
ஏதாவது விசேஷம் என்றால் மஞ்சள், குங்குமம் எடுத்துக்கொள்ள வீட்டிற்கு வாருங்கள் என்றுதான் அழைப்பார்கள். எந்த மங்கள காரியத்தையும் பேசும்பொழுதும் முதலில் மஞ்சளை வைத்துதான் பேச்சை ஆரம்பிப்பார்கள். திருமண பத்திரிக்கை அடித்து அதில் மஞ்சள் பூசிதான் முதலில் வழிபாடு நடக்கும். அப்படி மஞ்சள் மகிமையை கூறிக்கொண்டே போகலாம் .அதனைப் பற்றிய சில தகவல்கள் இதோ:
வீட்டு தோட்டத்தில் மஞ்சள் போட்டு வைத்திருப்போம். அதை சீசன் வரும்பொழுது எடுத்து நன்றாக கழுவி அதன் தோல்களை எல்லாம் எடுத்துவிட வேண்டும். ஈரமாக எடுக்கும்போது சிரமம் இருக்காது. கடகட என்று எடுத்து விடலாம். ஓரளவுக்கு சிறிய துண்டுகளாக போட்டு காயவைத்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளலாம். சமையலுக்கு பயன்படுத்தவும் வசதியாக இருக்கும். இப்படி பயன்படுத்தும் மஞ்சள்தூள் கடையில் வாங்குவதுபோல் அழுத்தமாக இருக்காது.
அதன் நிறம் மிகவும் வெளிர் நிறமாகதான் இருக்கும். ஆனால் எந்த கேடும் இல்லாமல் கலப்படமில்லாத மஞ்சள் நம் வீட்டு மஞ்சள் என்பதால் இதை தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
மஞ்சளுக்கு அதன் நிறத்தை தருவது குர்க்குமின்தான். வாங்கும் மஞ்சள்தூள் அடர் நிறமாக இருப்பது அதை தயாரிக்கும்பொழுது அதில் பல்வேறு விதமான பொருட்கள் சேர்க்கப்படுவதால்தான்.
இப்படி தயாரிக்கப்பட்ட மஞ்சள் தூளை உணவு தானியங்களை பூச்சிகள் மற்றும் வண்டுகளிடமிருந்து பாதுகாக்க இந்த பவுடரை அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகளில் சேமிக்கும்போது அதில் கலந்து டப்பாக்களில் போட்டு வைக்கலாம். சாக்குப் பைகளில் உள்ள அரிசி, கோதுமைகளிலும் கலந்து வைக்கலாம். இதனால் பொறிவண்டு, அந்துப் பூச்சி, குட்டி கரப்பான்கள் போன்றவைகள் கிட்ட நெருங்காது.
மஞ்சளில் பல்வேறு விதமான நுண் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அவை புரதச்சத்து, சுண்ணச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போலிக் அமிலம், மஞ்சள் எண்ணெய் போன்றவை அதில் அடங்கி உள்ளனவாகும்.
இப்படி பல்வேறு சத்துக்கள் அடங்கி உள்ளதால் அவற்றை எல்லாவிதமான சமையலுக்கும் பயன்படுத்துகிறோம். மேலும் அதில் சமையலை அழகு ஊட்டும் நிறமி இருப்பதால் அனைத்து மசாலா பொருட்களிலும் கலந்து அரைத்து வைத்துக் கொள்கிறோம்.
மஞ்சலை ஒரு கிருமி நாசினியாகவும் பயன்படுத்துகிறோம். குறிப்பாக அசைவ உணவுகளில் மஞ்சள் தூளை அதிகமாக பயன்படுத்திதான் அவற்றையே சுத்தம் செய்ய முனைகிறோம்.
மேலும் அது ஒரு கிருமி நாசினியாக செயல்படுவதால் தான் பிறந்த குழந்தையிலிருந்து பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா செய்ய, அனைத்திற்கும் ஆரத்தி எடுக்க, கிராமங்களில் திருவிழாக் காலங்களில் மஞ்சள் நீரை ஊற்றி வழிபடுவதும், விளையாடுவதும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க செய்யத்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மேலும் தொற்று நோய்கள் பரவும் காலங்களில் மஞ்சள் தண்ணீரில் காய்கறிகளை கூட கழுவினோம். குறிப்பாக கொரோனா காலத்தின் கட்டாயமாக இருந்ததை நாம் மறந்துவிட முடியாது.
மஞ்சளில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றின் வாசனை தரும் மஞ்சள்களும் உண்டு. குறிப்பாக கஸ்தூரி மஞ்சளை சொல்லலாம். இப்படி வாசனை வருவதால் இந்த மஞ்சளை மூலப்பொருளாகக் கொண்டு சோப்பு, முகப்பவுடர், லோஷன், கிரீம், கொசு விரட்டி போன்றவைகள் தயாரிக்கப்படுகிறது. ஒலியோரெசின் எனப்படும் வாசனை திரவியமும் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
மேலும் அழகு சாதனங்கள் உற்பத்தி செய்யும் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுவதுபோல் பருத்தி மற்றும் பட்டு ஆடைகளுக்கு சாயத்தொழில் செய்யவும் இந்த மஞ்சள் பயன்படுத்துகிறது. மேலும் கால்நடை நோய் மருந்து பொருட்களும் மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. முக்கியமாக கொசு விரட்டி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
மஞ்சளைப் பற்றி முதன் முதலாக நாம் அறிந்து வைத்திருப்பது முகத்திற்கு அழகுதரும் பொருளாக மட்டும்தான். ஏனென்றால் முன்பெல்லாம் மஞ்சள் குளித்து வருவதுதான் பெண்களின் அன்றாட அழகு பொருளாக இருந்தது. அப்படி அறியப்பட்ட மஞ்சள் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு சிறப்புடையதாக விளங்குவது நாம் போற்ற வேண்டிய விஷயம்.
ஆதலால் மஞ்சளின் மகிமையை புரிந்துதெரிந்து கொண்டு அதை ஒவ்வொன்றிலும் பயன்படுத்தி பயனடைவோமாக!