
முன்பு போல் தற்போது உற்றார் உறவினர் வீடுகளுக்கு செல்வது பெரும்பாலும் குறைந்து விட்டாலும் பெரியவர்களை பார்க்கவும், பிறந்த குழந்தையைப் பார்க்கவும் அல்லது உறவுகளுடன் பொழுதை கழிக்கவும் அவ்வப்போது செல்ல வேண்டியது அவசியமாகிறது.
அவ்வாறு செல்லும் போது சில விஷயங்களை நம் நடத்தையிலும் பேச்சிலும் கடை பிடிக்க வேண்டும். அப்போதுதான் அந்த உறவு நீடிக்கும். இல்லையெனில் சிறு சிறு மனத்தடங்கல்கள் வருத்தம் தரும். நாம் எந்த வீட்டுக்கு விருந்தினராக சென்றாலும் நாம் திரும்பியப் பின்னும் அவர்கள் நம்மை அன்புடன் நினைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே நமது நடத்தை சரியாக இருக்கிறது என்று பொருள்.
இனி சில டிப்ஸ் இங்கு..
குழந்தையைப் பார்க்க செல்லும் போது:
நமக்கு பிடித்ததை பரிசுப் பொருளாக வாங்கிச் செல்லாமல் அவர்களுக்கு உபயோகமுள்ள ஒரு பொருளாக இருப்பது நல்லது. இல்லையெனில் எவ்வளவு விலை மதிப்பு மிக்கதாக வாங்கி தந்தாலும் அதில் பிரயோஜனம் இல்லை.
குழந்தையை பார்க்கும் போது 'அம்மா போல்', 'அப்பா போல்' என்று எந்த கருத்தையும் முன் வைக்காமல் இருப்பதே நல்லது . முக்கியமாக அவர்கள் வீட்டு சொந்தங்களுடன் ஒப்பிடுவது மிகவும் தவறு. இது வீண் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும்.
தற்போது உள்ள ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் குழந்தையை பிறர் கைகளில் தருவதற்கு தயங்குவார்கள். அந்த நேரத்தில் நாமாக சென்று குழந்தையை தூக்குதல் முத்தம் தருதல் போன்றவைகள் தவிர்க்க வேண்டும்.
குழந்தையை பார்ப்பதற்கு ஒரு சில நிமிடங்கள் மட்டும் செலவழித்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே வருவது நல்லது. அங்கேயே அமர்ந்து நமது வீட்டுக் கதைகள் சொந்த கதை, சோக கதை என்று பேசிக் கொண்டிருப்பது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
செல்வதற்கு முன், தாயும் குழந்தையும் எந்த நேரம் விழித்திருக்கும், அவர்களுக்கு தொந்தரவு இல்லையே, என்று கேட்டறிந்துச் செல்வது மிகவும் நல்லது. ஏனெனில் பிரசவித்த இளம் பெண்ணும் குழந்தைக்கும் ஓய்வு அவசியம்; அது பாதிக்கக் கூடாது.
பெரியவர்களை காண செல்லும் போது:
பெரியவர்களின் உடல்நிலை தெரிந்து அதற்கேற்றார் போல பழங்களும் , பிஸ்கட்டுகளும், காரங்களும் வாங்கிக் கொண்டு போகலாம்.
பெரியவர்களுக்கு என்று தனி அறை ஒதுக்கி இருக்கும் வீடுகளில் வீட்டினரின் அனுமதி பெற்ற பின்னே அவர்களை காணச் செல்ல வேண்டும்.
பெரியவர்களுக்கு என்று இருக்கும் தனிப்பட்ட ஆசைகளை நம்மிடம் சொல்வது இயற்கையானது. ஆனால் அந்த வீட்டில் இருப்பவர்களின் அனுமதியுடன் மட்டுமே அதை நிறைவேற்ற வேண்டும்.
பெரியவர்களுக்கும் அவர் உறவினருக்கும் உள்ள உறவு கெடாத வகையில் நாகரீகமாக பேசத் தெரிந்து கொள்ள வேண்டும். (உதாரணமாக இன்னும் உங்கள் மகன் அல்லது தந்தை அதே பிடிவாத குணத்துடன் தான் இருக்கிறாரா என்று கேட்பது போன்றவை..)
நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வசதிகளோடு அவர்கள் வீட்டு வசதிகளை ஒப்பிட்டு பேசாமல் இருப்பது நல்லது.
என்றோ நடந்த நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசி அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பது முக்கியமானது.
இவற்றுடன் பொதுவாக கவனிக்க வேண்டிய விஷயங்களாக திறந்திருக்கும் கதவை முன்னறிவிப்பின்றி திறந்து செல்வது, அழைப்பு மணியை விடாமல் அடிப்பது போன்ற சின்ன சின்ன விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது உறவுகள் நிலைக்க உதவும்!