சிலர் எந்த நேரமும் சுத்தம் பேண தங்கள் கைகளை கழுவியவண்ணம் இருப்பார்கள். சிலர் சந்தேகத்துடன் கதவின் பூட்டை அடிக்கடி ஆட்டிப் பார்ப்பார்கள். சிலர் அதீத பய உணர்வுடன் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வார்கள். இதுபோன்ற எல்லை மீறிய செயல்களுக்குக் காரணம் அவர்களுக்கு உள்ள பாதிப்பான அப்செசிவ் கம்பல்சிவ் கோளாறு (OCD) என்பதை அறிவீர்களா?
அப்செசிவ் கம்பல்சிவ் கோளாறு (OCD) என்பது கவலை, நிச்சயமற்ற தன்மை மற்றும் அவ்வப்போது பீதி போன்ற உணர்வுகளைத் தொடர்ந்து எழும் தேவையற்ற எண்ணங்களை உள்ளடக்கிய பாதிப்பு ஆகும்.
உதாரணமாக கிருமிகள் அல்லது மாசுபாடுகள் பற்றிய அச்சம், எதையாவது மறந்து விடுவோமோ, இழந்துவிடுவோமோ என்ற பயம், ஒருவரின் நடத்தை மீதான கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்ற பயம், மற்றவர்கள் அல்லது தன்னைப் பற்றிய ஆக்கிரமிப்பு எண்ணங்கள், செக்ஸ், மதம் அல்லது தீங்கு சம்பந்தப்பட்ட தேவையற்ற தடைசெய்யப்பட்ட எண்ணங்கள் உள்ளிட்ட பலவித அறிகுறிகளுடன் இவர்கள் இருப்பார்கள்.
பொதுவாக, அசாதாரணமான இந்த நிலை ஒரு நபரை பரபரப்பு மற்றும் அன்றாட வாழ்வின் நிர்பந்தங்களின் சுழற்சியில் சிக்கிக்கொள்ளச் செய்கிறது. இது அவர்கள் நினைக்கும் மற்றும் நடந்துகொள்ளும் விதத்தை பாதிக்கிறது. நீண்டகால கோளாறான இதில் பாதிக்கப்பட்ட நபர் கட்டுப்படுத்த முடியாத மற்றும் தொடர்ச்சியான எண்ணங்களை அனுபவிக்கிறார்.
பெரும்பாலான OCD உள்ளவர்கள் மூளையின் முன் புறணி மற்றும் துணைக் கார்டிகல் கட்டமைப்புகளில் வேறுபாடுகள் இருப்பதைக் காட்டுகின்றன. மூளையின் பகுதிகள் நடத்தை மற்றும் உணர்ச்சிபூர்வமான பதில்களைக் கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கின்றன. பல மூளைப் பகுதிகள், மூளை நெட்வொர்க்குகள் மற்றும் உயிரியல் செயல்முறைகள் வெறித்தனமான எண்ணங்கள், கட்டாய நடத்தை, பயம் மற்றும் பதற்றம் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் கூறுகின்றன.
OCD உள்ள சிலருக்கு மீண்டும் மீண்டும் அசைவுகள் அல்லது ஒலிகளை உள்ளடக்கிய நடுக்கக் கோளாறு உள்ளது. அடிக்கடி கண் சிமிட்டுதல் மற்றும் பிற கண் அசைவுகள், முகம் சுளித்தல், தோள்பட்டை மற்றும் தலை அசைத்தல் தொண்டையை கனைத்தல், மோப்பம் பிடித்தல் அல்லது முணுமுணுத்தல் போன்றவற்றுடன் மனநிலை பாதிப்பு அல்லது கவலைக் கோளாறு இருப்பது பொதுவானது.
OCD அறிகுறிகள் எந்த வயதிலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் பொதுவாக குழந்தைப் பருவத்தின் பிற்பகுதியிலும் இளமைப் பருவத்திலும் இது தொடங்க வாய்ப்பு அதிகம். இளம் வயதினரே இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
OCD அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மேலும், இவர்கள் தங்கள் பாதிப்பை தூண்டும் சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளுடன் மனதையும் எண்ணங்களையும் சமன்படுத்தும் தியானம், யோகா மற்றும் தங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கில் கவனம் செலுத்தி குடும்பத்தினர் ஆதரவுடன் இந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம்.