வெட்டி வேர் அதிகம் வாசம் உடையதாகவும், மருத்துவத் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. நாணல் மற்றும் தர்ப்பை புற்களைப் போல இதுவும் நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். இதன் வேர் கொத்து கொத்தாக இருக்கும். இதனை பிடுங்கி எடுத்த பின், புல்லையும், வேரையும் வெட்டி விட்டு நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது.
மருத்துவ குணம்:
* இதிலிருந்து எடுக்கப்படும் தைலத்தை கை, கால் பிடிப்புகளுக்கு தடவி வர, நல்ல குணம் கிடைக்கும். காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும்.
* இதனை மணமூட்டியாக, தைலங்களிலும், குளியல் சோப்புகளிலும் பயன்படுத்துவது உண்டு.
* வெட்டி வேர் ஊறிய நீரைக் குடித்தால் காய்ச்சல், நீர் எரிச்சல், நீர்கடுப்பு, உடல் சோர்வு, சரும நோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவை குறையும்.
* கோடைக்காலத்தில் மண் பானை நீரினில் வெட்டி வேரினை இட்டு குடிப்பது வழக்கம். இதனால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
* முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்கவும் வெட்டி வேர் பயன்படும்.
தெய்வீக சக்தியுடன் பணத்தையும் ஈர்க்கும் வெட்டிவேர்: இந்த வேர் குளிர்ச்சி தரக்கூடியது. ஆன்மிகத்தில் பெரும் பங்கு வகிக்கக்கூடிய இந்த வெட்டி வேர் பணத்தை ஈர்க்கவும் செய்யும். பணத்தை ஈர்ப்பதற்கு பல்வேறு பொருட்கள் இருந்தாலும் வெட்டி வேர் நம்முடைய வீட்டில் இருந்தால் பணம் சரளமாகப் புழங்கும் என்கிற ரகசியமும் உண்டு.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையில் வைத்து அதனுள் வெட்டி வேரையும் ஒரு முழு எலுமிச்சை பழத்தைப் போட்டு வைத்தால் அதிலிருந்து வரும் ஆற்றலானது வீடு முழுவதும் பரவச் செய்து லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.
எலுமிச்சை பழத்தை மட்டும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றி விட்டு தண்ணீரை வாரம் ஒரு முறை மாற்றலாம். வெட்டி வேரை அப்படியே வைத்திருக்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பணம் புழங்கும் இடங்களில் இதுபோல் செய்து வைத்தால் கண் திருஷ்டிகளும், எதிர்மறை சக்திகளும் நீங்கி, தொழில் விருத்தி அடையும்.
மனம் மகிழ்ச்சி அடைய: ஒரு வெள்ளைத் துணியில் வெட்டி வேரை போட்டு முடிந்து ஆங்காங்கே ஒரு முடிச்சை வைத்து விட்டால் அந்த வெட்டி வேரில் இருந்து ஒரு லேசான வாசம் வீடு நிரம்ப இருக்கும். இதை நாம் சுவாசிக்கும்போது நமக்கு மனம் எப்போதும் லேசாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
மனம் அமைதி பெற: மன அழுத்தம் காரணமாக இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படும் சமயத்தில் தலையணைக்கு அடியில் ஒரு வெட்டி வேர் முடிச்சை வைத்துத் தூங்கலாம். இந்த வாசத்தை சுவாசித்துகொண்டே தூங்கும்போது மனம் அமைதியாகி நல்ல தூக்கத்தை தரும். மாதத்திற்கு ஒரு முறை பழைய வெட்டி வேரை எல்லாம் எடுத்து வீட்டிற்கு வெளியில் வைத்து ஒரு கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி அதை எரித்து விட வேண்டும். மீண்டும் புதிய வெட்டி வேரை மாற்றி வைக்கலாம்.
உடலில் உள்ள துர்நாற்றம் அகல: வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டி வேரை சிறிதளவு எடுத்து நன்கு கழுவி ஊறவைத்து அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால் சோர்வை நீக்கி உற்சகத்தை அளிக்கும். வெட்டி வேர் முடிச்சு ஒன்றை துணி அலமாரியில் போட்டு வைத்தால், நாம் அந்த ஆடைகளை அணியும் போது வாசம் வீசுவதுடன் புத்துணர்ச்சி ஆகவும் இருக்கும்.
வெட்டி வேர் தேவையற்ற நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றுவதால் வீட்டில் அடிக்கடி பிரச்னை இருப்பவர்கள் இதுபோல் செய்து பிரச்னை நீங்கப் பெறலாம்.