
+2 முடித்து விட்டு அடுத்த என்ன படிக்கலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இன்று ஏராளமான படிப்புகள் உள்ளன. எந்தப் படிப்பைத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கு தெளிவான விடையை அளிக்க ஆசிரியர்கள் உதவுவார்கள். இருப்பினும் ஒரே விதமான படிப்பில் மாணவர்கள் சேர்வதைக் காட்டிலும், தங்களுக்கு விருப்பமான பாடத்திலோ அல்லது வருங்காலத்தில் எந்தப் பாடத்திற்கு நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளனவோ அதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். அவ்வகையில் அரசியல் அறிவியல் பட்டப் படிப்பில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.
மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறை படிப்புகள் என இன்று எண்ணற்ற படிப்புகள் வந்து விட்டன. இதில் மிகவும் முக்கியமானது தான் அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு. பொதுவாக இந்தப் பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு தான்.
ஆனால், வருங்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தப் படிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் என்றதும் பலரும் இந்தப் படிப்பை ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் வெற்றி பெறவும் அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு பெரிதும் துணைபுரிகிறது.
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் 25 மதிப்பெண்களுக்கு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதோடு முதன்மைத் தேர்வில் அரசியல் அறிவியலைத் தேர்ந்தெடுத்தால் பொது அறிவு இரண்டாவது தாளில் 250 மதிப்பெண்களும், பொது கட்டுரை பிரிவில் 250 மதிப்பெண்களும் இதிலிருந்து தான் கேட்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி நேர்காணலில் கூட அரசியல் அறிவியல் சார்ந்த கேள்விகள் அதிகமாக கேட்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% கேள்விகள் அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து தான் கேட்கப்படுகின்றன. பட்டப்படிப்பு முடித்த பிறகு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி செய்பவர்களுக்கு அரசியல் அறிவியல் பட்டப் படிப்பு சிறந்த தேர்வாக இருக்கும்.
அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கும் செல்லலாம்.
இந்தப் படிப்பை ஆங்கில வழிக் கல்வியில் படித்தால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் வேலை கிடைக்கும். அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் வேலைக்குச் செல்ல விரும்புபவர்களும் அரசியல் அறிவியல் பட்டப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே சமூக அக்கறையுள்ள பலரது விருப்பம். இளைஞர்களுக்கும் இதில் விருப்பம் இருந்தால் அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மிகச் சிறந்த தேர்வாக அமையும். அதோடு பொது வாழ்வில் ஆர்வமுள்ள மாணவர்களும் அரசியல் அறிவியல் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.
சர்வதேச அமைப்புகளான உலக வங்கி மற்றும் ஐநா சபையில் பணியாற்ற அரசியல் அறிவியல் படிப்பு தான் தேவை.
எண்ணற்ற அரசியல் கட்சிகளின் தரவுகளைத் துல்லியமாக தொகுத்து வழங்கும் வேலைகளில் ஈடுபடுவோர், தேர்தல் நேரத்தில் கருத்துக் கணிப்புகளை வெளியிடும் பணிகளில் ஈடுபடுவோரும் அரசியல் அறிவியல் பாடத்தைப் படித்தவர்கள் தான். என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டியது நம் கடமை. வளமான இந்தியாவிற்கு மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் மட்டுமின்றி அரசியல் அறிவியல் ஞானம் கொண்டோரும் தேவைப்படுகின்றனர்.