

பல வகை உலோகங்களாலான பாத்திரங்களை நாம் நம் வீடுகளில் பயன்படுத்தி வருகிறோம். இருந்தாலும், தாமிரப் (copper) பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது நாம் பெறும் நன்மைகள் பல. நம் நாட்டில் பாரம்பரியமாக வீடுகளில் குடி நீரை சேமித்து வைப்பதற்கும் குடிப்பதற்கும் (தாமிர ஜலம்) தாமிரத்தால் செய்யப்பட்ட குடம், ஜக், டம்ளர் போன்ற பாத்திரங்களையே பயன்படுத்தி வந்துள்ளனர். தாமிரப் பாத்திரத்தில் நீண்ட நேரம் வைக்கப்படும் நீரானது, E.Coli மற்றும் Salmonella போன்ற சில தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் அவற்றை அழிக்கவும் உதவி புரியும் என்பதே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கு ஒலிகோடைனமிக் விளைவு (Oligodynamic Effect) என்று பெயர்.
நான் சிறு வயதாயிருக்கும் போது, பாட்டி, அம்மா, அப்பா, இரண்டு அக்கா, ஒரு தம்பி, தங்கை என எட்டுப் பேர் அடங்கிய பெரிய குடும்பம் எங்களுடையது. என் அம்மா சற்றே பெரிய அளவிலான தாமிரப் பானை ஒன்றில் தினமும் காலையில் குடி நீரை பிடித்து நிரப்பி வைப்பது வழக்கம். அந்தப் பானையும் அதன் அருகில் உள்ள தாமிரத்திலான டம்ளரும் கண்களில் ஒற்றிக்கொள்ளும் படியான பள பளப்பில் மின்னும். ஒரு நாள் கூட அந்த இரண்டு பாத்திரங்களும் மங்கலாகவோ, கருமை நிறம் கொண்டோ காணப்பட்டதில்லை.
எல்லாம் என் அம்மாவின் கைத் திறன். அப்போதெல்லாம் பள்ளிக்கு பாட்டில்களில் தண்ணீர் எடுத்துச் செல்லும் பழக்கமெல்லாம் இருந்ததில்லை. அதனால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை ஒரு டம்ளர் தாமிர ஜலம் குடிக்க வைத்த பின்பே அனுப்பி வைப்பார் அம்மா. பள்ளியிலிருந்து திரும்பியதும், தாகத்துடன் வரும் பிள்ளைகள் தாமிரப் பானையிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்க போட்டி போடுவோம். அதேபோல் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பும் ஆளுக்கு ஒரு டம்ளர் தாமிர ஜலம் அருந்திய பின்பே படுக்கச் செல்வோம்.
இவை தவிர, பூஜைக்குப் பயன்படும் பஞ்ச பாத்திரங்கள் மற்றும் சில தட்டுகளும் கூட எங்கள் வீட்டில் இருந்தன. தட்டுக்களில் பூக்களை நிரப்பிக் கொடுத்து, அப்பாவுக்கு பூஜை நேரத்தில் அம்மா உதவுவதும் ஞாபகம் உள்ளது. பாட்டி அவள் திருமணத்தின் போது சீர் வரிசையாக கொண்டு வந்த பொருட்களுடன் சேர்ந்து வந்த காப்பர் பாய்லரும் எங்க வீட்டில் இருந்தது. காப்பர் சொம்புகளில் இரவில் தண்ணீர் நிரப்பி வைத்து காலையில் (6-8 மணி நேரம் கழித்து) குடிப்பது ஆரோக்கியம் காக்கும் என்ற நம்பிக்கை வைத்து அதைப் பின்பற்றியும் வந்தனர் நம் முன்னோர்கள்.
எங்க வீட்டு தாமிரப் பானையும் டம்ளரும் இன்று என் தம்பி வீட்டுப் பரணில் உள்ளன. மற்றவையெல்லாம் ஆளுக்கு ஒன்றாக கொண்டு செல்லப்பட்டுவிட்டன. அந்தக் காலத்தில் நடுத்தர வர்க்க மக்களிடையே தாமிரப் பாத்திரங்களின் பயன்பாடு சற்று அதிகமாகவே இருந்துள்ளது. தாமிரப் பானையில் நிரப்பி வைத்த தண்ணீர், மற்றும் தாமிரப் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவு வகைகள் ஆகியவற்றை நாம் உட்கொள்ளும்போது, தாமிரம் எனப்படும் நுண்ணூட்ட கனிமச்சத்து நம் உடலுக்குள் செல்கிறது. இது இரும்புச் சத்து உடலுக்குள் சிறந்த முறையில் உறிஞ்சப்படவும், மெட்டபாலிஸம் நல்ல முறையில் நடைபெறவும், இரத்தச் சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கும் உதவுவதாக கூறப்படுகிறது.
அதிகளவு தாமிரம் உடலுக்குள் சேர்வதும் ஆபத்தை விளைவிக்கும். இவை எதற்குமே போதுமான அறிவியல் ஆதாரம் இல்லை. செப்புப் பாத்திரங்களை பயன்படுத்தும்போது அவற்றை சுத்தமாக வைத்திருப்பதும், பாதுகாப்பான குடி நீரைப் பயன்படுத்துவதும் மிகவும் அவசியம். நவீன காலத்தில் செப்புப் பாத்திரம் உபயோகப் படுத்துவது ட்ரெண்டிங் ஆகியுள்ளது. பலர் வீட்டு டைனிங் டேபிள் மற்றும் ரெஸ்டாரெண்ட்களின் டைனிங் டேபிள்களிலும் பளபளக்கும் தாமிரத்திலான வாட்டர் பாட்டில் மற்றும் டம்ளர்களைக் காண்பது எளிதாக உள்ளது.
வாசகர்கள் பாரம்பரிய தாமிரப் பாத்திரங்களின் பயன்பாடு குறித்த நினைவலைகளையும், அதன் அறிவியல் உண்மைகளையும், தற்கால நவீன நடைமுறைகளில் எப்படிக் கையாள்வது என்பதையும் தெளிவாக உணர்ந்து செல்வர்.