

பொதுவாகவே எல்லா குழந்தைகளும் சந்திக்கக்கூடிய பிரச்னை என்ன என்று கேட்டால் ஞாபக மறதிதான். அதுவும் ஒரு சில குழந்தைகளுக்கு இந்த ஞாபக மறதி மிக மிக அதிகமாகவே இருக்கும். குறிப்பாக இந்த தேர்வு நேரத்தில் அவர்களுக்கு இந்த பிரச்னையானது சற்று கூடுதலாகவே இருக்கும்.
ஒரு சில குழந்தைகளுக்கு படித்த சில மணி நேரத்திற்கு நினைவிருக்கும், பிறகு மறந்துவிடும். தேர்வு எழுதும்போது யோசித்து யோசித்துப் பார்ப்பார்கள், ஆனால் அவர்களுக்கு நினைவுக்கு வராது. இந்த ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் சில டிப்ஸ்களை இப்பதிவில் பார்க்கலாம்.
ஞாபக சக்திக்கு மிகவும் முக்கியமானது இரண்டு:
1. ஆர்வம் மற்றும் கவனம்
2. திரும்ப திரும்ப செய்தல்
குழந்தைகள் எதை படித்தாலும் முதலில் அதை ஆர்வத்தோடும் மற்றும் கவனத்தோடும் படிக்க நாம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் எதை படிக்கிறார்களோ அதை திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். சரி, இதைத் தவிர நினைவுத்திறனை அதிகரிக்க உதவும் 10 டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.
1 . குழந்தைகள் எதை படித்தாலும் அதை பற்றி தாய் மொழியிலேயே சிந்திக்க சொல்லித்தர வேண்டும், அதாவது படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ எதுவாக இருந்தாலும் அதனுடைய கருத்தை உங்களுடைய தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்யவேண்டும்.
2 . புரியாமல் எதையும் படிக்கக்கூடாது என்பதை அவர்களுக்கு அடிக்கடி வற்புறுத்த வேண்டும். ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, புரிந்துகொண்டு படி என்று எடுத்துரைக்க வேண்டும்.
3 . படிக்கும்போது முழு கவனம் மிக அவசியம் என்பதை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.
4 . ஒரு அடையாளம் வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள். உதாரணத்திற்கு code words like north, east, west, south போன்றவற்றை hint ஆக வைத்து கற்கும்போது அது மறக்கவே மறக்காது.
5 . படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதினால் ஒரு பயனுமில்லை.
6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் நன்றாக பதியும். ஆகவே படத்துடன் விளக்கங்களை திரும்பத் திரும்ப வரைந்து பார்க்க சொல்லவேண்டும்
7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர உறக்கம் கண்டிப்பாக தேவை
8 . இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும்படி சொல்ல வேண்டும்.
9 . தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒருமுறை மேலோட்டமாக நினைவு படுத்திப் பார்க்க சொல்லவேண்டும். அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்துகொண்டு இருக்கும். இது குழந்தைகளுக்கு நினைவாற்றலுக்குத் தேவையான மிக முக்கியமான பயிற்சி ஆகும்.
10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துக்கொள்வது நல்லது.
இவை எல்லாவற்றையும் தவிர தேர்வு நேரத்தில் வீட்டில் உள்ள மற்றவர்களும் குழந்தைகளுக்கு தங்கடைய ஒத்துழைப்பை தர வேண்டும். தேர்வு நேரத்தில் பெற்றோர்கள் கூடியவரை அவர்களின் எதிரிலே சண்டை போட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது.