
முகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவுவோம். சரியான முறையில் கழுவிட, முக வறட்சியைப் போக்கலாம். அப்படி செய்யத் தவறினால் முகப்பரு மற்றும் பலவித சருமப் பிரச்னைகளுக்கு அது வழிவகுத்து விடும். முறையாகக் கழுவ, முகம் தொய்வடையாமல் நன்றாக இருக்கும். சில வழிமுறைகளாக முகத்தை கழுவுவதற்கு முன் கைகளை நன்கு தேய்த்து கழுவிய பிறகு முகத்தை தொட்டு அலம்பிட, கைகளில் உள்ள தொற்றுக்கள் நேரடியாக முகத்தில் படாமல் இருக்க உதவும்.
முகத்தில் பருக்கள் வராமல் இருக்க தினமும் முகத்தை மென்மையாகக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்குவதோடு, அழுக்குகளும் முழுமையாக அகன்று சருமம் சுத்தமாக இருக்கும்.
முகத்தை சிவப்பாக மாற்ற க்ரீம்,லோஷன் என மாற்றி மாற்றி உபயோகிக்கக் கூடாது. அதற்கு பதிலாக இயற்கையாக தயாரித்த முகப்பூச்சுகளை தடவி கழுவி வர சருமம் புத்துணர்ச்சியாக பொலிவுடன் இருக்கும்.
முகத்தைக் கழுவ மிகவும் சூடான நீரை பயன்படுத்தக் கூடாது. வெதுவெதுப்பான, மிதமான குளிர்ச்சியுடன் இருக்கும் நீரைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், மிகவும் சூடான நீரை முகத்திற்குப் பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நுண் குழாய்களில் இடைவெளி ஏற்படும். மேலும், சருமத் துளைகள் திறக்கப்பட்டு எண்ணெய் அதிகம் சுரக்கப்பட்டு முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்னைகளை உருவாக்கும்.
முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை கலைக்காமல் முகத்தை கழுவினால் அழுக்குகள் சரும துளைகளில் தங்கி, பல சருமப் பிரச்னைகளை உருவாக்கி விடும்.
முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அகற்ற ஸ்கரப்பை பயன்படுத்தும்போது அழுத்தி தேய்க்கக் கூடாது. அழுத்தி வேகமாகத் தேய்த்தால் சருமத்தில் சிராய்ப்புகள், பருக்கள் வர ஆரம்பித்து விடும். ஸ்கரப்பை மென்மையாக வைத்து முகத்தை சுத்தம் செய்தல் வேண்டும்.
தலைக்குக் குளித்த பின்னர் இறுதியாக நாம் முகத்தை கழுவ மாட்டோம். இதனால் தலையில் உள்ள பொடுகு, அழுக்குகள் அனைத்தும் முகத்தில் படிய வாய்ப்புள்ளது. எனவே, தலைக்குக் குளித்த பின்னர் முகத்தையும் நன்றாகக் கழுவ வேண்டும்.
முகத்தை துடைக்க கடினமான துண்டை உபயோகிக்கக் கூடாது. பருத்தியினால் ஆன துண்டினால் மென்மையாகத் துடைக்க சருமம் பொலிவோடு இருக்கும்.
முகத்திற்கு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தும்போது ஒரே பிராண்டை உபயோகிக்க சரும எரிச்சல், அலர்ஜி ஏற்படாமல் இருக்கும்.
முகத்தை இவ்வாறு கொஞ்சம் கவனத்துடன் அலம்பிட, முக அழகு கூடுவதுடன் பரு, மங்கு போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க உதவும்.