
“உடனே கிச்சனுக்கு போங்க. அந்த கேஸ் அடுப்ப கொஞ்சம் பாருங்க எவ்வளவு அலங்கோலமா இருக்கு”. கேஸ் அடுப்பு என்பது நம் சமையலறையில் நாம் தினமும் பயன்படுத்தும் முக்கியமான உபகரணமாகும். ஆனால், இதை அதிகமாகப் பயன்படுத்தும் போது எண்ணெய் திட்டுகள், உணவு மிச்சங்கள் போன்றவை அதில் ஒட்டிக்கொண்டு அடுப்பை மோசமாக மாற்றிவிடும். எனவே, அவ்வப்போது கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இந்தப் பதிவில் கேஸ் அடுப்பை எளிதாக சுத்தம் செய்ய உதவும் குறிப்புகளைப் பார்க்கலாம்.
முதலில் அடுப்பைப் பயன்படுத்திய பின் அதில் உள்ள வெப்பம் முற்றிலும் குளிர்ந்து போகும் வரை காத்திருக்கவும். பின்னர், அடுப்பின் மீது ஒட்டி இருக்கும் உணவின் மிச்சங்களை மெதுவாக அகற்றவும். கடினமாக ஒட்டிக் கொண்டிருக்கும் மிச்சங்களை அகற்ற சோப்பு தண்ணீரை தெளித்து மென்மையான துணி பயன்படுத்தி தேய்கவும்.
பின்னர், அடுப்பின் க்ரில்லை அகற்றி, சோப்பு நீரில் ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து ஸ்டீல் வூல் பயன்படுத்தி க்ரில்லை தேய்த்து சுத்தம் செய்யவும். கடினமான கறைகளை அகற்ற பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். பின்னர், அவற்றை தண்ணீரில் நன்கு அலசி உலர்த்த வேண்டும்.
அடுத்ததாக பர்ணர்களை அகற்றி, சோப்பு நீரில் ஊறவைத்து, பிரஷ் பயன்படுத்தி சுத்தமாகத் தேர்க்கவும். அதன் மீது உள்ள கடினமான கறைகளை அகற்ற வெள்ளை வினிகர் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதையும் நன்கு கழுவிய பின்னர் ஈரம் இல்லாதபடி உலர்த்த வேண்டும்.
அடுப்பின் மேற்புறத்தை சுத்தம் செய்ய சிறிது சோப்பு தண்ணீரை மென்மையான துணியில் நனைத்து மெதுவாக தேய்க்கலாம். கரைகள் கடினமாக இருந்தால் பேக்கிங் சோடா அல்லது சமையல் சோடாவை சேர்த்து தேய்க்கலாம். எண்ணெய் திட்டுகளை அகற்ற சிறிது எலுமிச்சை சாறு பயன்படுத்துங்கள். பின்னர் அடுப்பை நன்றாகத் துடைத்து உலர்த்தவும்.
ஒருவேளை உங்களது அடுப்பு கண்ணாடியால் ஆனதாக இருந்தால், கண்ணாடியை சுத்தம் செய்யும் தெளிப்பான்களைப் பயன்படுத்தவும். கண்ணாடியை சுத்தம் செய்த பின்னர் ஒரு மைக்ரோ பைபர் துணியால் நன்கு துடைக்கவும்.
அடுப்பின் உட்புறத்தில் உள்ள தூசிகளையும், மிச்சங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யும்போது உட்பகுதியில் எவ்விதமான திரவத்தையும் பயன்படுத்த வேண்டாம்.
இவ்வாறு உங்களது கேஸ் அடுப்பை வாரம் ஒரு முறை சுத்தம் செய்வதன் மூலம், அடுப்பு எப்போது தூய்மையாகவும், நன்றாக செயல்படும் விதமாகவும் வைத்திருக்கலாம். அடுப்பை சுத்தம் செய்யும்போது மேற்கண்ட குறிப்புகளை பின்பற்றி அதன் ஆயுளை அதிகரிக்க முடியும்.