
தேர்வுகள் ரவுண்டு கட்டுகின்றன!இப்பொழுதெல்லாந்தான் எத்தனையெத்தனை தேர்வுகள்!டென்த், ப்ளஸ் 2 இரண்டும் அவற்றுள் மிக முக்கியத் தேர்வுகள்!
வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் மகத்தான தேர்வுகள் அவை! என்ன? அதி முக்கியமான அந்தத் தேர்வுகளை நமது இளஞ் சமுதாயத்தினர் விடலைப் பருவத்தில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது! அதில் ப்ளசும் உண்டு… மைனசும் உண்டு!
‘இளமையிற் கல்’ என்ற வாசகத்தின் உண்மைப் பொருளை வயதான பிறகுதான் நன்கு உணர முடிகிறது! பதினாறு வயதிற்குள் படித்தவையும், நடந்தவையும் பசுமையாய் மனதில் குடியிருக்க, அதன் பிறகு நடந்தவையெல்லாம் அரசல் புரசலாகவே அப்போதைக்கப்போது வந்து போகிறது! இது ப்ளஸ் என்றால், மெச்சூரிடி வருமுன்னே மேஜர் பரீட்சைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளதை மைனசாகக் கொள்ளலாம்.
ஏனெனில் இன்றைக்கு முன்னேறியுள்ள பலரும், நான் அந்த வயதில் இன்னும் உஷாராக இருந்திருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்கிறேன் என்கிறார்கள்.
சரி! தேர்வுகளைச் சிறப்பாக எழுதினால்தான் அதிக மதிப்பெண்களைப் பெற்று, வாழ்வை, இந்தப் பிறவியை, இனிமையாக்கிக் கொள்ள முடியும்!
நல்ல பேனாக்கள், நயமான உபகரணங்கள், மறக்காமல் ஹால் டிக்கட், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தேர்வறைக்குச் செல்லல் என்றெல்லாம், ஏகப்பட்ட குறிப்புகளை நண்பர்கள் ஏற்கெனவே எழுதியுள்ளார்கள். சத்தான உணவுகள், போதுமான தூக்கம் என்பவையும் அவற்றுள் அடக்கம்! இவற்றையெல்லாம் தாண்டி, பரீட்சையை நன்கு எழுத, உற்சாக மனம் வேண்டும்.
நீங்கள் பரீட்சை ஹாலுக்குள் நுழையும்போதே, இன்றைக்கு கோலி அடிக்கும் செஞ்சுரியைப் போல் ஒரு கை பார்த்து விட்டுத்தான் திரும்புவது என்ற உறுதியுடன் உள்ளே செல்லுங்கள்!
எந்தப் பக்கத்திலிருந்து எப்படிப் பந்தை வீசினாலும், நல்ல பேட்ஸ்மேன் பவுண்டரி லைனிலேயே குறியாக இருப்பது போல், உங்கள் எண்ணமெல்லாம் அதிக மதிப்பெண் பெறுவதிலேயே ஆழ்ந்து கிடக்க வேண்டும்!
உற்சாக மூடுக்கு மனநிலையைக் கொண்டு வருவது எப்படி என்றுதானே யோசிக்கிறீர்கள்? ரொம்ப சிம்பிள் பிரதர்! அதிலும் இந்த அதி நவீன விஞ்ஞான உலகில், எல்லாம் எளிதே!
உங்களுக்குப் பாட்டு பிடிக்குமென்றால் அதனைக் கேளுங்கள்! மனது லேசாகும்! எங்கள் காலத்தில் வசதிகள் குறைவு என்பதால், நான் தேர்வு ஹாலுக்குச் செல்லும் முன்னர், எனக்குப் பிடித்த சிறுகதைகளைப் படித்து விட்டுக் கிளம்புவேன்! மனது லேசாகிக் குழப்பம் இன்றி இயங்கும். தெளிவான மனதில், படித்தது அனைத்தும் 55 இன்ச் டிவியில் ஓடுவது போல, படமாக ஓடும்!
உங்கள் முழுமனதும் எழுதுவதில் மட்டுமே இருக்க வேண்டும். புறத்தில் நடக்கும் அனைத்தையும் புறந்தள்ளி விட வேண்டும். நான் ‘அக்ரிகல்சுரல் எகானாமிக்ஸ்’ தேர்வு எழுதிய அன்று, என் ஹாலிலேயே மூன்று பேரை பிட் அடித்ததாகப் பிடித்தார்களாம்! வெளியில் வந்த பிறகுதான் எனக்குத் தெரியும்! அன்று நான் எழுதியது 75 பக்கங்கள்! விளைவு: பி ப்ளஸ்! (B Plus) தற்பெருமையல்ல!அனுபவ உண்மையைப் பகிரும் ஆர்வம்!
எந்தத் தேர்வை எழுதுகிறோமோ அது குறித்து இதற்கு முன்னர் நடந்த தேர்வுகளில் நாம் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி இருப்பார்கள்! அவற்றை மனதில் ஓட விடுங்கள்! மன தத்துவப்படி நாம் செய்த தவறுகள் நன்றாகவே நமக்கு ஞாபகத்தில் இருக்குமாம்! இந்தத் தேர்வில் அந்தத் தவறுகள் வராத படி பார்த்துக் கொள்ளுங்கள்!
நான் ஆறாம் வகுப்பில் ‘விளிக்கிறேன்’ என்பதற்குப் பதிலாக, ’விழிக்கிறேன்’ என்று தவறாக எழுதியது, எல்லாப் பரீட்சைகளின்போது மட்டுமல்ல, இப்பொழுதும் எதனையும் எழுத ஆரம்பித்தால் மனதில் முந்தி வந்து நிற்கிறது! அது மாநில முதல்வன் பட்டத்தையும் வாங்கித் தந்தது!
பயமே வேண்டாம்! இது பரீட்சை ஹால்தான்! நேர் காணல் (Interview) அறையல்ல! நேர்காணலில் உங்கள் பதில் மற்றவர்களால் கவனிக்கப்படும். இங்கோ… உங்களுக்கு நீங்கள்தான் ராஜா! உங்களுக்கு உதவத்தான் இன்விஜிலேடர் போன்றவர்கள்! எனவே பயப்படாமல் சிந்தித்துச் சரியான விடையை எழுதுங்கள்!
மதிப்பெண்ணுக்குத் தகுந்தாற்போல்தான் உங்கள் பதில்களின் நீளம் அமைய வேண்டும். தெரியுமென்பதற்காக 2 மார்க் கேள்விக்குப் பத்து மார்க்குக்கு உண்டான பதிலை எழுதிக் கொண்டிருக்காதீர்கள்!
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை மணி அடித்து நேர எச்சரிக்கை கொடுப்பார்கள்! ஒவ்வொரு மணி அடிப்பதற்குள்ளாகவும் எவற்றை முடிக்க வேண்டும். என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள். எங்கள் காலத்தில் எம்.ஏ.,வில் 5 எசே டைப் (Essay Type) எழுத வேண்டும். ஒவ்வொரு அரை மணி, மணி அடித்ததும் எழுதிக் கொண்டிருக்கும் எசேவுக்கு கன்க்லூஷன் போட்டு விடுவேன்! கடைசி அரை மணி நேரம் தாராளமாகக் கிடைக்கையில் திருப்பிப் பார்க்கக்கூட ஏதுவாகும்! டைம் மானேஜ்மெண்ட் முக்கியம் என்பதை மறவாதீர்கள்!
பயமுறுத்தவென்றும், பயப்படவென்றுமே சில நண்பர்கள் இருப்பார்கள். தேர்வு சமயத்தில் அவர்களை ஒதுக்கி விடுங்கள்!
நீங்கள் ஒரு காட்டில் ஆறு மாதம் தனியாக அகப்பட்டுக் கொண்டு, தெய்வாதீனமாகத் திரும்பியதும் ஒரு மணி நேரத்தில் உங்கள் அனுபவங்களைக் கேட்டால், எதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்த நேரத்திற்குள் முக்கியமானதை மட்டுமே சொல்ல வேண்டுமென்று எண்ணுவீர்களோ, அதே கதைதான் இங்கும்! நீங்கள் ஓராண்டு முழுவதும் படித்ததை, ஓர் இரண்டரை மணி நேரத்தில் விளக்க வேண்டும். அவ்வளவுதான்!
மனதளவில் உற்சாகம் வந்திருக்குமென்று நம்புகிறோம்!ஜமாயுங்கள்! உங்களைப் புகழ்ந்துபாராட்ட உலகம் தயாராக இருக்கிறது!
பாசமிகு பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு உற்சாகம் தரக் கூடியவற்றை மட்டுமே தேர்வு நேரங்களில் செய்யுங்கள்! தேர்வு முடிவுகளால் அவர்கள் உங்களை உற்சாகப்படுத்துவார்கள்!