
பொதுவாக, வாதத்தில் பல வகை உள்ளன. கீல்வாதம், பக்க வாதம், முடக்கு வாதம், பெருமூளை வாதம் இப்படிப் பல வகைகள். இவற்றிற்கு சில மருந்துகளையோ அல்லது உடற்பயிற்சியையோ அல்லது உணவு முறை மாற்றத்தையோ எடுத்துக் கொண்டாலே போதும், கட்டுக்குள் அடங்கி விடும். ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு வாதம் இருக்கிறது. இந்த ஆபத்தான வாதம் யாருக்காவது வந்தால் அது அவர்களை உடனே பாதிக்காமல் பின்னால் மிகவும் பாதிக்கும். அது மட்டுமின்றி, உடன் இருப்பவர்களையும் போட்டு ஆட்டிப்படைத்து விடும். இந்த வாதம் முக்கியமாக, குழந்தைகளிடமும் வயது முதிர்ந்தவர்களிடமும் அதிகமாக காணப்படும். அதுதான் பிடிவாதம்.
பிடிவாதம் உள்ளவர்கள் எப்படி எல்லாம் செயல்படுவார்கள் என்பது நமக்கே ஓரளவுக்குத் தெரியும். அதிலும் குழந்தைகள் ஓரிரு முறை பிடிவாதம் பிடித்து தனக்கு தேவையானது கிடைத்து விட்டால், அவ்வளவுதான். தினமும் அதையே வழக்கமாக வைத்துகொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால், இந்தக் குழந்தைகளின் பிடிவாதத்தை நாம் ஆரம்பத்திலேயே எளிதாகக் களைந்து விடலாம். இரண்டு அல்லது மூன்று முறை அவர்களுடைய பிடிவாதத்தை நிராகரித்து பேச்சை வேறு பக்கமாக திசை திருப்பினால் போதும். குழந்தைகளுக்குப் புரிந்து விடும், இனி பிடிவாதம் செய்து அழுது புரண்டாலும் பலிக்காது என்று. அப்படி நீங்கள் முளையிலேயே கிள்ளத் தவறினால் இந்தப் பிடிவாதம் வளர்ந்து பாம்பு போல் படமெடுக்க ஆரம்பித்து விடும். இதன் விளைவாக நாம்தான் பின்னால் அல்லல் பட நேரிடும்.
குழந்தைகளுக்கு அடுத்து மிகவும் அதிகமாக பிடிவாதம் பிடிப்பவர்கள் வயதானவர்கள். இவர்களும் குழந்தையைப் போல் உடும்புப் பிடி பிடிப்பார்கள். அவர்கள் நினைத்தது நடக்கும் வரை அல்லது கேட்டது கிடைக்கும் வரை பிடிவாதத்தை விடவே மாட்டார்கள். சில நேரங்களில் இது நமக்குக் கோபத்தையும் எரிச்சலையும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குக் கூட வந்து விடும். இந்தப் பிடிவாதம் முதுமைக் கோளாறால் வருகிறது. இது இயல்பானது.
ஆனால், சில நேரங்களில் சில பேர் பிடிக்கும் பிடிவாதம் வேண்டுமென்றே இருக்கும். நினைத்ததை சாதித்தே தீர வேண்டும் என்ற ஆணவத்தோடு சில பேர் பிடிவாதமாக இருப்பார்கள். அதனால் யாருக்கு என்ன தீங்கு நேர்ந்தாலும் அதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. எப்போதாவது ஒரு நல்ல விஷயத்திற்காகவோ அல்லது நேர்மறை எண்ணங்களுக்காகவோ பிடிவாதத்தோடு இருந்தால் பரவாயில்லை.
உதாரணத்திற்கு, மகனோ மகளோ வயதாகியும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் அந்தத் தருணத்தில் அம்மாவோ அல்லது அப்பாவோ கட்டாயப்படுத்தி பிடிவாதத்தோடு திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் பரவாயில்லை. ஆனால், ஒரு சில பேர் எப்போதும் தன்னலனையே கருதி பிடிவாதத்தோடு அடுத்தவர்களைக் காயப்படுத்த நினைப்பார்கள். இது மிகவும் தவறான ஒன்றாகும்.
நீங்கள் நினைக்கலாம், பிடிவாதம் செய்து நினைத்ததை நிறைவேற்றலாம் என்று. நினைவில் வைத்து கொள்ளுங்கள், நாளாக நாளாக இந்த பிடிவாதத்திற்கு நீங்கள் அடிமையாகி விடுவீர்கள். ஒரு கட்டத்தில் நினைத்தது நடக்கவில்லை எனும்பட்சத்தில் உங்களால் அதைத் தாங்க இயலாமல் கடைசியில் மனநோய்க்குத் தள்ளப்படுவீர்கள். இந்தப் பிடிவாதத்திற்கு மருந்தே கிடையாது. யாராவது உங்களிடமிருக்கும் பிடிவாதத்தை சுட்டிகாட்டினால், அவர்களைக் கடிந்து கொள்ளாமல், நீங்கள்தான் தனக்குத்தானே இந்த ஆபத்தான பிடிவாதத்தை ஆரம்ப நிலையிலேயே தகர்த்தெறிய வேண்டும்.