

இந்தியாவின் உள்ள முன்னணி ஐஐடி நிறுவனங்களில் சென்னை ஐஐடி-யும் ஒன்று. ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது பொது மக்களுக்குத் தேவையான வகையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி வருங்கால சந்ததியினருக்கு உதவும் விதமாக பல்வேறு புதிய படிப்புகளும் சென்னை ஐஐடியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் தற்போது கணிதத்துடன் சங்கீதத்தை இணைக்கும் ஒரு புதிய படிப்பை சென்னை ஐஐடி விரைவில் தொடங்கவுள்ளது. இது குறித்த அறிவிப்பை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வெளியிட்டுள்ளார்.
கல்விப் புரட்சியில் சென்னை ஐஐடி பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது. அவ்வப்போது பல்வேறு புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு கூட கணிதத்தையும், கணினி அறிவியல் படிப்பையும் இணைக்கும் வகையில் பி.எஸ்.சி-பி.எட். (BSc.,-B.Ed.,) என்ற புதிய படிப்பை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியது. இந்தப் படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய படிப்பை அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது சென்னை ஐஐடி.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், “கர்நாடக இசையில் கணிதத்தின் பங்கு அதிக அளவு இருப்பதால் தான், சங்கீதத்தை கேட்க கேட்க இன்றுவரை நமக்கு சலிப்பு தட்டாமல் இருக்கிறது. இந்நிலையில் சங்கீதத்தை கணிதத்தோடு இணைக்கும் முயற்சியில், சென்னை ஐஐடி இறங்கியுள்ளது. இதற்காக கணிதத்துடன் சங்கீதத்தை இணைக்கும் புதிய பாடப் பிரிவை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
சங்கீதம் மற்றும் கணிதத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட மாணவர்கள் இந்தப் படிப்பை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும்” என அவர் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி கொண்டு வரவுள்ள இந்தப் புதிய பாடப்பிரிவு, கல்வியுலகில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. அதோடு கணிதத்தை விரும்புபவர்களுக்கும், கணிதம் கடினம் என நினைக்கும் பலருக்கும் அதனை சங்கீதத்துடன் இணைத்து படித்தால் எப்படி இருக்கும் என்று ஆவலும் அதிகரித்துள்ளது.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த கல்வியாண்டில் கணிதத்துடன் இணைந்த சங்கீதப் பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.