
தற்காலத்தில் மின்சாரம் நமது வாழ்வில் மிகவும் அவசியமான ஒரு தேவையாக இருக்கிறது. மின்சாரத்தை உற்பத்தி செய்வது மிகவும் சவாலான விஷயமாகும். நாம் சேமிக்கும் மின்சாரம் என்பது உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு சமம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மின்சார செலவு என்பது கணிசமாக உள்ளது. ஏனெனில், இன்று அனைத்து உபகரணங்களுமே மின்சாரத்தை சார்ந்து உள்ளன. மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வீடுகளில் டியூப் லைட் அனைத்து அறைகளிலும் பொருத்தப்படுகின்றன. கூடவே ஒவ்வொரு அறையிலும் எல்ஈடி பல்புகளைப் பொருத்தி வையுங்கள். தற்காலத்தில் ஒன்பது வாட்ஸ் பல்புகள் கிடைக்கின்றன. அதிக வெளிச்சம் தேவையில்லாத சமயங்களில் எல்ஈடி பல்புகளை எரிய விடலாம். இதனால் கணிசமாக மின்சாரம் மிச்சமாகும்.
பல வீடுகளில் 15 லிட்டர் அல்லது 25 லிட்டர் வாட்டர் ஹீட்டர்களைப் பொருத்திப் பயன்படுத்துகிறார்கள். இதை காலையில் ஆன் செய்து வீட்டிலுள்ள அனைவரும் குளித்து முடித்த பின்பு ஆஃப் செய்வது வழக்கமாக உள்ளது. இதனால் அதிக மின்சாரம் செலவாகும். வீட்டில் நிறைய நபர்கள் இருந்தால் இத்தகைய வாட்டர் ஹீட்டர்கள் பயனுள்ளதாக இருக்கும். மூன்று அல்லது நான்கு நபர்கள் கொண்ட ஒரு வீட்டிற்கு இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டரே போதும். எப்போது தேவையோ அப்போது ஆன் செய்து உடனே ஆஃப் செய்து கொள்ளலாம். இதனால் ஒவ்வொரு மாதமும் கணிசமாக மின்சாரம் மிச்சமாகும்.
வெளியூர்களுக்கு குடும்பத்தோடு செல்லும்போதும் பிரிட்ஜ் இயங்கிக்கொண்டே இருக்கும். இரண்டு நாட்களுக்கு மேல் குடும்பத்தோடு வெளியூர் பயணங்கள் மேற்கொண்டால் பிரிட்ஜை நிறுத்திவிட்டுச் செல்லலாம். இதனால் கணிசமான மின்சாரம் மிச்சமாகும்.
பலர் இரவு நேரங்களில் ஏசி மற்றும் மின்விசிறி இரண்டையும் இயக்கிவிட்டுத் தூங்குபவர்களாக இருக்கிறார்கள். இதனால் மின்சாரம் அதிகமாக செலவாவது மட்டுமின்றி, உடல் நலனும் பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் தேவைக்கேற்ப ஃபேன் அல்லது ஏசி இதில் ஏதாவது ஒன்றை மட்டும் இயக்கினால் போதுமானது. இதனால் கணிசமாக மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
அதிகமான நட்சத்திரக் குறியீடு (Star Rating) கொண்ட ஏசியை பயன்படுத்தினால் குறைந்த மின்சாரம் செலவாகும். எனவே, அதிக நட்சத்திரக் குறியீடு கொண்ட ஏசிக்களை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. மேலும், ஏசியை 24 அல்லது 25 டிகிரியில் வைத்துப் பயன்படுத்துவதைப் பின்பற்றலாம்.
பல வீடுகளில் யாருமே இல்லாத சமயங்களில் கூட தொலைக்காட்சி மட்டும் இயங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. கூடுமானவரை இதைத் தவிர்க்க வேண்டும்.
ஹாலை விட்டோ அல்லது அறையை விட்டோ வெளியேறும்போது மின் சாதனங்களை உடனே நிறுத்திவிடப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். யாருமே இல்லாத இடத்தில் எதற்காக மின்விளக்கு எரிய வேண்டும். மின்விசிறி எதற்காகச் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இதன் மூலம் கணிசமான மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
மின் விசிறிகளில் அலுமினிய வயர் அல்லது காப்பர் வயர் கொண்டு தயாரிக்கப்படும் மின்விசிறிகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதில் அலுமினிய வயர் கொண்ட மின்விசிறியை விட, காப்பர் வயர் கொண்ட மின்விசிறிகள் குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டு இயங்குகின்றன. எனவே, கூடுமானவரை விலை சற்று கூடுதலாக இருந்தாலும் காப்பர் வயர் கொண்டு தயாரிக்கப்பட்ட மின் விசிறிகளை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.
பகல் நேரங்களில் முடிந்த மட்டும் மின் விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஜன்னலைத் திறந்து வைத்தால் வெளிச்சம் கிடைக்கும். முடிந்தவர்கள் இதைப் பின்பற்றி மின்சாரத்தை சேமிக்கலாம்.
தற்காலத்தில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனங்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. ஒருமுறை ஒரு கணிசமான தொகையை செலவிட்டு சோலார் சக்தியை (Solar Energy) பொருத்திவிட்டால் மாதாமாதம் கணிசமாக மின்சாரத்திற்காக செலவாகும் தொகையை சேமிக்கலாம். இயற்கையாகக் கிடைக்கும் சூரிய சக்தியை பயன்படுத்துவது நல்லதுதானே!
மேலே கூறியவை சில வழிகள்தான். மின்சாரத்தை கணிசமாக சேமிக்க இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளன. அத்தனை வழிகளையும் தெரிந்துகொண்டு பின்பற்றி மின்சாரத்தை சேமிக்கலாமே!