உறவுகளைப் பராமரிக்க உன்னத ஆலோசனைகள்!

உறவு புறக்கணிப்பு
உறவு புறக்கணிப்பு

றவுகளைப் பராமரிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம்தான். ஒரு குடும்பம் சிறந்து விளங்க உறவுகளும் ஒரு காரணம்தான். ஆனால், அந்த உறவுகளில் பலவிதமான குணம் படைத்தவர்கள், பலவிதமான செயல்பாடு உள்ளவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் எல்லாவற்றையும் நாம் சமாளிக்க வேண்டும். உறவுகளை சமாளிப்பது சவாலான விஷயம்தான் என்றாலும், அதை சாதாரணமாக எப்படி செய்து முடிப்பது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

நினைத்த நிமிடத்தில் எவருடனும் பேச நம்மிடம் போன் இருக்கிறது; நினைத்த உடனே எவ்வளவு தொலைவும் சென்றுவிட விமானமும் இருக்கிறது. ஆனால், நம் உறவினர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்துகொள்ள மட்டும் எந்தக் கருவியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சிறந்த உரையாடல்கள் மட்டுமே அதற்கான கருவி. அவர் இப்படி நினைத்திருப்பாரோ, இவர் தவறான முடிவெடுத்திருப்பாரோ என மனதுக்குள் குழப்பிக்கொள்ளாமல், எதையும் வெளிப்படையாகப் பேசுங்கள்.

நீங்கள் நினைத்தது போல உங்கள் உறவினர் இல்லாமல் போகலாம். நீங்கள் நல்ல நோக்கத்துடன் செய்யும் ஒரு விஷயம் தவறான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படலாம். நீங்கள் மிக முக்கியம் என நினைக்கும் ஒரு விஷயத்தை உங்கள் குடும்பமே அலட்சியப்படுத்தலாம். ‘இதை இப்போது செய்தாக வேண்டுமா?’ என நீங்கள் நினைக்கும் ஓர் அற்ப விஷயத்தை ஒட்டுமொத்தக் குடும்பமுமே சேர்ந்து செய்யலாம். சகித்துக்கொள்ளுங்கள்.

வெளிப்படுத்தாத அன்பால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் எவ்வளவு தூரம் நேசிக்கிறீர்கள் என்பதை உறவுகளிடம் சொல்லுங்கள். அப்போதுதான், அவர் எந்த அளவுக்கு உங்களை நேசிக்கிறார் என்பதும் தெரியும். உறவுகளுக்குள் கோபம், பொறாமை, வருத்தம் என எதிர்மறையாக இருக்கும் அத்தனை உணர்வுகளையும் கரைக்கும் ஒரே மருந்து அன்பு.

உங்கள் உறவினர்களை உணர்ந்துகொள்ள குடும்ப நண்பர்களிடம் பேசுங்கள். உங்கள் உறவினரைப் பற்றி ஓர் அபிப்ராயம் வைத்திருப்பீர்கள். அந்த அளவுகோலை வைத்தே அவரை எப்போதும் அளப்பீர்கள். ஆனால், உங்கள் குடும்ப நண்பர் அந்த உறவினரைப் பற்றி வித்தியாசமான ஒரு விஷயத்தைச் சொல்வார். ‘உங்களின் பெருமையை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்’ என அதை வைத்து உறவினரிடம் பேசும்போது உறவு இன்னும் வலுவாகும்.

கோபத்தில் எந்த முடிவும் எடுக்காதீர்கள். அடக்க முடியாத கோபத்துடன் உறவுகளிடம் பேசவும் செய்யாதீர்கள். கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகள் மனதில் ஆழமாகப் போய் தைத்துக்கொள்ளும். அதன்பின் நீங்கள் என்ன செய்தும் அந்தப் புண்ணை ஆற்ற முடியாது. கோபமாக இருக்கும்போது, பேசும் விஷயத்தை மாற்றிவிடுங்கள் அல்லது அங்கிருந்து அகன்று விடுங்கள்.

இதையும் படியுங்கள்:
கடந்த கால துன்பங்களை மறந்து, வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்துவதற்கான யுத்திகள்! 
உறவு புறக்கணிப்பு

நீங்கள் எவ்வளவு பிசியாக இருந்தாலும், உறவுகளுடன் நேரம் செலவிடத் தயங்காதீர்கள். சுப நிகழ்ச்சிகள், பண்டிகைகள் போன்ற தருணங்களில் இப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, உடல்நிலை சரியின்றிப் படுக்கையில் இருக்கும்போதோ, உறவுகள் யாரையாவது இழந்துவிட்டுத் துக்கத்தில் இருக்கும்போதோ உங்கள் நேரத்தைச் செலவிட்டு அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள்.

உங்கள் உறவினர் என்பதாலேயே அவரும் உங்களைப் போலவே இருக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். ஒவ்வொருவரும் வளர்ந்த பின்னணி, இருக்கும் சூழல் ஆகியவற்றைப் பொறுத்து வித்தியாசமான பண்புகளுடன் இருப்பார்கள். அவர்களின் கருத்துகளும் வேறுபடலாம். இந்த வித்தியாசங்களைப் புரிந்துகொள்ளுங்கள். தலைமுறை இடைவெளியைப்புரிந்து கொள்ளுங்கள்.ஒரே விஷயத்தை 60 வயது முதியவர் ஒரு மாதிரி பார்ப்பார். 20 வயது இளைஞர் வேறு மாதிரி பார்ப்பார். நடுத்தர வயதில் இருப்பவருக்கு வேறு விதமான கருத்து இருக்கலாம். 'கிழவருக்கு என்ன சொல்லியும் புரியலையே’ என எரிச்சல் அடையாதீர்கள்; 'முளைச்சு மூணு இலை விடலை. எப்படி பேசுது பார்' என்று கோபமும் கொள்ளாதீர்கள். அவர்கள் வயதின் தவறை, தலைமுறையின் தவறை தனிப்பட்ட தவறாகக் கருதாதீர்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்களுக்கு என்ன தேவை, நீங்கள் எப்படிப்பட்ட சூழலில் இருக்கிறீர்கள் என்பதை எப்போதுமே வெளிப்படையாகச் சொல்லி விடுங்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்கும்போதும், உங்களிடம் யாராவது உதவி கேட்கும்போதும் இந்த வெளிப்படைத்தன்மை உங்களுக்கு உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com