
வெட்டிவேரை, ‘புல்லில் புதைந்து கிடக்கும் புதையல்’ எனக் கூறலாம். வெட்டிவேரால் நிலம் வளமாகும். இதில் பல ரகங்கள் உள்ளன. இவை வேகமாக வளரும் தன்மை கொண்டவை. வெட்டிவேர் புல்லின் வேரானது 4 மீட்டர் வரை வளரக்கூடியது. வெட்டிவேரின் இலைகளை மாடுகளுக்கு தீவனமாகக் கொடுக்க, பால் அதிகம் கிடைக்கும்.
எப்படி தயாரிப்பது?
வெட்டிவேர் ஸ்கிரீனை வீட்டிலேயே கூட தயாரித்துக் கொள்ளலாம். இதனை பன்னீர் கலந்த தண்ணீரில் ஊற வைத்து எடுத்து, எத்தனை அடி உயரத்திற்கு வேண்டுமோ அந்த அளவிற்கு ஏற்ப அதனைக் கோர்த்து நன்கு காய வைத்து ஸ்கிரீனாக தயாரிக்க முடியும்.
வெட்டிவேர் திரைச்சீலைகளின் நன்மைகள்:
உடலை குளிர்விக்கும் தன்மை கொண்டது: வெட்டிவேர் திரைச் சீலைகள் கடுமையான வெயிலின் வெப்பத்தை தணிக்கக்கூடிய இயற்கையான ஒரு வழியாகும். இந்த திரைச்சீலைகள் வெட்டிவேர்களால் செய்யப்படுகின்றன. இந்த திரைச்சீலைகளை தண்ணீரில் நனைத்து உபயோகிக்கும்போது கோடை வெப்பத்தால் அவை ஆவி ஆவதன் மூலம் வீட்டின் வெப்பநிலையை குறைக்கும். வீட்டிற்குள் அதிக சூரிய ஒளி வருவதையும் தடுக்கும். இதனால் கோடைக் காலத்திலும் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். இது ஒரு இயற்கையான குளிரூட்டியாக செயல்படுகிறது.
அறையின் வெப்பத்தை குறைக்கிறது: வீட்டுக் கதவு மற்றும் ஜன்னல்களில் விதவிதமான ஸ்க்ரீன்களை பயன்படுத்துவதை விட, வீட்டையே குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் வெட்டிவேர் ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது. இவை அதிக மருத்துவ குணம் கொண்டவை. இது வீட்டையே குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதுடன், சுத்தமான காற்றையும் பரப்புகிறது. அதோடு, இயற்கை இன்சுலேட்டர்களாக செயல்பட்டு, வெப்ப ஊடுருவலைத் தடுத்து வீட்டை குளுமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
நீடித்து உழைக்கிறது: வெட்டிவேர் திரைச்சீலைகள் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவை. அழகியல் ரீதியாகவும் ஈர்ப்பானவையாக உள்ளன. இவை பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், வீட்டிற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தையும் கொடுக்கிறது. வெட்டிவேர் திரைச்சீலைகளை வீட்டில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் போடுவதன் மூலம் வீடும் விண்டேஜ் லுக்குடன் அழகாகக் காட்சியளிக்கும். இது பரப்பும் மெலிதான நறுமணம் நமக்குப் புத்துணர்ச்சியை ஊட்டும்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்றது: வெட்டிவேர் திரைச்சீலைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ஒரு இயற்கையான வழிமுறையாகும். இவை இயற்கையான பொருட்கள் மூலம் செய்யப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான தீங்கையும் விளைவிக்காது. வெட்டிவேர் திரைச்சீலைகள் பயன்படுத்துவது நம் சருமத்திற்கு மிகவும் நல்லது. சரும அரிப்பு போன்ற பிரச்னைகள் வராமல் இதன் குளுமையான மருத்துவ குணம் நிறைந்த காற்று உதவுகிறது.
வெட்டிவேர் திரைச்சீலைகளை உபயோகிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
* இந்த திரைச்சீலைகளில் இருந்து வெளிப்படும் வேர் தூசியானது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு தும்மலை ஏற்படுத்தும். எனவே, வெட்டிவேர் திரைச்சீலைகளை கையாளும்பொழுது தூசிகளை அடிக்கடி நீக்கி பராமரிப்பது நல்லது.
* சுட்டெரிக்கும் கோடைக் காலங்களில் அறையை குளுமையாக்க ஏசி போடுவதும், அதன் கட்டணங்கள் நம்மை தலைசுற்ற வைப்பதும் தேவையற்றது. இயற்கையானதும், மலிவு விலையில் அழகாகவும் இருக்கும் இந்த வெட்டிவேர் திரைச்சீலைகளைப் பயன்படுத்தி நலம் பெறலாம்.