கொண்டு இறுகி விடாமலும் இருக்கும்.
ரெப்ஜிரேட்டர்: பிரீசரில் ஜீரோ டிகிரி முதல் 4 டிகிரி வரை வெப்பநிலையும் மற்ற இடங்களில் 4 முதல் 14 டிகிரி வரை வெப்பநிலையும் இருப்பதால் அங்கு வைக்கப்படும் பொருட்களின் தன்மை கெடாமல் அப்படியே இருக்கிறது. இதுதான் உணவுப் பொருட்கள் கெடாமல் இருப்பதற்குக் காரணம் ஆகிறது. எவ்வளவு பொருட்களை வைக்க முடியுமோ அத்தனையும் அடக்கமாக வைக்க வேண்டும். அப்போதுதான் அதை திறக்கும்போது அதிகமான குளிர் தன்மை வெளியே போகாது. அவை பொருட்களிலேயே தங்கிவிடும். இதனால் மீண்டும் குளிர் நிலையை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்காது. மின்சாரமும் சிக்கனமாக செலவாகும். கிறிஸ்பரில் காய்கறிகளையும், செல்ஃபில் உணவுப் பொருட்களையும், ப்ரீசரில் ஐஸ்கிரீமையும், கதவு பகுதியில் பாட்டில்களையும் வைக்க வேண்டும்.
வாஷிங் மெஷின்: துவைக்கவிருக்கும் துணிகள் மிஷினில் கொள்ளளவிற்குள் இருக்குமாறு பார்த்து, உயர் ரக டிடர்ஜெண்டுகளை உபயோகித்து, கிழிந்த துணிகளை தைக்காமல் போடாமல், வோல்டேஜ் பிரச்னைகள் உள்ளபோது மெஷின் போடுவதை நிறுத்தி, சரியான வோல்ட்டேஜில் போட்டு எடுக்கவும்.
தையல் மிஷின்: மிஷின் பாகங்களுக்கு அடிக்கடி எண்ணெய் போட்டு சுத்தம் செய்ததும் மிஷினில் ஒரு பழைய துணியை வைத்து தைப்பதன் மூலம் எண்ணெய் பிசுக்குகள் நீங்கி சுத்தமாகும். இதனால் புது துணி தைக்கும்பொழுது சிரமமில்லாமல் இருக்கும்.
மின்விசிறி: வீட்டினுள் ஒரே அறையில் மின்விசிறியையும் எக்ஸாஸ்ட் ஃபேன்னையும் பொருத்தும்போது எக்ஸாஸ்ட் ஃபேன், சீலிங் ஃபேனை விட மிக நல்ல உயரத்தில் இருக்குமாறு பொருத்த வேண்டியது அவசியம். நான்கு பிளேடுகளைக் கொண்ட மின்விசிறிகளை விட மூன்று பிளேடுகளுடன் கூடிய மின்விசிறிகளில்தான் காற்றின் அளவு நன்றாக இருக்கும். அலுமினியம் மற்றும் பைபர் கிளாஸால் ஆன பிளேடுகள் பொருத்தினால் ஃபேன் துருபிடிக்காமல் இருப்பதுடன் பராமரிப்பும் சுலபமாகும்.
வாட்டர் ஹீட்டர்: வாட்டர் ஹீட்டரின் உள்பகுதியும் வெளிப்பாத்திரமும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் செய்யப்பட்டதாக இருக்குமாறு பார்த்து வாங்கினால் பராமரிப்பு செலவு ஓரளவு மிச்சமாகும். வீட்டு உபயோகத்திற்கு ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர்தான் சிறந்தது.
மைக்ரோவேவ் ஓவன்: ஓவனில் சூடு செய்யும்போது அந்தந்த பொருளுக்குத் தேவையான பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும். கெட்டியான கண்ணாடி பவுல், போரோசிஸ், செராமிக் பாத்திரங்களை உபயோகிக்கலாம். ஒவ்வொரு பொருளுக்கும் அதனதன் வெப்பநிலையை உபயோகிக்க வேண்டும். மைக்ரோவேவ் முறையில் சமைக்கும்போது பாத்திரம் சூட்டை உறிஞ்சுவதில்லை. சமைக்கப்பட வேண்டிய உணவே உஷ்ணத்தை உறிஞ்சி கொண்டு வேக ஆரம்பிக்கிறது. குறைந்த எண்ணெய், நெய் உபயோகித்தாலும் சரியான நேரத்தையும் பவரையும் அமைத்துவிட்டு நடுநடுவே உணவுப் பொருட்களை வெளியே எடுத்து கலந்து விட்டு வைத்தால் உணவு தீய்ந்து போவதும் குழைவதும் ஆகாது.
ஏ/சி: வீட்டு ஏசியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும். ஸ்ப்ளிட் ஏசியை 15 நாளுக்கு ஒரு முறை பில்டரை கழற்றி தண்ணீரில் சுத்தம் செய்து மாட்ட வேண்டும். இதனால் இடையூறு இல்லாமல் கூலான காற்று வரும். 27 டிகிரியிலும் நல்ல குளுமையை தரக்கூடிய ஏசிதான் தரமானது. 27 டிகிரியில் வைக்கும்போது மூச்சு திணறுவது போல் உணர்ந்தால் அது சரியாக சர்வீஸ் செய்யாததால் இருக்கலாம். உடனே சர்வீஸ் ஆட்களை அழைத்து மிஷினில் கேஸ் போதுமான அளவோடு உள்ளதா என்று தெரிந்து கொண்டு இல்லை என்றால் நிரப்பி சரி செய்து கொள்ள வேண்டும்.
இதுபோல் வாங்கி வைத்திருக்கும் மின்சார பொருட்களை சரிவர பராமரித்தால் ஷாக் அடிக்குமோ வேறு ஏதாவது தொந்தரவு ஏற்படுமோ என்று பயப்படாமல் வேலை செய்யலாம்.