
எவ்வளவுதான் பார்த்து பார்த்து செய்தாலும் சில குழந்தைகள் சாப்பிடும் நேரம் வந்துவிட்டால் போதும் ஓடிப்போய் ஒளிந்து கொள்வார்கள். தேடிப்பிடித்து சாப்பிட வைத்தாலும் சரியாக சாப்பிடாமல் அல்லது அழுது அடம் பிடிப்பார்கள். சில குழந்தைகள் வாயையே திறக்காமல் அழிச்சாட்டியம் பண்ணுவது உண்டு .எப்படி இவர்களை சாப்பிட வைப்பது? இதோ அனுபவ வழிமுறைகள்.
குழந்தை சாப்பிடவில்லை என்றால் தொந்தரவு பண்ணாதீர்கள். அவர்களையும் டென்ஷன்படுத்தி நீங்களும் டென்ஷன் ஆகாமல் அமைதியாக அவர்களை விட்டு விடுங்கள். பசி எடுக்கும்போது அவர்களாகவே வந்து உணவு வேண்டுமென்று கேட்பார்கள். அதுவரை பொறுமையாக காத்திருங்கள். பசித்துப் புசிப்பது நல்லதுதானே?
இந்த கால குழந்தைகள் எல்லா விஷயத்திலும் அதிக அறிவுடன் உள்ளனர். உணவு உட்பட அனைத்திலும் பழமைகளை விடுத்து புதுமைகளை எதிர்பார்க்கின்றனர். ஆகவே ஒரே மாதிரியான உணவுகளை சமைக்காமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வண்ணக் கீரைகள், கேரட் பீட்ரூட் போன்ற வண்ணமயமான காய்கறிகள் போட்டு விதவிதமான சாலட், கூட்டு, பொரியல் என காரமில்லாமல் செய்து தந்து பாருங்கள். புதுமைக்கு இருக்கவே இருக்கிறது சமையல் காணொளிகள்.
பொதுவாக குழந்தைகளுக்கு நாம் நமக்காக வீட்டில் என்ன செய்கிறோமோ அதையே தந்து பழக்குவது நல்லது. அப்போதுதான் வெளியிடங்களுக்கு சென்றால் அவர்களுக்கு என்று தனியாக உணவு தேடவேண்டிய அலைச்சல் மிஞ்சும். அப்படியே நாம் சாப்பிடும் உணவு அந்த குழந்தைகள் விரும்பவில்லை எனில் அவர்கள் விரும்பும்படியான உணவுகளை தெரிந்து வைத்துக் கொண்டு வீட்டிலேயே செய்து தருவது நல்லது.
கேக், ஸ்வீட் போன்றவைகளை கடைகளில் வாங்கித்தராமல் வீட்டிலேயே கோதுமை மாவு வைத்து ஆரோக்கியமாக செய்து தருவது நல்லது. உணவகங்களில் உணவுகள் வாங்கி பழக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தற்போது தோட்டம் என்றால் என்ன? செடி நடுதல் எப்படி? போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு அதிகம் பெருகிவருகிறது. நாமும் வீடுகளில் சிறு இடம் ஒதுக்கி ஏதேனும் காய்கறிகள் தக்காளி, பச்சை மிளகாய், வெண்டைக்காய் போன்ற எளிதாக பயிரிடப்பட்டு விளையும் காய்கறிகளை அவர்களை கொண்டே விதைத்து, அவர்களையே பராமரிக்க வைத்து, அதிலிருந்து பெறப்படும் காய்கறிகளை சமைத்து தந்தால் அவர்களும் விருப்பமுடன் சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும்.
அதேபோல் சிறு சிறு சமையல் வேலைகளில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஈடுபடுத்தலாம். குறிப்பாக கடைகளுக்கு செல்லும்போது அவர்களைக்கொண்டு அவர்களுக்கு பிடித்த காய்கறிகளை வாங்க செல்லலாம். குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவது அவர்களுக்கு உற்சாகம் தரும். அதேபோல் கதைகள் சொல்லிக் கொண்டு உணவு ஊட்டுவது , நிலவைக்காட்டி நிலாச்சோறு சாப்பிட வைப்பது போன்றவைகளும் நல்ல பலனளிக்கும்.
இப்போது எல்லோர் வீடுகளிலும் குழந்தைகளுக்கு சாப்பிட வைக்கும் முன் முதலில் அறிமுகப்படுத்துவது செல்போனையும் டிவியும்தான். இதனால் எவ்வளவு பாதிப்பு தெரியுமா? அந்த குழந்தைகள் அதை பார்த்தபடியே சாப்பிடும்போது சரியாக சாப்பிடாமல் விட்டுவிடுவார்கள் அல்லது அதை பார்த்துக் கொண்டு அளவுக்கு மீறி சாப்பிட்டு வயிற்று உபாதைகளை அனுபவிக்க நேரிடும்.
ஆகவே தயவு செய்து குழந்தைகளுக்கு செல்போன் மற்றும் டிவியை போட்டபடி சாப்பிட வைப்பது தவிர்க்க வேண்டும். இதை பழக்கப்படுத்துவதே பெற்றோர்கள்தான் என்பதால் அவர்கள் முதலில் சாப்பிடும்போது இரண்டையும் அணைத்து வைத்துவிட்டு சாப்பிடுவதில் மட்டும் கவனமாக இருந்தால் குழந்தைகளும் அதையே பின்பற்றுவார்கள்.
குழந்தை வளர்ப்பில் முக்கியமான பங்கு பெறும் சாப்பிட வைக்கும் கலையை கற்றுக்கொண்டால் குழந்தைகளுக்கும் நல்லது. நமக்கும் டென்ஷன் நீங்கும்.