இந்த உலகில் பிறந்த அனைத்து மக்களுமே, 'தான், தனது' என்கிற குறுகிய வட்டத்திற்குள் தங்களை அடைத்துக்கொள்ளாமல் பிறரைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்து அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு மணி நேரம் மட்டுமே தன்னார்வ தொண்டு செய்வதால் மனிதர்களுக்கு உடல், மன, உளவியல் மற்றும் சமூக நலன்கள் ஏராளமாகக் கிட்டும். சமூக சேவை செய்யும் மனிதர்களுக்கு எளிதில் வயதாவது இல்லை. அவர்கள் இளமையுடன் இருக்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தன்னார்வத் தொண்டு செய்வதால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள்: பிறருடைய நலனில் அக்கறை கொண்டு தன்னார்வத் தொண்டு செய்ய ஒரு மனிதர் முதலில் தான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சக மனிதனைப் பற்றிய நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் பிறருக்குத் தொண்டு செய்ய முடியும். தன்னார்வத் தொண்டு என்பது உடல் உழைப்பு முதல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தல் வரை பல்வேறு உடல் பகுதிகளை உள்ளடக்கியது.
பொது இடங்களை சுத்தம் செய்வது அல்லது வயதான, நலிவுற்ற முதியவர்களுக்கு உதவி செய்வது, அவர்களுக்கான பொருட்களை வாங்கித் தருவது, கடைகளுக்குச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மேம்பட்ட இருதய ஆரோக்கியம், வலுவான தசைகள் மற்றும் எலும்புகள், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கியமான உடல் அமைப்பு உண்டாகும். பிறருக்கு உதவும்போது ஒரு மனிதனின் உடலில் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய என்டார்ஃபின்கள் வெளியிடப்படும். இதனால் அவர் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
உளவியல் நன்மைகள்: தன்னார்வத் தொண்டு மனச்சோர்வு மற்றும் பதற்றத்தின் அறிகுறிகளை கணிசமாகக் குறைக்கிறது. மன அழுத்தம் இல்லாமல் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வைக்கிறது. பிறரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக உணரும்போது அவர்களின் தன்னம்பிக்கை உயர்கிறது. சுயமரியாதை மற்றும் உணர்ச்சி நல்வாழ்வும் அதிகரிக்கிறது.
சமூக நன்மைகள்: தன்னார்வத் தொண்டு செய்யும் நபர்கள் தங்களைப் போல பிறருடன் சேர்ந்து அந்த செயல்களில் ஈடுபடும்போது அவர்களுக்குள் ஒரு இணக்கமான நட்பு வட்டம் உருவாகிறது. பலதரப்பட்ட மக்களுடன் நேரடியாக பழகும்போதும் பணியாற்றும்போதும் பிறருடைய மதிப்பையும் மரியாதையும் பெறுகிறார்கள். சமூகத்தின் மீதான பொறுப்புணர்வும் வளர்கிறது. அதேசமயம் பிறருக்கும் அவர்கள் நல்ல முன்மாதிரியாக விளங்குகிறார்கள்.
ஆயுட்காலம் நீட்டிக்கப்படுதல்: மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்குச் செய்ய வேண்டும். வார ஓய்வு நாட்களில் தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் முதியவர்களுக்கு அல்லது முடியாமல் இருக்கும் நபர்களுக்கு உடல் ரீதியாக உதவிகளைச் செய்யலாம். ஓய்வு பெற்ற முதியவர்களும் பிறருக்கு தன்னார்வத் தொண்டு செய்யலாம்.
இது அவர்களது மன நலனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கு ஒரு குறிக்கோளையும் தருகிறது. அவர்கள் பிறருடன் உணர்ச்சிபூர்வமான உரையாடல்களில் ஈடுபடும்போது உளவியல் ரீதியாக அவர்கள் வாழ்க்கை மேல் நேர்மறையான கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதனால் அவர்களின் ஆயுட்காலத்தை நீட்டித்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது.
நீடித்த இளமை: நமது உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்கள் நன்றாக செயலாற்ற நமது மனநிலையும், நடத்தையும் ஒரு காரணமாக அமைகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறப்பான நேர்மறையான கண்ணோட்டமும், திருப்தியும், மகிழ்ச்சியும் உள்ளவர்களின் உடலுக்கு விரைவில் முதுமை வந்து சேராது. அவர்கள் நீடித்த இளமையுடன் இருப்பார்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.