
இயல்பாக எல்லோரும் செய்யும் செயலை மற்றவர்கள் செய்யும்பொழுது சில மாறுபாடுகள் காணப்பட்டால் அதை உற்று நோக்குவது நமது பண்பு. என்றாலும், அதிக அளவில் அது வித்தியாசமாகத் தெரியாது. முற்றிலும் புதிதாக ஒருவர் ஒரு செயலை செய்யும்பொழுதுதான் அதை உற்று நோக்க ஆரம்பிப்போம். அதுபோல் உற்று கவனிக்க வைத்த விஷயங்களில் வரவேற்க வைத்ததும், சிந்திக்க வைத்ததுமான சில விஷயங்களை இப்பதிவில் காண்போம்.
இப்பொழுது எல்லாம் மருத்துவமனைக்கு செல்லும்பொழுது அங்கு குறிப்பிட்ட இடத்தில் சில நாளிதழ்கள் மற்றும் மேகசீன்களை அடுக்கி வைத்திருப்பதைக் காண முடிகிறது. அதில் அமர்ந்து சிலர் படிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அங்கு வரும் விசிட்டர்களுக்கு இது ஒரு அருமையான நல்ல பழக்கம் என்று கூறலாம். அதேபோல், சில ஆட்டோக்களிலும் புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. அது அங்கு வந்து அமர்பவர்களுக்கு படிக்கும் சிந்தனையை ஏற்படுத்துகிறது.
இன்னும் சொல்லப்போனால் சில விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டு வரும்பொழுது புத்தகங்களை ரிட்டன் கிப்ட்டாக கொடுக்கப்படுவதை அனைவருமே அறிந்திருப்போம். ஆனால், ஒருமுறை ரயிலில் பயணித்தபொழுது எனது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர் அங்கிருந்தவர்களுக்கு புத்தகங்களை பரிசாகக் கொடுத்தார்.
அதைப் பார்த்து வியந்த நாங்கள் ஏன் என்று கேட்டதற்கு, “வருடா வருடம் புக் ஃபேர் செல்வேன். சென்று விட்டு வரும்பொழுது நிறைய புத்தகங்களை வாங்கி வைத்து, இதுபோல் ரயில் பயணங்களில் பயணிப்பவர்களுக்கு கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன்.
காரணம், எல்லோரும் செல்லில்தான் அதிக நேரம் செலவு செய்கிறார்கள். படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் அக்கம்பக்கத்தினருக்கு புத்தகத்தை கொடுத்து விட்டால் அதை ஆழ்ந்து படிக்க ஆரம்பித்து விடுவார்கள். இதை கவனித்தால் குழந்தைகளும் படிக்க ஆரம்பிப்பார்கள் என்பதால் என்னால் முடிந்த உதவியாக இதை செய்து வருகிறேன்” என்று கூறினார். அவருக்கு வாசிப்பின் மீது இருந்த நேசத்தை புரிந்து கொண்டு நன்றி பாராட்டினோம். எதையாவது ஒன்றைக் கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றால் இப்படியும் உதவலாம் என்பதை அப்பொழுதுதான் இந்த நிகழ்வு புரிய வைத்தது. ஆதலால் இதை வரவேற்கத்தக்க நிகழ்வாக அமைந்த அனுபவம் என்றே கூறலாம்.
அடுத்தபடியாக, எங்கள் வீட்டிற்கு வந்த ஒரு பெண்மணியை அந்தப் பெண்ணின் அம்மா கவிதா என்று அழைத்தார். அந்தப் பெண்ணின் நாத்தனார் தீக்ஷா என்று அழைத்தார். இதனால் குழப்ப நான், அந்தப் பெண்ணிடம் உன் பெயர்தான் என்ன? உனக்கு இரண்டு பெயர்களா? என்று கேட்டேன். அதற்கு அந்தப் பெண்மணி, “ஆமாம். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்து விட்டால் பிறந்த இடத்துப் பெயரை வைத்து அழைக்க மாட்டார்கள். முதன்முதலாக பேரை மாற்றி விட்டுதான் வேறு வேலையே.
ஆதலால் என் அம்மா திருமணம் ஆகி சென்றாலும் நீ என் மகள்தான் என்ற அன்பினால் கவிதா என்றும், எனது நாத்தனார் எங்கள் வீட்டிற்கு வந்த செல்வத் திருமகள் நீ ஆதலால் தீஷா என்றும் என்னை அழைக்கிறார்கள்” என்றாள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இது பாரம்பரியமாக நடைமுறையில் உள்ள வழக்கு. இதனால் பிறந்த வீட்டு அன்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து புகுந்த இடத்தில் அந்த அன்பு புது வெள்ளமாக பாயும் என்பது அவர்களின் நம்பிக்கை என்று கூறினார்.
இந்தப் புதுமையைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நான், 'ரோமில் ரோமனாய் இரு' என்பதற்கு இணங்க அந்தப் பெண்ணிடம், நான் உன்னை இனி எப்படி கூப்பிட வேண்டும் என்று கேட்க, அந்தப் பெண் சட்டென்று தீக்ஷா என்றுதான் கூறினார். ‘கொண்ட பண்பாடு மறவாத பெண்மை’ என்றால் இதுதான். என்றாலும் பெயரை மாற்றாமலே அதே அன்பை இங்கும் வெளிப்படுத்த முடியாதா? என்ற சிந்தனையையும் தூண்டிய சம்பவம் இது.
வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் பயணம் சென்றாலும் சரி எல்லா இடத்திலும் அனுபவங்கள் புதுமையாக இருப்பதைக் காண முடிகிறது. இப்படிப்பட்ட அனுபவங்கள்தான் நம்மை ஏராளமாக சிந்திக்கத் தூண்டுகிறது. செயல்பட வைக்கிறது. எல்லா அனுபவங்களையும் பார்ப்போம், கேட்போம், ரசிப்போம். அதோடு விடாமல் நம்மாலும் ஏதாவது புதுமையாக செய்ய முடிந்தால் அதையும் நம் விருப்பப்படி மற்றவர்களின் பயன்பாட்டிற்கு சிறந்த வழியில் செய்ய ஆரம்பிப்போம்!