
இன்றைய காலத்தில் குளிர்சாதன பெட்டி பயன்படுத்தாத வீடுகளே இல்லை. ஆனால் அதை சரியாகப் பராமரிக்காவிட்டால் அதிலிருந்து மோசமான வாசனை வெளியேறத் தொடங்கிவிடும். இதனால், ஒவ்வொரு முறை ஃப்ரிட்ஜை திறந்து ஏதேனும் பொருட்களை எடுக்கும்போது தர்மசங்கடமாக இருப்பது மட்டுமின்றி, அதன் உள்ளே இருக்கும் பொருட்களின் சுவையை பாதித்து, உணவின் தரத்தையும் கெடுத்துவிடும். இந்தப் பதிவில் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைத் தவிர்க்கும் வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
ஏன் துர்நாற்றம் வருகிறது?
பெரும்பாலும் பழங்கள், காய்கறிகள், இறைச்சி, பால் போன்ற பொருட்களை நீண்ட காலமாக குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால் துர்நாற்றம் வீசக்கூடும். இது தவிர, உணவுப் பொருட்களை ஏதேனும் டப்பாவில் போட்டு வைக்காமல் அப்படியே வைத்தால் அதன் வாசனை பிரிஜ் முழுவதும் பரவி துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
மாதம் ஒருமுறையாவது ஃப்ரிட்ஜை நன்றாக சுத்தம் செய்யத் தவறினால் பாக்டீரியாக்கள் அதிகமாக வளர்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். இதுதவிர, ஃப்ரிட்ஜில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் பாதை அடைப்பட்டு தண்ணீர் தேங்கி நின்றாலும் துர்நாற்றம் வீசும்.
தடுக்கும் வழிகள்:
வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது பிரிட்ஜில் உள்ள எல்லா பொருட்களையும் வெளியே எடுத்து, ஈரத்துணி பயன்படுத்தி நன்றாக துடைப்பது நல்லது. இவ்வாறு துடைக்கும் போது பிரிட்ஜை ஆஃப் செய்ய வேண்டும். கெட்டுப்போன உணவு பொருட்களை அவ்வப்போது அகற்றிவிடுங்கள்.
பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை எப்போதும் மூடி போட்டு வைக்க வேண்டும். மீன், இறைச்சி போன்ற பொருட்களை, மற்ற உணவுப் பொருட்கள் இருக்கும் இடத்தில் வைக்காமல், தனியாக வைக்க வேண்டும். காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை பிளாஸ்டிக் பைகளில் போட்டு மூடி வைக்கவும். நீண்ட காலம் உணவுப் பொருட்களை பிரிட்ஜில் சேமிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களது பிரிட்ஜ் சரியாக கூலிங் ஆகாமல் போனால் துர்நாற்றம் ஏற்படக்கூடும். எனவே, உங்களது பிரிட்ஜ் வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இது தவிர ஃப்ரிஜ்ஜை அவ்வப்போது திறந்து மூடுவது நல்லது. நீண்டகாலம் அதைத் திறக்காமல் அப்படியே விட்டால், உணவுப் பொருட்களின் வாசனை உள்ளேயே சிக்கிக் கொண்டு கெட்ட வாடையை வெளிப்படுத்தும்.
மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை மிகவும் எளிமையாகத் தடுத்துவிடலாம். இதன் மூலமாக குளிர்சாதனப் பெட்டியை தூய்மையாக பராமரிப்பதுடன், துர்நாற்றம் விசாமலும் வைத்திருக்கலாம்.